Wednesday, April 23, 2025
முகப்புசெய்திகிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு

கிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு

-

ந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்டு 16-ம் தேதி முதல் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் விளைவாக பல கிராமங்களில் அஞ்சலகம் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764 – 1766 -களில் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா மாகாணங்களாக இருந்த போது அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த காலகட்டத்தில் அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது.

தற்போது இந்திய அஞ்சல்துறையில் மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள். இந்தியாவில் இருக்கும் பரந்து விரிந்த அலுவலகங்களால் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன.

2001 -ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் கொண்டு செல்லுமளவிற்கு ஊழியர்களின் உழைப்பு என்பது அளப்பரியது. இதில் முக்கியமாக கிராமிய அஞ்சல் ஊழியர்களின் (GDS- Gramin Dak Sevak) பங்கு மிக முக்கியமானது. இவர்களை அரசு ஊழியர்கள் என்பார்கள். ஆனால் உ ண்மையில் இவர்கள் அரசு ஊழியர் அல்ல.

இந்தியாவில் சுமார் 2.65 லட்சம் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் சுமார் 18,000 பேர் பணியாற்றுகிறார்கள். ஜி.டி.எஸ் அந்தஸ்தில் கிளை அஞ்சல் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்), ஜிடிஎஸ் போஸ்ட் மேன், மெயில் பேக்கர், மெயில் கேரியர் மற்றும் ஸ்டாம்ப் விற்பனையாளர் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வரும் தபால்களை பிரித்து முத்திரை குத்துவது, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் அஞ்சல்களை கொண்டு போய் சேர்ப்பது, கிராமங்களில் இருந்து வரும் தபால்களை அருகில் உள்ள பெரிய தபால் நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

இவர்கள் தான் அஞ்சல் துறையில் முதுகெலும்பாக இருகின்றனர். இவர்களில் அஞ்சல் அதிகாரி மட்டத்தில் உள்ளவர்களே குறைந்தபட்சமாக 6,000 ரூபாயும், அதிகபட்சமாக 9,000 ரூபாயும்தான் ஊதியமாக பெறுகின்றனர்.

மற்றபடி இ.எஸ்.ஐ, பி.எப், விடுப்பு, பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடையாது. இவர்களுக்கு 5 மணி நேரம் தான் வேலை என்றாலும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான உழைப்பை செலுத்தி வருகிறார்கள். ஆண்டிற்கு 45 ரூபாய் முதல் 75 ரூபாய் வரைதான் ஊதிய உயர்வு வழங்குவர். அதிலும் 6-வது ஊதியக்குழு பரிந்துரையில் நாராயணமூர்த்தி கமிட்டி அளித்த பரிந்துரையும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை அரசு.

பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் 1977 -ல் ‘அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்’ இந்த பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றது. உச்ச நீதிமன்றம், ‘ஜி.டி.எஸ் ஊழியர்களும் அரசு ஊழியர்களே. அவர்களுக்கும் அரசு ஊதிய சலுகைகள் அனைத்தும் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்தது.

ஆனால் அஞ்சல் துறை நிர்வாகம் அதை ஏற்கவில்லை. பிறகு 1996-ல் மீண்டும் இந்த பிரச்னையை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதும் அஞ்சல் துறை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க 1977 -ல் அமைக்கப்பட்ட தல்வார் கமிட்டி, ஜி.டி.எஸ் ஊழியர்களை இலாகா ஊழியர்களாக ஆக்குவது, பென்ஷன், போனஸ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்கிட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அரசு தனக்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதை காரணமாகக் கூறி அந்த பரிந்துரையை இன்று வரை அலட்சியப்படுத்தி வருகிறது.

இந்த பிரச்சனை குறித்து அகில இந்திய கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கோட்ட செயலாளர் காலப்பெருமாள் அவர்களிடம் தொலைபேசியில் உரையாடிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள்:

ஜிடிஸ் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக, அரசு கமிட்டி ஒன்று அமைக்க உத்தரவிட்டது. நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்க கோரி கேட்டோம். அதனை மறுத்து, அஞ்சல் துறையில் உயரதிகாரியாக இருந்த கமலேஷ் சந்திரா தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தது.அந்த கமிட்டி 28 நவம்பர் 2016 அன்று அறிக்கையை ஒப்படைத்து விட்டது. அந்த கமிட்டி அறிவித்த பரிந்துரை குறைந்தபட்சம் எங்களுக்கு பாதுக்காப்பு வழங்குறது. ஆனால் அதை நிறைவேற்ற மறுக்கிறது.

கடந்த 25.04.2017 அன்று பரிந்துரையை அமல்படுத்த கோரி காலவரையறையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தோம். இந்நிலையில் 24.04.2017 அன்று சங்க பொதுச்செயலாளர் மஹாதேவய்யாவுடன் இலாகா நடத்திய பேச்சுவார்த்தையின்படி எழுத்துப்பூர்வமாக அளித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 7வது ஊழியக்குழுவின் பரிந்துரைகளை ஆகஸ்ட் 15க்குள் அமலாக்கம் செய்ய வேண்டும் என்றோம். ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றாமல் இருக்கிறது. ஆகவே தான் இந்த போராட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

மேலும், அஞ்சலகத்தில், கோர் பேங்கிங் முறை உள்ளது. தற்பொழுது ATM சிஸ்டம் கொண்டு வருகிறார்கள். இதனை தனியாரிடம் ஒப்படைக்க இருக்கிறார்கள். இது அஞ்சல் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியாக உள்ளது. இதன் காரணமாகக் கூட எங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது” என்றார்.

சென்னை டதி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 25 ஆண்டாக பணிபுரியும் ஜிடிஎஸ் ஊழியரிடம் பேசிய போது,

“ஒரு நாளில் அதிகபட்சமாக 4 முதல் 5 மணி நேரம் தான் வேலை என்கிறார்கள். ஆனால் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தும் அதற்குரிய சம்பளம் இல்லை. எட்டு மணி நேரம் வேலையை உத்தரவாதப்படுத்தி அதற்குரிய சம்பளத்தை கேட்கிறோம். அதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இது தவிர இலாகாவில் நிரந்தர பணியாளர்கள் தங்களின் பணிகளை எங்கள் மீது சுமத்தி விடுகிறார்கள். “சுதந்திர இந்தியாவில் நாங்கள் இன்னும் அடிமையாகவே இருக்கிறோம்” என்கிறார்.

“இந்த அரசு; பணிநிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் இத்தனை காலம் இருந்து விட்டோம். இந்த வயசில் வேறு எந்த வேலைக்கு செல்வது” என்கிறார்.

மற்றொரு ஊழியர், என்னை OS என்பார்கள். (Out Side- வெளியாட்கள் முறை) தெரிந்தர்வர்கள் மூலம் வேலைக்கு சேர்வது, அல்லது பணியில் இருக்கும் போது இறந்தவர்கள் பிள்ளைக்கு கொடுப்பார்கள். என்னைப்போல இந்த சென்னையில மட்டும் 600 பேர் வேலை செய்கிறார்கள்.

மாவட்டத்துக்கு 50 பேர் இருப்பாங்க. காலை ஆறு மணிக்கே வந்து முத்திரை குத்துவேன். அந்த அளவிற்கு வேலை அதிகமா இருக்கும். ஆனா, 9 மணிக்கு வந்ததா தான் ரெக்கார்ட்ல இருக்கும். மாதம் ரூ.5,500 தான் நான் வாங்குறேன். பதினைந்து வருசமா வேலை செய்யுறேன். எந்த முன்னேற்றமும் இல்லை. என்னோட மனைவியும் வேலைக்கு போறதால குடும்பத்த சமாளிக்க முடியுது. அரிசு, பருப்பு எல்லாம் ரேசன்ல தான் வாங்குறேன். அதனால தான் குடும்பம் ஓடுது என்கிறார்.

ஜிடிஸ் ஊழியர்கள் இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் கொத்தடிமைகளை போல் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். வேலை நிரந்தம் செய்யக்கோரி கடந்த ஐம்பது ஆண்டுகளாக இவர்கள் பண்ணாத போராட்டம் இல்லை. இருப்பினும் இந்த ஊழியர்களின் கோரிக்கை சுரணை கெட்ட அரசுக்கு உரைக்கவில்லை.

தனியார்மயமாக்களின் விளைவாய் அஞ்சல் துறையில் பல தனியார் நிறுவனங்கள் வந்துவிட்டாலும் காடு மேடான இடங்களுக்கு அவர்கள் செல்வதில்லை. பல கிராமங்களுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் தனியார் கூரியர் வசதி இல்லை. இந்நிலையில் பல கிலோ மீட்டர சைக்கிளில் சென்று பொறுப்பாக ஒப்படைத்து விட்டு வரும் இந்த ஜிடிஎஸ் ஊழியர்களைத் தான் வீதிக்கு தள்ளியுள்ளது மோடி அரசு.

ஜிடிஎஸ் ஊழியர்களின் பணிசுமையை தனது ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் தீபிகா நாராயண் பரத்வாஜ்.

-வினவு செய்தியாளர்.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி