சுதந்திரம் – என்பதன் பொருள் என்ன? நாடு முழுவதும், கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆனால் உத்திரப் பிரதேசத்தில் ஒரு பிரிவினருக்கு மட்டும் தேசபக்தியை அவ்வாறு வெளிக் காட்டினால் மட்டும் போதாது, அதனை வீடியோ எடுத்து அரசிற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நாட்டில் வேறு யாருக்கு இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்? ஆம், அது முசுலீம்களுக்குத்தான்.

சுதந்திர தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, யோகி அரசு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் மதரஸாக்களில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடி அதனை வீடியோப் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ”சிறப்பான கொண்டாட்டங்களை வருங்காலங்களில் உறுதி செய்து கொள்ளவே” வீடியோ பதிவு தேவை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு செய்யாத மதரஸாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது அந்த சுற்றறிக்கை. இது தவிர, பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அந்தந்த மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் மதரசாக்களுக்கு வாய்வழி உத்தரவு போட்டுள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களை வீடியோ பதிவு செய்யாத மதரசாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் பல்தேவ் அவுலக் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ”டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜாமியா அரபியா ஹுசைனியா மதரசாவின் முதல்வர் ஹஃபீஸ் இர்ஃபான் அஹமது, ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ”இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நாங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டும், அரசு உத்தரவினால் நாங்கள் இதனைக் கொண்டாடவில்லை. எப்போதும் கொண்டாடுவது போல இந்த ஆண்டும் நாங்கள் கொண்டாடுகிறோம். தயவு செய்து எங்களது தேசப்பற்றை கேள்விக்குள்ளாக்காதீர்கள். எங்கள் தாய் நாட்டின் மீதான பற்றை நாங்கள் எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா, என்ன?” என்று கேட்டுள்ளார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, கடந்த 1999-ல் ஆட்சியில் அமர்வத்ற்கு முன்பு வரை இன்றைய ’தேஷபக்தாள்’களான ஆர்.எஸ்.எஸ். கும்பல் தங்களது மாநாட்டிலோ, தங்களது நாக்பூர் தலைமையகத்திலோ, மூவர்ணக் கொடியை ஏற்றியது கிடையாது. அவ்வளவு ’தேஷ்பக்தி’ கொண்ட கும்பல் தான் இன்று முசுலீம்களின் தேசபக்தியை பரிசோதிக்கிறதாம்.
யோகியின் இந்த நடவடிக்கை, முழுக்க முழுக்க முசுலீம்களை தேசபக்தியற்றவர்களாகச் சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் நிகழ்ச்சி நிரலில் ஒன்று என்பது தான் யதார்த்தமான உண்மை. முசுலீம்களுக்கான சுதந்திரம் தான் சுதந்திர தினத்தன்று சந்தி சிரித்தது என்று பார்த்தால், அதே தினத்தில் திரிபுரா மாநில முதல்வரின் சுதந்திரமும் சந்தி சிரித்திருக்கிறது.
திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சர்க்கார். இவர் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி தமது மாநில மக்களுக்கு மத்தியில் பேசவிருக்கும் உரையை நேரலையில் ஒலி மற்றும் ஒளிபரப்புவது அனைத்திந்திய வானொலி நிலையம் மற்றும் தூர்தர்சனின் கடமையாகும். அதற்கு முன்னர், முதல்வர் பேசவிருக்கும் உரையை வாங்கி அதனை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியது அதனை இயக்கும் ’பிரச்சார் பாரதி’யின் பொறுப்பு.
சர்க்காரின் உரையை வாங்கிப் பரிசீலித்த ’பிரச்சார் பாரதி’, சுதந்திர தினத்தின் புனிதத்தையும், தனிச்சிறப்பையும், சர்க்காரின் உரை பாதிக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறி சுதந்திர தின நிகழ்வுகளில் முதல்வரின் உரையை நேரலை செய்ய மறுத்து விட்டது. அந்த பேச்சை மறுவடிவம் செய்தால் தான் அதனை நேரலை செய்ய முடியும் என்றும் தனது மின்னஞ்சலில் பதிலளித்துள்ளது.

சர்க்கார் பேசிவிருந்த சுதந்திர தின உரையில் ”பசுப் பாதுகாவலர்கள் பல்வேறு இடங்களில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள், அது கண்டிக்கத்தக்கது” என்ற வரிகள்தான் பிரச்சார் பாரதிக்குக் குடைச்சலாக இருந்திருக்கிறது.
மோடி ஆட்சியில் அமர்ந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3 அன்று ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தலைவர் மோகன் பாகவத் பேசிய மதவெறிப் பேச்சை துளி பிசிறு கூட தட்டாமல் நேரலையில் தூர்தர்சனில் ஒளிபரப்பியது பிரச்சார் பாரதி.
காங்கிரசு ஆட்சியிலிருந்த காலம் தொட்டே ’பிரச்சார் பாரதி’, ஆர்.எஸ்.எஸ். கிரிமினல் கும்பலால் நிறைக்கப்பட்டு, ஹிந்துத்துவப் பண்பாட்டையே மக்கள் மத்தியில் விதைத்து வந்தது. தற்போது மோடியின் ஆட்சி எனில், ஆர்.எஸ்.எஸ்.-ன் வாலான ’பிரச்சார் பாரதிக்கு’ சொல்லித்தரவா வேண்டும் ?
இந்திய சுதந்திர தினத்தில் முத்தாய்ப்பாக நிகழ்த்தப்பட்ட இந்த இரு நிகழ்வுகளும், சுதந்திரம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது அல்லவா? ஆம், அது தான் இந்திய சுதந்திரம். பார்ப்பனியத்திற்கும், பாசிசத்திற்கும் நாடெங்கும் கோலோச்சுவதற்கான சுதந்திரம். மற்றொரு புறத்தில், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு இந்த நாட்டை அள்ளிக் கொடுப்பதற்கான சுதந்திரம். ஆகவே இதனை நாம் ’போலி சுதந்திரம்’ என்கிறோம்.
மேலும் படிக்க:
- On I-Day, UP Madrassas Told to Record Events; DD, AIR Censor Tripura CM’s Speech on Gau Rakshaks
- Doordarshan, AIR blacked out my Independence Day speech, told me reshape it: Tripura CM Manik Sarkar
______________________________________
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி