Tuesday, April 29, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !

வெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !

-

வெள்ளாறு எங்கள் ஆறு ! மணல் கொள்ளையனே வெளியேறு !!

கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !

நாள்    : 26.08.2017, சனிக்கிழமை.
நேரம் : காலை 10:00 மணி.

அன்புடையீர்! வணக்கம்,

நெல்லுக்கும், கரும்புக்கும் பாலூட்டும் தாய்தான் நமது வெள்ளாறு. அதன் மார்பை அறுக்கிறார்கள் மணல் கொள்ளையர்கள். நாம் வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடாதா இன்று போராடி தடுக்கவில்லை என்றால் வரும் தலைமுறைக்கு தண்ணீர் இருக்காது.

பிற மாநிலங்களில் மணல் எடுக்கத் தடை விதிக்கப்பட்டு ஆறுகள் பாதுகாக்கப்படுகின்றன. குடிநீருக்கு மக்கள் நாயாக அலைகிற தமிழகத்தில் பொக்லின் எந்திரத்தை வைத்து வரைமுறையற்று மணல் கொள்ளை நடக்கிறது. இரண்டு யூனிட் ரூ. 1080 ஆனால் வெளிச்சந்தையில் நாற்பதாயிரம் வரை விற்கப்படுகிறது.

இந்த கொள்ளை பணத்தின் கூட்டாளிகள் யார்?

தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை அதிமுக வட்ட செயலர் முதல் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி, எடப்பாடி , ஓபிஎஸ், சேகர் ரெட்டி வரை பங்கு பிரிப்பது நீள்கிறது. அரசு குவாரி என்கிறார்கள். மணல் கொள்ளையை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஏன் பணம் தருகிறார்கள்? போலீசு ஏன் அவர்களை மிரட்டுகிறது? தடுக்க முயலும் நேர்மையான அதிகாரிகள்கூட ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்?

வெள்ளாற்றில் நடந்த மணல் கொள்ளையை விசாரிக்கக் கோரி வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் 22.06.2017 அன்று நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

வெள்ளாற்றில் சாந்தி நகர் குவாரியில் நான்கு வருடம், கூடலையாத்தூரில் ஏழு வருடம், கார்மாங்குடியில் 10 ஆண்டுகள் அனுமதிக்கப் பட்ட அளவைவிட பல மடங்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்தில் சிக்கிய வாகனம் போல் வெள்ளாறு சிதைந்து கிடக்கிறது என வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நிலத்தடி நீராதாரத்தை காக்க வேண்டிய அதிகாரிகள் அனைவரும் களவாணிப் பயல்களாக மாறிவிட்டார்கள். இவர்களிடம் மனு கொடுத்து எதற்கு மன்றாட வேண்டும்? ஒரு லாரி மணல் உற்பத்தி ஆக எத்தனை நூற்றாண்டுகள் ஆகும். அந்த மணல் கூடலையாத்தூர் வந்து சேர எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்ற விபரம் கிரிமினல் மூளை கொண்ட அதிகாரிகளுக்கும், ஆளும் அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரிந்துதான் மக்களுக்கு துரோகம்செய்கின்றனர்.

வெள்ளாற்றை காக்க விவசாயத்தை காக்க மக்கள் தானே களத்தில் இறங்கி போராட முடியும். அதற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்காமல், ஏன் மக்களை அச்சுறுத்துகிறது? நடப்பது சுதந்திர ஆட்சியா? ஆங்கிலேய காலனி ஆட்சியா? நெய்வேலி சுரங்கம் நிலத்தடி நீரை பல ஆண்டுகளாக உறிஞ்சி எறிகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பல இடங்களில் ஆழ்துளை போர்வெல் போடப்பட்டுள்ளது.

கடலூர் ரசாயன ஆலைகளால் நிலத்தடி நீர் நஞ்சாக மாறி வருகிறது. காவிரி நீர் உரிமை மறுப்பால் வீராணம், கொள்ளிடத்தில் நீர் இல்லை. வெள்ளாற்றில் தண்ணீர் ஓடவில்லை அதனால் மணல் வந்து சேராது. இருக்கும் மணலை சுரண்டி கொள்ளையடிக்க அனுமதித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயராது. அருகில் கடல் உள்ளது. உப்புநீர் உள்ளே புகுந்து விட்டால் விவசாயம் அழிந்துவிடாதா? யாரிடம் சென்று முறையிடுவது?

இன்று வெள்ளாற்றங் கரையில் உள்ள கிராமத்தில் நீர்மட்டம் 250 அடி கீழே இறங்கி விட்டது. காவிரி நீர், நீட் தேர்வு உட்பட தமிழக உரிமைகளை பறிகொடுத்ததும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் போன்ற அழிவுத் திட்டங்களை அனுமதித்து தமிழர்களின் உரிமைகளையும் நலன்களையும் பா.ஜ.க. மோடி அரசிடம் மண்டியிட்டு காவு கொடுத்துள்ளது அ.தி.மு.க எடப்பாடி அரசு.

விவசாயிகளை வாழவிடு, வாழ்வாதாரங்களை பறிக்காதே என போராடுகிறோம். திருடனுக்கும் பறி கொடுத்தவனுக்கும் நடக்கும் போராட்டம் இது கூடலையாத்தூர் மணல் குவாரியில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கிறது. கிராமமே மூச்சுவிட முடியாமல் திணறுகிறது. டவுன் பஸ் போக வழியில்லை. பள்ளி மாணவர்கள் அஞ்சி நடந்து செல்கிறார்கள்.

சொந்த ஊரில் நாம் அகதிகளாக வாழ வேண்டுமா? அல்லது மணல் கொள்ளைக்கு முடிவு கட்டி லாரிகளை ஊருக்குள் விடாமல் தடுக்க வேண்டுமா? முடிவு செய்யுங்கள்!

வெள்ளாற்றை காக்க
குடும்பத்தோடு ஆற்றில் இறங்கு !
வரும் தலை முறைகள் வாழனு முன்னா
தண்ணிருக்காக ரத்தம் சிந்து !

தகவல் :
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்.

_____________

மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடும் மக்களோடு துணை நிற்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி