Thursday, April 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!

ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!

-

ஸ்மார்ட் அட்டை எப்போது கிடைக்குமெனத் தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தின் சரிபாதிக் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டையும் கிடையாது, ரேஷன் பொருட்களும் கிடையாது என்ற அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கிறது, பா.ஜ.க.வின் புரோக்கர் எடப்பாடி அரசு. தமிழகத்தில் இனி யாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என வரையறுக்கும் நிபந்தனைகளைக் கவனித்துப் பாருங்கள், நாம் சொல்வது உண்மை என்பது தெரியவரும்.

மாதமொன்றுக்கு ரூ.8,300 வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற நிபந்தனைப்படி பார்த்தால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தினக்கூலித் தொழிலாளர் குடும்பங்கள்கூட இனி வெளிச்சந்தையில்தான் அரிசி, பருப்பை வாங்க வேண்டியிருக்கும்.

மாநகராட்சி ஊழியர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற நிபந்தனை தூய்மைப் பணியாளர் குடும்பங்களையும் ரேஷன் கடையிலிருந்து விரட்டியடிக்கிறது. தொழில் வரி செலுத்துவோருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற நிபந்தனை சிறு நகரங்களில் மளிகைக் கடை, டீக்கடை நடத்தி வரும் மிகச் சாதாரண வணிகக் குடும்பங்களைப் பொது விநியோக முறையிலிருந்து விலக்கி வைக்கிறது.

தமிழகத்தில் நிலவும் வறட்சி, சாகுபடி பொய்த்துப் போன துயரம் காரணமாக இன்று கிராமப்புறங்களில் கூலி விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நிலமுள்ள விவசாயக் குடும்பங்களுக்கும் ரேஷனில் விநியோகிக்கப்படும் விலையில்லா அரிசிதான் கைகொடுத்து உதவுகிறது. மேலும், நாளுக்கு நாள் விவசாயமும், அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் நசிவடைந்துவரும் வேளையில் ஐந்து ஏக்கருக்கு மேலுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என விதிக்கப்படும் நிபந்தனை இரக்கமேயற்ற அநீதி.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்தும் உத்தரவை அரசிதழில் வெளியிட்டுவிட்டு, வதந்திகளை நம்பாதீர்கள் எனத் துணிந்து புளுகியிருக்கிறார், உணவு அமைச்சர் காமராஜ்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்ட கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ரேஷன் கடையில் எந்த மாதமாவது அரிசியும் பருப்பும் முழுமையாகக் கிடைத்திருக்கிறதா?

உளுத்தம் பருப்பை நிறுத்தி வெகுநாளாகிவிட்டது. துவரம் பருப்பும், பாமாயிலும் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. அரிசிக்குப் பதிலாக கோதுமையை வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது ரேஷன் கடையை இழுத்துமூடும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்கள்.

ஜி.எஸ்.டி.யால், எந்தவொரு திட்டத்திற்கு நிதி வேண்டுமென்றாலும் மைய அரசின் கருணையையும் ஒப்புதலையும் பெற வேண்டிய இழிநிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்ட பிறகு, மைய அரசை மீறி அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அடிப்படையே தகர்ந்துவிட்டது.

ரேஷன் அட்டைகளை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமையில்லாத பிரிவினர் எனப் பிரிப்பதன் வழியாகத் தகுதிமிக்க ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது உத்தரவாதப்படும் என்ற வாதிடுகிறது, பா.ஜ.க. இந்தப் பாகுபாடு, ஓட்டகம் கூடாரத்திற்குள் மூக்கை நுழைத்த கதைக்கு ஒப்பானது.

சமையல் எரிவாயு மானியம் பெறுவதை வங்கிக் கணக்கோடு இணைத்தபோது, அது கள்ள சிலிண்டர் விநியோகத்தைத் தடுக்கும் திட்டமல்ல, மக்களைச் சந்தை விலையில் எரிவாயு உருளைகளை வாங்குவதற்குப் பழக்கப்படுத்தும் திட்டம் எனக் கூறினோம். இதோ இனி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களும் சந்தை விலையில்தான் எரிவாயு உருளைகளை வாங்க வேண்டும் என எதிர்ப்பேயின்றி அறிவித்துவிட்டது, மோடி அரசு. ரேஷன் பொருட்கள் விநியோகத்திலும் இத்தகைய சதித்தனங்கள் படிப்படியாக அரங்கேற்றப்படும்.

ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வங்கிக் கட்டண உயர்வு, எரிவாயு மானியம் ரத்து ஆகிய நடவடிக்கைகளின் வழியாக, இதுவொரு வழிப்பறிக் கொள்ளைக்கூட்ட அரசு எனக் காட்டிவிட்டார், மோடி. எஜமானன் எவ்வழியோ அவ்வழி போகிறது பினாமி எடப்பாடி அரசு.

 -குப்பன்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல்
    வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி