குடிமக்களின் “அந்தரங்க உரிமை” (Right to privacy), இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 24-08-2017 அன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
ஆதார் திட்டத்திற்கு எதிராக, அதனைத் தடை செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கே.எஸ்.புட்டசாமி கடந்த 2012 -ம் ஆண்டு பொதுநல வழக்காக தாக்கல் செய்தார். அவரைப் போன்றே சமூக ஆர்வலர்களான பெசவாடா வில்சன், அருணா ராய், நிக்கில் தேய் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்டவர்களும் ஆதாருக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில், “ஆதார் திட்டமானது, தனி மனித அந்தரங்க உரிமையைப் பறிப்பதாகவும், சமத்துவத்திற்கான உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது” என்றும், “அது மையப்படுத்தப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற அரசை நோக்கியே இட்டுச் செல்லும்; ஆதார் என்பது தனிமனித அந்தரங்கத் தகவல்கள் திருட்டுப் போவதற்கு வழிமுறையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது” என்றும் “இதன் காரணமாக, ஆதார் திட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்ய வேண்டும்” என்றும் மனுதாரர்கள் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்ணி ஜெனரல் கே.கே. வேணுகோபால் “எம்.பி.சர்மா வழக்கு (1954)” மற்றும் “கரக்சிங் வழக்கு(1962)” ஆகியவற்றில் உச்சநீதிமன்ற அமர்வு கொடுத்துள்ள தீர்ப்பைச் சுட்டிக் காட்டி ‘அந்தரங்கத்திற்கான உரிமை’ என்பது அடிப்படை உரிமை அல்ல என வாதடினார்.
மேலும் அந்தரங்கம் என்பது ஒரு மேலோட்டமான கருத்தாக்கம்; மேலோட்டமான கருத்தாக்கங்களை எல்லாம் அடிப்படை உரிமைகளாக்க முடியாது; அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகிய எந்தப் பிரிவிலும் அந்தரங்கத்திற்கான உரிமை குறித்து குறிப்பிடப்படவில்லை; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்தரங்கம் போன்று முழு வடிவமற்ற எதையும் அடிப்படை உரிமைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது; உணவு, உடை, இருப்பிடத்திற்கான அடிப்படை உரிமைகள், அந்தரங்க உரிமைகளை விட முதன்மையானவை என்றும் வாதாடினார்.
இறுதியாக வளரும் நாடுகளில் கண்டிப்பாக ஒரு அடையாள அமைப்பு முறை பின்பற்றப்பட வேண்டும், என்ற உலக வங்கியின் அறிக்கையை சுட்டிக் காட்டி ஆதார் கண்டிப்பாகத் தேவை என்று வலியுறுத்தினார். ஆதார் உலக வங்கியின் உத்தரவிற்கிணங்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்திருக்கிறார், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்.
இதனையடுத்து அந்தரங்கத்திற்கான உரிமை, அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையில் வருமா என்பது குறித்து முடிவெடுக்க 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியது உச்சநீதிமன்றம். அரசியல் சாசன அமர்வில் மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தமது பழைய வாதங்களையே முன் வைத்து வாதாடினார்.
மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்வாதம் வைத்த மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம், “அந்தரங்கம் என்பது, சிந்திப்பதற்கும், சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கும் தனிமனித சுயாட்சிக்குமான சுதந்திரமே ஆகும்; இத்தகைய அந்தரங்க உணர்வை மேற்கொள்ளாமல் எவ்வித அடிப்ப்டை உரிமைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது” என வாதாடினார்.

மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய முன்னால் அட்டர்னி ஜெனரல் சோரப்ஜி, அந்தரங்கத்திற்கான உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் 14, 19 மற்றும் 21 ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் அடங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் பத்திரிக்கைக்கான சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டத்தில் நேரடியாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய சோரப்ஜி, “பத்திரிக்கை சுதந்திரம் எவ்வாறு பிரிவு 19 -லிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதோ, அதைப் போலவே அந்தரங்கத்திற்கான உரிமை என்பதை பிரிவு 21 -லிருந்து பரந்த முறையில் எடுத்துக் கொள்ளலாம்” என்று வாதிட்டார்.
இந்த வாத பிரதிவாதங்களைக் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை 24-08-2017 அன்று அறிவித்தது. அந்தரங்கத்திற்கான உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமையாகும்; அது, அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையில் (Right to live) அடங்கும்; அந்தரங்கத்திற்கான உரிமை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளுக்கான ஒட்டுமொத்த பிரிவுகளுக்குள்ளும் அடங்கும் என்றும் கூறியுள்ளது.
இத்தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் ஆதார் திட்டத்திற்கான பலத்த அடி எனக் கருதுகின்றனர். ஆனால் இதற்கு முன்னரே உச்சநீதிமன்றம் , ஆதார் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்பட்ட இலட்சணத்தை வைத்து ஆதார் திட்டத்தின் மீதான இத்தீர்ப்பின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஆதார் குறித்த ஒரு வழக்கில், ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆதார் இருந்தால் தான் பள்ளித் தேர்வு எழுத முடியும் என்பதில் தொடங்கி, ஆதார் இருந்தால் தான் பிணத்தைக் கூட எடுக்க முடியும் என்ற வகையில் தான் இன்று வரை மத்திய அரசு பல்வேறு சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இதுவரையிலும் மதிக்காத மத்திய அரசு, இனி மேல் புதுப்பிறவி எடுத்தா உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து விடப் போகிறது?
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதல் இன்று வரை தொடர்ச்சியாக உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம் ஆகிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நிறுவனங்களின் மகுடிக்கேற்ற பாம்பாய் ஆடி வருகிறது. ஜன்–தன்–யோஜனா, மானியம் வங்கிக் கணக்கோடு இணைப்பு, புதிய கல்விக் கொள்கை, மருத்துவம் தனியார்மயம், சமையல் எரிபொருள் மானியம் இரத்து, ரேஷன் கடைகள் மூடல் எனத் தொடர்ச்சியாக மக்கள் நலத் திட்டங்களை முடக்கி, மானியங்களை ஒட்டு மொத்தமாக ஒழித்து விட முனைந்து வருகிறது.
இந்த மக்கள் விரோத செயல்பாடுகளை எல்லாம் ஊழல் ஒழிப்பு, வெளிப்படைத்தன்மை, முறைகேடுகள் ஒழிப்பு என பல்வேறு பெயர்களில் நியாயப்படுத்தி வருகிறது
இந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கவும் அதன் எதிர்ப்புகளை நசுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தி தான் ஆதார். ஆதார் என்னும் தனிப்பட்ட அடையாள முறையின் மூலம் மக்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருகிறது மத்திய அரசு. இன்னொரு புறம் மக்களின் அனைத்து தகவல்களையும் பதிந்து கொண்டு அவர்களது வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றை தீர்மானிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதும் ஆதாரின் நோக்கமாகும்.
அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களோ, தனிநபர்களோ போராடும் போது அவர்களை தனித்தறிந்து அவர்களது அன்றாட செயல்பாடுகளை ஆதார் அட்டையின் மூலம் முடக்க முடியும். அதன் காரணமாகவே, ஆதாரை கல்வி பயில்வதில் தொடங்கி வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என இழுத்து கடைசியில் சுடுகாடு வரைக்கும் கட்டாயமாக்கியிருக்கிறது மோடி அரசு.
தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்தரங்கத்திற்கான உரிமை, ஒரு அடிப்படை உரிமை என்பதை ஒரு காகிதத்தில் அச்சடித்துத் தந்திருக்கிறது, அவ்வளவுவே. இதனை அடிப்படையாக வைத்து, பிரதான வழக்கில் ஆதார் கட்டாயமாக்கப்படுவதை இரத்து செய்து இதே நீதிமன்றம் உத்தரவிடுமா? என்பது கேள்விக்குறியே! அப்படியே இரத்து செய்தாலும் அதனை மோடி அரசு நடைமுறைப்படுத்தாது என்பதே நமது முன் அனுபவம் நமக்குச் சொல்லும் பாடம். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட அரசு திட்டம் – மானியத்திற்கு பயனர்கள் அனைத்து தகவல்களையும் தரவேண்டும் என்று சொல்லிக் கூட மறைமுகமாக ஆதாரை கட்டாயமாக்க முடியும். “உங்கள் தேசத்தைக் காக்க உங்களது விவரங்களை கொடுங்கள், கொடுக்காதவர்கள் தேசவிரோதிகள்” என்று பாஜக அறிவுக் கூலிப்படையினர் விவாதங்களில் மிரட்டினார்கள். ஆக அப்படியும் கூட ஆதாரை மறைமுகமாக கட்டாயமாக்கலாம்.
ரேசன் மானியம் ரத்தானதை எதிர்த்துப் போராடுவதும், ஆதார் திட்டத்தை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல! இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் முதலாளிகளுக்கு விற்று வரும் இந்திய அரசு அதற்கான பிடிமானத்தை ஆதார் மூலம் உருவாக்க நினைக்கிறது. அல்லது கிட்டத்தட்ட உருவாக்கி விட்டது. முன்னதை வீழ்த்தும் போராட்டம் வலுப்பெறும் போது பின்னது தானாகவே வலுவிழக்கும்.
மேலும் படிக்க :
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி