Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் !

பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் !

-

காவிரிப் பிரச்சினையாலும் மணல் கொள்ளையாலும் கச்சா எண்ணெய், எரிவாயு துரப்பணவுத் திட்டங்களாலும் அழிவை நோக்கித் தள்ளப்படும் தமிழத்தின் நெற்களஞ்சியத்தின் மீது பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்ற அணுகுண்டை வீசியிருக்கிறது, எடப்பாடி அரசு. தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் வேளையில், அவர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதிக்கொண்டு, நாகை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கும் திமிர்த்தனம் சகிக்கவொண்ணாதது.

விவசாயத்தை அழித்துவிட்டு பணத்தையா சாப்பிட முடியும்? -ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நாட்டின் வளர்ச்சியாக நியாயப்படுத்தும் ஆளுங்கும்பலின் கருத்தை கேலிசெய்யும் விதத்தில் வாழை இலையில் காசு, பணத்தை வைத்துச்சாப்பிடும் போராட்டத்தை நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்கள்.

கிராமமும் இருக்கும், தொழிற்சாலையும் இருக்கும் என வழமையான முறையில் இம்மண்டலத்தைப் புரிந்துகொள்ளக் கூடாது. ஒரு பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்பது ஏறத்தாழ 250 சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பாகும். இம்மண்டலம் அமைய நாம் அனுமதித்தால், விவசாயம் அழிந்து போவது மட்டுமல்ல; அக்கிராம மக்கள் ஊரையே காலிசெய்து விட்டு அகதிகளாக வெளியேறும் நிலைகூட ஏற்படக் கூடும்.

இது மிகைப்படுத்தப்பட்ட ஊகமல்ல. பத்து பதினைந்து ஆடி ஆழத்தில் சுவையான நீர் கிடைத்துவந்த கதிராமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று 150 அடி தோண்டினாலும் பருகுவதற்கோ, பயிருக்கோ பயன்படுத்த முடியாத எண்ணெய் கலந்த நீர்தான் கிடைப்பதாகக் கூறுகிறார்கள், அக்கிராம மக்கள். 11 எண்ணெய்க் கிணறுகளைக் கொண்ட கதிராமங்கலத்தின் நிலையே இதுதான் என்றால், பத்துக்கணக்கான பெரும் தொழிற்சாலைகள் அமையவுள்ள நாகை, கடலூர் மாவட்டக் கிராமங்களின் கதி என்னவாகக் கூடும்?

”அம்மண்டலத்தில் துரப்பணவுப் பணிகள் எதுவும் நடைபெறாது. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் ஆலைகள் மட்டுமே அமையப் போவதாக” -த் தமிழக அரசும் மத்திய பா.ஜ.க. அரசும் விளக்கமளிக்கின்றன. ”மண்ணெண்ணெய்தான் எடுக்கப் போவதாகக் கூறி கதிராமங்கலத்திற்கு நுழைந்த ஓ.என்.ஜி.சி. இப்பொழுது மீத்தேனைத் தேடிக் கொண்டிருப்பதாக” அப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள். யோக்கியனைப் போலப் பேசும் பா.ஜ.க.வைத் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.

துரப்பணவு தொடங்கி சுத்திகரிப்பது வரையிலான எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்காமல் செய்துமுடிக்க முடியாது. டெல்டா மாவட்டங்களோ கடல் மட்டத்திலிருந்து வெறும் ஒரு மீட்டர் உயரத்தில்தான் அமைந்திருக்கின்றன.

கடந்த நூறாண்டுகளில் டெல்டாவில்  வண்டல் மண் போதிய அளவில் படியாததாலும், பருவ நிலை மாறுபாடுகளாலும், அம்மாவட்டப் பகுதிகள் பூமிக்குள் இறங்கத் தொடங்கி, கடல் நீர் உள்ளே புகும் அபாயத்தை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கடலையொட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் ஏற்கெனவே நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.

இப்படிபட்டதொரு நிலையில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கும் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைப் புல் பூண்டுகூட முளைக்க இலாயக்கற்ற உவர் நிலமாக மாற்றும் சதி தவிர வேறில்லை. காவிரியில் தனது உரிமையைக் கோரும், டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரிவரும் தமிழக மக்களைச் சீண்டிப் பார்க்கும் மாபெரும் அநீதி இது.

‘சோழ நாடு சோறுடைத்து‘ என்ற வரலாற்றுப் பெருமை கொண்டது காவிரி டெல்டா பகுதி. இப்பகுதியின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது நெல் விவசாயம்தான். தமிழர்களின் இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கழிப்பறை காகிதம் போலக் கசக்கி எறியத் துணிந்திருக்கிறது, பாரதப் பண்பாடு பேசும் பா.ஜ.க.

விவசாயிகளின் பூமியை கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காடாக மாற்றியே தீருவது என்ற வெறியோடு செயல்படுகிறது, அக்கட்சி. நீட் தேர்வு, இந்தி  சமஸ்கிருதத் திணிப்பு என்ற வரிசையில் தமிழர்களின் உரிமைக்கும் சுயமரி யாதைக்கும் எதிராகப் பார்ப்பன பாசிசக் கும்பல் நடத்திவரும் போரில் மற்றுமொரு முனைதான் இப்பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி