குர்மீத் ராம்ரஹீமுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ள ஹரியாணா மாநில சி.பி.ஐ நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குர்மீத் தனது தேரா மடத்தைச் சேர்ந்த இரண்டு பெண் சீடர்களைப் பல ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 28 -ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது தான் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ளதாகவும், எனவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்த குர்மீத் ராம்ரஹீமை போலீசார் தரதரவென்று இழுத்துச் சென்றதாக பத்திரிகை செய்திகள் அறிவிக்கின்றன.

குர்மீத்தின் குற்றத்தை கடந்த 25 -ம் தேதி வெளியிட்ட தனது தீர்ப்பில் உறுதி செய்தது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்ற பாஜக சொம்புகள் உள்ளிட்டு அனைத்து ஊடகங்களும் களத்தில் இறங்கிக் கம்பு சுழற்றத் துவங்கின. “கடவுளை மனிதன் தண்டிப்பது” சாத்தியமில்லை என நம்பி நீதிமன்ற வளாகத்தை உற்சாகமாகச் சூழ்ந்திருந்த குர்மீத்தின் சீடர்கள் கலவரம் செய்யத் துவங்கவே, வழக்கமான பாஜக ஊதுகுழல்கள் தங்களது சுருதியை மாற்றிக் கொண்டன. “எம்.எல் கட்டர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை” என உச்சஸ்தாயியில் சுருதி சேர்க்கத் துவங்கினார் அர்னாப் கோஸ்வாமி.
குர்மித் ராம்ரஹீமுக்காக நடந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 300 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மலோட் மற்றும் பல்லுவான்னா ஆகிய இரண்டு இடங்களில் உள்ள இரயில் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தில்லி ஆனந்த் விகார் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரேவா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு கோச்சுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. என்.டி.டி.வி, இந்தியா டுடே உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் நேரலை வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மானசா பகுதியில் உள்ள தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் கொளுத்தப்பட்டுள்ளது.

குர்மித் ராம்ரஹீமுக்கு எதிரான தீர்ப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே; அதாவது ஆகஸ்டு 23 -ம் தேதியில் இருந்தே தீர்ப்பு வெளியாகும் நீதிமன்றத்தையும் அது அமைந்திருக்கும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சகுலா நகரையும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். ஆகஸ்ட் 23 -ம் தேதியில் இருந்தே பஞ்சகுலாவில் குவியத் துவங்கிய ராம்ரஹீமின் பக்தர்களுடைய எண்ணிக்கை, தீர்ப்பு வெளியான அன்று 2 லட்சத்தைத் தொட்டதாக கூறுகின்றன ஊடகங்கள். தீர்ப்பு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே இணைய சேவை நிறுத்தப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சி.ஆர்.பி.எப்பின் 97 அணிகள் (Companies) இறக்கப்பட்டது; சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 16 அணிகளும், சாஷ்த்திர சீமா பால் (Sashtra seema Bal) எனும் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 37 அணிகளும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 21 அணிகளும், இந்தோ – திபெத் எல்லைப் போலீசு படையைச் சேர்ந்த 12 அணிகளும் களத்தில் இறக்கப்பட்டன. 48 மணி நேரத்துக்கு முன்பே 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு முழு அளவிலான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு பாதுகாப்புப் படைகள் களத்தில் நிறுத்தப்பட்ட பின்னும் ஒரு கலவரத்தை உண்டாக்கும் அளவுக்கு குர்மித் ராம்ரஹீம் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா? உண்மையில் பாதுகாப்புப் படைகளின் சக்தியை மீறித் தான் கலவரம் நடந்ததா?
குர்மீத் ராம்ரஹீம் சிங்
நடிகர், பாடலாசிரியர், பாடகர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், சமூக சேவகர், “விளையாட்டு” ஆர்வலர் என பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ள 50 வயதான குர்மித் ராம்ரஹீமின் அடையாளம் – சாமியார். பலூசிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா பலோசிஷ்தானி என்பவரால் 1948 -ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு மதவாதக் குழு தேரா சாச்சா சௌதா. சீக்கிய மற்றும் இந்து மத நம்பிக்கைகளைக் கலந்து கிண்டப்பட்ட இந்தக் கிச்சடியின் மேல் இசுலாம் மற்றும் கிருஸ்தவ மதங்களில் இருந்து கடன் வாங்கப்பட்ட சில கருத்துக்களைக் கொத்தமல்லி கருவேப்பில்லையாக தூவப்பட்டிருக்கும்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இடைநிலைச் சாதிகள் மற்றும் தலித்துகளிடையே பிரபலமாக இருக்கும் இந்த மதவாதக் குழுவுக்கு சுமார் 6 கோடி பக்தர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் தலைமைப் பீடத்தில் 1991 -ம் ஆண்டு அமர்கிறார் குர்மீத் ராம்ரஹீம். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் சீக்கிய மதச் சாயல் கொண்ட பல்வேறு மதக்குழுக்களில் இருந்து தேரா சாச்சா சௌதா சற்றே வேறுபட்டதாகும்; மற்ற மதக்குழுக்கள் தமது வெளிப்படையான அரசியல் முடிவுகளை அறிவித்துக் கொள்ளாத நிலையில், தேரா சாச்சா சௌதா ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது உறுப்பினர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிவித்து விடும்.
