Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மானியங்களை வெட்டும் அரசு யாருக்கானது ? புஜதொமு ஆர்ப்பாட்டம்

மானியங்களை வெட்டும் அரசு யாருக்கானது ? புஜதொமு ஆர்ப்பாட்டம்

-

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

வ்வொரு நாளும் பொழுது விடிந்தால் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் தூங்க வேண்டிய நிலைமைக்கு மோடியின் ஆட்சியில் ஆளாகியிருக்கிறோம். வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றி, வேலையும் பாய்ச்சுவது போல பணமதிப்பு நீக்கம், மாடு விற்கத் தடை ஜி.எஸ்.டி வரி, கேஸ் மானியம் ரத்து. ரேசன் கடைக் குப் பூட்டு எனத் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது மோடியின் அரசு.

சரியான நபர்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கேஸ் மானியம் செல்வதற்காக நேரடியாக மானியம் கொடுக்கிறோம், வங்கிக்கணக்கில் போடுகிறோம் என்றார் மோடி. மக்களை சந்தை விலைக்கே வாங்க பழக்கப்படுத்தி, படிப்படியாக மானியத்தையும் வெட்டிக் கொண்டே வந்து, இனிமேல் யாருக்குமே கேஸ் மானியம் கொடுக்க முடியாது என வேட்டு வைத்துவிட்டார்.

தமிழக அரசோ, உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில், மாதத்துக்கு 8,400 ரூபாய் சம்பாதிப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், ஓய்வூதியம் வாங்கு பவர்கள், 3 அறைகள் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் என ஒரு பட்டியல் போட்டு இவர்களுக்கெல்லாம் இனி ரேசனில் பொருள் கிடையாது என்கின்றனர்மோடியின் அடிமைகள்.

அதாவது 90% பேருக்கு ரேசன் பொருளே தராமல் கடையை மூடி விடுவது, 10% பேருக்கும் ரேசன் பொருட்களுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போடுவது. இறுதியாக யாருக்குமே தரமுடியாது என்று சொல்வதன் மூலம் உனக்குத் தான் கை, கால் நல்லாருக்கே, அப்புறம் எதுக்கு மானியமெல்லாம் என்று கேட்கும் வக்கிரம் பிடித்த அரசாக மாறியிருக்கிறது.

மக்களிடம் ஒட்டு வாங்கி வெற்றி பெற்ற அரசியல்வாதிகள், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் எல்லாம் மக்களின் நலனுக்காகத் தானே செயல்பட வேண்டும், ஏன் இப்படி மக்களுக்கான சலுகைகள் எல்லாவற்றையும் வெட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என நினைக்கலாம். மக்களின் வரிப் பணத்தை மக்களுக்கே செலவு செய்து கல்வி, குடிநீர், மருத்துவம் போன்றவற்றை சேவையாகக் கொடுத்த மக்கள் நல அரசு என்பதே இனி கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும் என்பது வெளிப்படை.

அதனால் தான் மக்களுக்குக் கிள்ளிக் கொடுக்கும் மானியம், சலுகை கூட அரசுக்கு சுமை: கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் வரிச்சலுகையும், மானியமும், கடன் தள்ளுபடியும் நாட்டின் வளர்ச்சிக்கானவை என்கிறது. நாளுக்கு நாள் ஒட்டாண்டிகளாகி வரும் மக்களிடம் இருந்து மேலும் மேலும் கடைசி பைசாவையும் விடாமல் பிடுங்கும் விதமாக GST வரி போடுவதும், அரசின் வருமானம் அதிகரித்தால் தானே மானியம் தாமுடியும் என்று சொல்லிக்கொண்டே மக்களுக்கான மானியம் ஒவ்வொன்றையும் ஒழிப்பதையும் ஒரே நேரத்தில் செய்கிறார்கள்.

ஒரு பக்கத்தில் வளர்ச்சி என்ற பெயரில் கடைசி பத்தாண்டுகளில் 42 லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் மக்களின் ரேசனுக்குக் கூட பூட்டுப் போட்டு வளர்ச்சி, வளர்ச்சி எனக் கூச்சல் போடுகிறார்கள். இவர்கள் சொல்லும் வளர்ச்சி, அவர்களின் எஜமானர்களான கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியைத் தான், என்பது இப்போது புரிகிறதா?

உனக்கு எதுவுமே செய்ய மாட்டேன் என்று திமிராக, உறுதியாகப் பேசும் அரசிடமே, அய்யா எங்களைப் பாருங்கள், ஏதாவது செய்யுங்கள் எனக் கெஞ்சுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? பிரச்சினையே இந்த அரசுதான் என்று தெரிந்த பிறகும் அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடுவது முட்டாள்தனம், கேவலம் இல்லையா?

வாக்களிப்பதைக் கடைமையாகக் கருதும் மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, கொள்ளையடிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகளும், போராடும் மக்களை அடிக்கும் முதலாளிகளின் அடியாளாக செயல்படும் அரசு எந்திரமும் தேவைதானா?

மத்திய, மாநில அரசுகளின் கொள்கையே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் தான், நாட்டைக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கூறுபோட்டுக் கொடுத்து மறுகாலனியாக்குவது தான் என்பது வெளிப்படையாகத் தெரிந்த பிறகும், எனக்கு ஓட்டுப் போட்டு முதலமைச்சராக்குங்கள், நான் அப்படியே கிழித்துத் தோரணம் கட்டிவிடுவேன் என வாய்ச்சவடால் அடிப்பவர்களை இனியும் நம்பி ஏமாற வேண்டுமா?

வேறு என்னதான் செய்வது, மக்களுக்கு முன்பு இருக்கும் ஒரே வழி ஓட்டுப் போடுவதுதானே என நினைக்கலாம். திருடனைக் கண்டு அஞ்சுவதும், கெஞ்சு வதும்தான் அவனிடம் இருந்து தப்பிக்கும் ஒரே வழி என்றால் ஓட்டுப் போடுவதும் அப்படித்தானே. இப்படி அஞ்சி நடுங்குவதும், கெஞ்சிநிற்பதும் உழைப்பவர்களாகிய நமக்கு அசிங்கம் இல்லையா?

மக்களுக்கு விரோதியாக மாறிப்போன அரசியல்வாதிகளையும், மக்களுக்கு எதிரியாகிப்போன அரசமைப்பையும் நாம் ஏன் தலையில் சுமக்க வேண்டும்? தூக்கி வீசுவதுதானே சரி. அதைச் செய்வோம் முதலில். ஆனால் இதைச் செய்ய ஓர் அமைப்பு தேவை. அதாவது நமக்கான ஒரு நிறுவனம்.

அதுதான் மார்க்சிய லெனினிய தத்துவத்தால் புடம்போடப்பட்ட, பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புரட்சிகரத் தொழிற்சங்கமான புஜ.தொ.மு. இப்பொழுது சொல்லுங்கள் எது தேவை என்று? கார்ப்பரேட்களுக்காக மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்த அரசமைப்பா? மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க, பாட்டாளி வர்க்கத் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் அமையப் போகும் மக்கள் ஜனநாயக அரசமைப்பா?

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் – வேலூர் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 88075 32859, 84897 35841.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி