Wednesday, April 16, 2025
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?

தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?

-

மிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கருதப்படும் காவிரி டெல்டா (வடிநிலம்) பிராந்தியமே சுருங்கத் தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் மென்மேலும் தரிசு நிலங்களாகச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வினை மேற்கோள் காட்டி, தி இந்து ஆங்கில நாளேட்டில் (ஜுலை 15, 2017) பத்திரிகையாளர் வித்யா வெங்கட் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு மிகப்பெரும் சூழலியல் பேரழிவின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருப்பதை இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

காவிரி டெல்டாவில் நிகழ்ந்து வரும் சூழலியல் சீர்கேடு குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜ்

நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போதே, கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் பிராந்தியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற பிரச்சாரத்தைப் பொய்ப்பிக்கும் இக்கட்டுரையின் சில பகுதிகளைச் சுருக்கிக் கொடுத்திருக்கிறோம்.

2014 முதல் 2016 -ஆம் ஆண்டு வரை பேரா.ஜனகராஜனால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 1970 -களில் தொடங்கி சுமார் நாற்பதாண்டு நிலைமைகளை ஆய்வு செய்திருக்கிறது. இந்திய வானவியல் ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) நேசனல் ரிமோட் சென்சிங் சென்டரிடமிருந்து பெறப்பட்ட 1971 -ஆம் ஆண்டிற்குரிய நிலவியல் வரைபடத்தை, மே 2014 -ல் பெறப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் படத்துடன் ஆய்வாளர் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

இந்த ஆய்வில், விவசாயமல்லாத தொழில்களுக்கு விளைநிலங்களைப் பயன்படுத்துவது என்பன போன்ற நடவடிக்கைகளாலும், பருவநிலை மாற்றங்களாலும், டெல்டாவின் நிலப்பயன்பாட்டிலும் நிலத்தின் மீதான தாவரப்போர்வையிலும் கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானித்திருக்கிறார்.

”பயிரிடும் பரப்பு பெரிதும் வீழ்ச்சியடைந்திருப்பதும், 1971 -க்கும் 2014 -க்கும் இடைப்பட்ட காலத்தில் தரிசு நிலத்தின் அளவு 13 மடங்கு அதிகரித்திருப்பதும் கவலையளிக்கும் விசயங்களாகும். பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாத காரணத்தினால் நிலம் தரிசாகப் போடப்பட்டதும், மற்ற பருவநிலை மாற்றங்களுமே இதற்குக் காரணம்” என்கிறார் பேரா. ஜனகராஜன்.

மூழ்கும் அபாயம்

இந்த ஆய்வு சுட்டிக்காட்டும் இன்னொரு நிகழ்வு சதுப்புநிலக் காடுகளின் அதிகரிப்பு ஆகும். கடல் நீர் உள்ளே வருவதன் காரணமாக சதுப்புநிலக் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது. 1971 -ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சதுப்புநிலக் காடுகளின் பரப்பு 14 மடங்கு அதிகரித்திருப்பதைத் தரவுகள் காட்டுகின்றன.

”சதுப்புநிலக் காடுகள் அதிகரிப்பது பற்றி நாம் மகிழ்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை. மென்மேலும் அதிகமான விளைநிலத்தை கடல் ஆக்கிரமித்து வருகிறது என்பதும், விளைநிலம் உவர் நிலமாக மாறி வருகிறது என்பதும்தான் இதன் பொருள் ” என்கிறார் ஜனகராஜன். தமிழக நிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் 72% டெல்டா பகுதி கடற்கரையில்தான் உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து வருவதன் விளைவாக டெல்டா பகுதி கடலில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

கடல் சீறம் காரண்மாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் மணல் திட்டுக்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு ( கோப்புப் படம் – நன்றி தினகரன் )

”டெல்டா பகுதியின் கணிசமான நிலப்பரப்பு, கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில்தான் இருக்கிறது” என்று சுஜாதா பைரவன் மற்றும் சிலரின் ஆய்வுகள் கூறுவதை எடுத்துக் காட்டுகிறார் ஜனகராஜன்.  காவிரியின் நதியோட்டத்தில் தொடர்ச்சியாகப் படிகின்ற வண்டல் மண்தான் தஞ்சை வடிநிலப்பகுதியை கடல் மட்டத்துக்கு மேலே உயர்த்தி வைத்திருக்கிறது என்றும், தற்போது வண்டல் மண் வரத்து குறைந்துவிட்டதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ஆற்றில் மேல் பகுதியில் வரிசையாகக் கட்டப்படும் அணைகள் தான் வண்டல் மண் வரத்து குறைந்து போவதற்குக் காரணம். கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் காவிரி டெல்டாவிற்குள் வண்டல் மண் வரத்து 80% குறைந்திருக்கிறது என்றும் கூறுகிறார் ஜனகராஜன். 1934 -இல் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அதன் கொள்ளளவு 2708.8 மில்லியன் கன மீட்டர்கள்; 2015 -இல் இது 1889 மில்லியன் கன மீட்டராகக் குறைந்து விட்டது.

இவையனைத்தின் காரணமாக டெல்டாவின் பயிரிடும் நிலப்பரப்பு 1971 -இல் இருந்ததைக் காட்டிலும் 27% குறைந்திருக்கிறது. கடல்நீர் உள்ளே புகுவதன் காரணமாகக் கடற்கரையோரங்களில் இறால் குட்டைகள் கணிசமான அளவில் அதிகரித்து வருவதும் விவசாயத்திற்குக் கேடானதாகவே இருக்கிறது.

இன்னொரு அபாயம் மண்ணின் தன்மையாகும்.  டெல்டா பிராந்தியம் களிமண் பூமி. இதில் 52% விரிசல் விடும் களிமண்ணாகும். தொடர்ச்சியாக நீர்வரத்து இல்லையென்றால் இந்த மண் மிகவும் பலவீனமாகிவிடும் என்று தனது ஆய்வில் குறிப்பிடுகிறார் ஜனகராஜன்.

எச்சரிக்கிறது கோதாவரி டெல்டா !

”கிருஷ்ணாகோதாவரி டெல்டாவில் கடல் மட்டம் உயர்கிறதா, நிலம் தாழ்கிறதா?” என்று தலைப்பிட்டு, ஜூலை 23, 2017 அன்று வித்யா வெங்கட், பி.வி.எஸ். பாஸ்கர் ஆகியோர் இந்து நாளேட்டில் வெளியிட்டுள்ள கட்டுரை, கோதாவரி டெல்டாவில் இன்று என்ன நடக்கிறதோ, அது தான் நாளை தஞ்சையில் நடக்கவிருக்கிறது என்ற அபாயத்தை உறுதி செய்கிறது.

கிருஷ்ணாகோதாவரி டெல்டா வரைபடம்

கிருஷ்ணாகோதாவரி டெல்டாவின் விளைநிலங்கள் உவர்த்தன்மை பெற்றுவருவதாகவும், இது விவசாயத்தைப் பாதித்திருக்கிறது என்றும் ஆந்திர பல்கலைக்கழக்கத்தின் ஓய்வு பெற்ற நிலவியல் பேராசிரியரும், அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டவருமான பேரா.கிருஷ்ணாராவ் கூறியிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் இந்த டெல்டா பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி அளவுக்குக் கீழிறங்கியுள்ளது என்றும் அதன் விளைவாக கடல்நீர் உள்ளே புகுந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.

”கோதாவரியில் உள்ள கன்னாவரம் மதகு, 1986 பெரு வெள்ளத்தின் போது 23.6 அடி உயரத்துக்கு தண்ணீர் வந்தபோதுதான் நீரில் முழுகியது, 2013 -ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது அது 18.2 அடி நீரிலேயே மூழ்கிவிட்டது. நிலப்பரப்பு 5.4 அடி கீழிறங்கி விட்டது என்பதை இது நிரூபிக்கிறது” என்கிறார் கிருஷ்ணாராவ்.

டெல்டா கீழிறங்குவதற்குக் காரணம் இங்கே இயற்கை எரிவாயு எடுப்பதுதான் என்று குற்றம் சாட்டுகிறார் கிருஷ்ணா ராவ். இவர் உறுப்பினராக இருக்கும், கிருஷ்ணாகோதாவரி டெல்டா பாதுகாப்பு அமைப்பின் சார்பில், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து, இந்த இழப்புக்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.

”பூமியின் அடியாழத்திலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும்போது பாறைகள் மீது பெருமளவு அழுத்தம் செலுத்தி வந்த வாயுக்கள் அகற்றப்பட்டு விடுவதால்தான் அவற்றுக்கிடையிலான சமநிலை குலைந்திருக்கிறது” என்பது பேராசிரியர் கிருஷ்ணாராவ் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

”நாங்கள் எரிவாயு எடுப்பதால்தான் நிலவியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதற்குப் போதிய அறிவியல் பூர்வமான தரவுகள் இல்லை” என்று சாதிக்கும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், இவ்வழக்கில் உயர்நீதி மன்ற ஆணைப்படி, டெல்டா ஆய்வுக் கழகம் நடத்தியுள்ள ஆய்வுகளின் அறிக்கைகளை மட்டும் காட்ட மறுக்கிறார்கள் என்று கூறுகிறது தி இந்து நாளேடு.

”அந்த அறிக்கையின் முடிவுகளை நாங்கள் பார்த்தோம். டெல்டா நிலவியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலம் தாழ்ந்துள்ள பகுதிகள் இறால் குட்டைகளால் சூழப்பட்டுள்ளன அல்லது எரிவாயுக் கிணறுகளுக்கு அருகாமையில் உள்ளன” என்று கூறுகிறார்கள் இந்தச் செய்தியாளர்கள்.

தமிழகத்துக்கு சோறிட்ட தஞ்சை உழவர் சமூகத்தையும், தஞ்சை மண்ணையும் கடல் கொள்ள அனுமதிக்கப்போகிறோமா?

 -அஜித்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்த சூழலியல் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க