கடந்த 2014 -ம் ஆண்டுக்கு முன்புவரை வெளிப்படையான காங்கிரசு ஆதரவாளராக இருந்த குர்மீத், அதன் பின் தனது ஆதரவை பாரதிய ஜனதாவுக்கு மாற்றிக் கொண்டார். மற்றபடி பொதுவாக இந்து சாமியார்களும் மடங்களும் பின்பற்றும் அதே வழிமுறைகள் தான் குர்மீத்தினுடையதும். மருத்துவ முகாம்கள், பேரழிவுக் காலங்களில் உதவி செய்வது போன்ற “சமூக சேவைகளுடன்” பிரதமர் நரேந்திர மோடியே புகழும் அளவுக்கு தன்னை தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைத்துக் கொண்டார்.
குர்மீத்தின் குற்றப்பட்டியல்
குர்மீத் ராம்ரஹீம் தற்போது தண்டிக்கப்பட்டிருக்கும் வழக்கு 2002 -ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எழுதப்பட்ட ஒரு கடித்ததில் துவங்கியது. அக்கடிதத்தில், குர்மீத் தன்னையும் மடத்தில் இருந்த பிற பெண் சாமியார்களையும் பாலியல் வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகிறார். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேரா மடத்தின் தீவிர பக்தர்கள் என்றும், குர்மீத்தைக் கடவுளாகவே ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் அப்பெண் குறிப்பிடுகிறார்.

ஒரு நாள் அந்தப் பெண்ணை தனது இரகசிய அறைக்கு அழைத்துள்ளார் குர்மீத். அங்கே நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்த “கடவுளை” கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அப்பெண். தனது அரசியல் செல்வாக்கை குறிப்பிட்டும் கைத்துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டிய குர்மீத், ஏற்கனவே ‘தேரா’வின் மேலாளர் ‘ஃபக்கீர் சந்த்’தை கொன்று மறைத்ததைப் போல அந்தப் பெண்ணையும் கொன்று விவகாரத்தை எந்த சிக்கலும் இல்லாமல் மறைத்து விட முடியும் என்று மிரட்டியுள்ளார். உயிருக்கு அஞ்சிய அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குர்மீத், சுமார் மூன்றாண்டுகளாக இந்தக் கொடுமையைத் தொடர்ந்து செய்துள்ளார்.
மடத்தில் தங்கியிருந்த தான் மட்டுமின்றி பிற பெண்களும் இதே போல் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அப்பெண், அதை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தார். முதலில் ஹரியாணா ஊடகங்களிலும் பிற இந்திய ஊடகங்களிலும் வெளியான இவ்விவகாரம், வட இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விசயமாக மாறியது.
உள்ளூர் பத்திரிகையாளர் ராம்சந்தர் என்பவர், பாலியல் வல்லுறவு குறித்த கடிதத்தையும் குர்மீத்தின் பிற முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்தார். மக்களிடையே தனது போலி பிம்பம் கலைவதைக் கண்டு ஆத்திரமுற்ற குர்மீத், தனது அடியாட்களைக் கொண்டு ராம்சந்தரை சுட்டுக் கொல்கிறார். பாலியல் வழக்கைத் தொடர்ந்து ராம்சந்தரைக் கொலை செய்ததாக மேலும் ஒரு வழக்கு குர்மீத்தின் மேல் தொடரப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக் கடிதத்தை ஹரியாணா உயர்நீதி மன்றம் தானே முன்வந்து வழக்காக ஏற்றுக் கொண்டு (suo – moto) அதைக் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடுகிறது. தேரா மடத்தை விட்டு வெளியேறிய பல பெண் சாமியார்களை சி.பி.ஐ விசாரித்த போது, இரண்டு முன்னாள் பெண் சாமியார்கள் தாங்கள் குர்மீத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். தான் கிருஷ்ணரின் அவதாரமென்றும், மடத்தில் உள்ள பெண் சாமியார்கள் கோபியர்கள் என்றும் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்த குர்மீத், அவர்களின் பாவங்கள் போக்கப்பட வேண்டும் என்றால் தன்னோடு உறவு கொள்ள வேண்டும் எனச் சொல்லியே பெண் சாமியர்களைப் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த சி.பி.ஐ, 2007 -ம் ஆண்டு ஜூலை 30 -ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் சாமியார்களோடு குர்மீத் சிங்கின் உதவியாளர் ஒருவரையும் சாட்சியாக வழக்கில் இணைத்துள்ளது சி.பி.ஐ. பாலியல் குற்றங்களைத் தவிர ஏராளமான முறைகேடுகளில் குர்மீத் ஈடுபட்டுள்ளார். தனது சீடர்கள் பாலியல் ‘நல்லொழுக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மடத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆண் சாமியார்களின் விரைகளை அறுத்த குற்றச்சாட்டும் குர்மீத் சிங்கின் மேல் உள்ளது.
குர்மீத் – பாரதிய ஜனதா கூட்டணி
காங்கிரசு ஆதரவு மனநிலையில் இருந்த குர்மீத்தை பாரதிய ஜனதா கடந்த 2014 -ம் ஆண்டு வாக்கில் தனது செல்வாக்குக்குள் வென்றெடுத்தது. அப்போதே பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்களோடு குர்மீத்துக்கு கடுமையான முரண்பாடு இருந்தது. தங்களது மத நம்பிக்கைகளை குர்மீத் இழிவு படுத்துவதாக சீக்கிய குருத்வாராக்கள் தேரா மடத்துடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்தன. எனினும் ஹரியாணாவில் உள்ள ஜாட் சாதியினரின் வாக்கு வங்கியின் கணிசமான சதவீதத்தைப் பெற்றிருந்த பாரதிய ஜனதா, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையேவும் தலித்துகளிடையேயும் செல்வாக்கு பெற்றிருந்த குர்மீத் தங்கள் பக்கமிருப்பது ஆதாயம் எனக் கணக்குப் போட்டது.

பாரதிய ஜனதாவின் தேர்தல் கணக்கு தப்பவில்லை. 2014 -ம் ஆண்டு நடந்த ஹரியாணா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா குர்மீத்தின் ஆசீர்வாதங்களோடு அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்தவுடன் சில பத்து சட்டமன்ற உறுப்பினர்களை தேரா மடத்துக்கு ஓட்டிச் சென்ற எம்.எல் கட்டார், குர்மீத்தின் ஆசிகளை பயபக்தியோடு பெற்றுக் கொண்டார். பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளை மீறி குர்மீத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது “சாதனைகளை” தேர்தல் பிரச்சார மேடையிலேயே பாராட்டிப் பேசினார் நரேந்திர மோடி. சமீபத்தில் மக்களவைக்குத் தேர்வான அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானியின் வெற்றிகளுக்கான பாராட்டுதல்களை குர்மீத் தெரிவித்திருந்தார்.
ஹரியாணா மாநில பாரதிய ஜனதா அரசின் மூன்று அமைச்சர்களான ராம்விலாஸ் ஷர்மா, அனில் விஜ் மற்றும் குரோவர் ஆகியோர் தேரா மடத்துக்கு சுமார் 1.12 கோடி நிதி வழங்கினர். மாநில கல்வித்துறை அமைச்சர் “பாரம்பரிய விளையாட்டுக்களை” வளர்ப்பதற்காக அரசு நிதியில் இருந்து குர்மீத்துக்கு 51 லட்சம் வழங்கியுள்ளார். குர்மீத் பார்ப்பனியத்தின் பாரம்பரிய விளையாட்டான பாலியல் வல்லுறவுகளில் சேம்பியன் அல்லவா?
தீர்ப்பு வெளியான ஓரிரு தினங்களுக்குப் பின் அது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங், கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு கைமாறாக பாலியல் வல்லுறவு வழக்கு திரும்ப பெறப்படும் என பாரதிய ஜனதா சார்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் ஆதரவு தங்களது “கடவுளுக்கு” இருப்பதை நன்கு உணர்ந்த்தாலேயே குர்மீத்தின் அடிபொடிகளால் இவ்வளவு பெரிய கலவரத்தை துவங்கி நடத்த முடிந்தது. ஆகஸ்டு 25 -ம் தேதி நீதிமன்றம் குர்மீத்தின் குற்றத்தை உறுதி செய்து நீதிபதி வாசித்த தீர்ப்பின் விவரங்கள் நீதிமன்றத்தைச் சூழ்ந்து நின்ற அவரது சீடர்களுக்கு தெரிய வந்த கணமே கலவரம் துவங்கியது. தீவைப்புகளும், கல்வீச்சுகளும் நடந்து கொண்டிருந்த நேரத்தில் போலீசார் முன்னேறிச் சென்று எச்சரிக்காமலும், தடியடி நடத்தாமலும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
கலவரம் துவங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் சாவு எண்ணிக்கை உயரத் துவங்கியது. அதே நேரம் குர்மீத்தின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினரோ தங்கள் கடவுளைச் சீண்டினால் இந்தியாவையே துண்டு துண்டாக்கி விடுவோமென தொலைக்காட்சி ஊடகங்களில் சவடால் அடித்துக் கொண்டிருந்தனர். ஜே.என்.யூ மாணவர்கள் இந்தியா ஒழிக என கோஷமிட்டதாக சித்தரிக்கும் ஒரு போலி வீடியோவை முன்வைத்து “தேசபக்தியை” கிண்டிக் கிளறிக் கொண்டிருந்த ஊடகங்கள், குர்மீத்தின் அடியாட்கள் வெளிப்படையாக சவால் விடுவதைக் கண்டுகொள்ளாமல் “வன்முறை, பொது அமைதி, தீவைப்பு, கல்வீச்சு” என நடுத்தர வர்க்க மக்களின் பொதுபுத்தியை சொரிந்து விட்டு டி.ஆர்.பி -யாக கல்லாகட்டினர்.
இந்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த போது ஊடகங்களில் பேசிய பாரதிய ஜனதாவின் உ.பி மாநில பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், “கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பாராமல் ஒரு பெண்ணின் வார்த்தைகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுப்பதாக” குமுறினார். மற்றொரு பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமியோ மடங்களின் குருமார்களை இது போன்ற வழக்குகளில் சிக்க வைத்து அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் சதி நடப்பதாக ஓலமிட்டார். இந்தியா டுடே தொலைகாட்சியில் பேசிய பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஷாஸியா இல்மி, “ஓட்டு வங்கி என ஒன்று இருப்பது எதார்த்தம்; இது போன்ற சாமியார்களின் பின்னே வாக்காளர்கள் திரண்டிருப்பது இன்னொரு எதார்த்தம்; எனவே குர்மீத்தின் ஆதரவைப் பெற நாங்கள் அவரது காலில் விழுந்ததில் என்ன தவறு?” என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே காஷ்மீரில் கலரவத்தை “கட்டுப்படுத்த” அப்பாவி மக்களில் ஒருவரை ஜீப் முனையில் கட்டி ஊர்வலம் சென்ற வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான பாதுகாப்புப் படையினரோ குர்மீத்தை பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர். பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே மாடல் ஹெலிகாப்டரில் பறந்த குர்மீத்துடன் அவரது மகள் ஹனிபிரீத்தும் மருமகனும் உடனிருந்தனர்.
மிக நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பின் குற்றம் இழைத்தவர் தண்டிக்கப்பட்டு விட்டார். ஆனால், அவர் குற்றமிழைப்பதற்கான திமிரை வழங்கிய ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை யார் தண்டிப்பது? சந்திரா சாமி துவங்கி பிரேமானந்தா, ஜெயேந்திரன், நித்தியானந்தா, அசாரம் பாபு, குர்மீத் ராம்ரஹீம் உள்ளிட்டோர் அம்பலமாகிவிட்டனர். இவர்களுக்கும் சரி, ஜக்கி, டபுள் சிரீ, பாபா ராம்தேவ் போன்றோருக்கும் சரி – குற்றமிழைப்பதற்கான அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுப்பது பொதுவாக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் என்றாலும் குறிப்பாக இந்துத்துவ பாரதிய ஜனதா தான்.
எரிவதைப் பிடுங்கும் போது, தானாகவே கொதிப்பது அடங்கி விடும் என்பதை மக்கள் உணர வேண்டிய காலம் நம் கண் முன்னே கடந்து கொண்டிருக்கிறது.
மேலும் :
- Ministers gave money, others sought blessings: How BJP, Congress dabbled with Dera chief Gurmeet Ram Rahim
- For many in BJP, support to and from Dera Sacha Sauda comes back to haunt
- Gurmeet Ram Rahim Singh convicted: Details of the 14-yr-old rape case
- Ram Rahim Was Used By Politicians – And He Used Them Right Back
- ‘Game Of Wits’: Ex-CBI Officer Alleges Pressure To Drop Ram Rahim Probe
- Not just mob frenzy: What is common between followers of Ram Rahim and Sri Sri Ravi Shankar?
- Why is Punjab increasingly turning to new gurus for comfort?
_____________
இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி