Monday, April 21, 2025
முகப்புசெய்திதிருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !

திருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !

-

திருச்சி மாவட்டம் 26-வது வார்டில் உள்ளது காஜாப்பேட்டை. இப்பகுதிக்கு அருகில் செயல்பட்டுவரும் பசுமடத்தின் சாணிக்கழிவுகளை அதிகாரிகளின் ஆசிர்வாதத்தோடு சட்டவிரோதமான முறையில் சாக்கடையில் கலந்துவிடுகிறது பசுமடத்தின் நிர்வாகம். மேலும், அரைகுறையாக தூர்வாரப்பட்டுள்ளதால் ஆங்காங்கே சாக்கடைகள் தேங்கி நின்று துர்நாற்றம் அடிப்பதாலும், கொசுக்கள் உற்பத்தியாவதாலும் அடிக்கடி காய்ச்சல் பரவி பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. குப்பைத் தொட்டி வசதியில்லாததால் ஆங்காங்கே கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

இப்பகுதியில் 600 குடும்பத்திற்கும் சேர்த்து வெறும் 5 ஆழ்குழாய் மற்றும் 7 குடிநீர் குழாய்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் சில ஆழ்குழாய்கள் நீர் வரத்து இன்றியும், சில பழுதடைந்தும் உள்ளன. குடிநீர் சேறும் சகதியுமாக கலந்து வருவதுடன் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 3 குடங்கள் மட்டுமே கிடைப்பதால் கடந்த சில மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்குள்ளாகி இருந்து வருகிறது.

இதையொட்டி மக்கள் அதிகாரம் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை திரட்டி 31.05.2017 அன்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனுகொடுக்கப்பட்டது. மறுநாளே தூர்வாருவது, குடிநீர் குழாய் அமைப்பது பொதுக்கழிப்பிடத்திற்கு தேவையான போர் போடுவது என சில வேலைகள் நடந்தது. அடுத்தடுத்து, தூர்வாரும் பணிகள் மந்தநிலையில் நடந்ததால் பகுதி இளைஞர்கள் நேரில் சென்று வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் மாநகராட்சியை அம்பலப்படுத்தியும், போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அதன் பின், 31.08.2017 அன்று அரியமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்து பகுதியில் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்களுடன் தெருமுனைப் பிரச்சாரமும் செய்யப்பட்டது.

முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்கும் வகையில் (இரண்டு நாளைக்கு முன்பே) ஒட்டப்பட்ட சுவரொட்டியைப் பார்த்து உளவுப்பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். பசுமடத்தை நடத்துவது RSS  -காரர்களா என விசாரித்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகளை பேசச் சொல்கிறோம் எனக் கூறினர். அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தொடர்பு கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

பேச்சுவார்த்தையில், AC வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ரகுராமன், காவல் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் மக்களின் பிரச்சினைகளை விளக்கினார். அதன் பின் மக்கள் தங்கள் குறைகளை கூறினர். மேட்டுக்குடிகள் வசிக்கும் தில்லை நகரிலும், கே.கே நகரிலும் அனைத்து வசதிகளையும் செய்து தரும் அதிகாரிகள், அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்றாமல் சாதாரணப் பிரச்சினை போல கடந்து செல்லும் விதத்தில் அதற்கு விளக்கமளித்தனர்.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ”ஏன் சார் நாங்க கேட்டா தான் எல்லாத்தையும் செய்வீங்களா?” என ஒரு பெண்மணி கேட்டதற்கு நேர்மையாக பதிலளிக்க தெரியாத AC ஆத்திரமடைந்தார். மேலும், மக்களை குறைகூறும் வகையில் சாக்கடையில் மக்கள் குப்பையை கொட்டுவதாகக் கூறினார். குப்பைத் தொட்டியில்லாத போது மக்கள் குப்பையை எங்கு போடுவார்கள் என்ற எளிமையான கேள்விக்குப் பின் ஞானோதயம் வந்த AC, ‘வீட்டிற்கே வந்து மாநகராட்சி பணியாளர்கள் குப்பையை வாங்கி செல்வார்கள். நீங்கள், குப்பையை தரம் பிரித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று மாநகராட்சியை முழுமையாக தனியாரிடம் தாரை வார்க்கும் அரசின் (சதித்)திட்டத்தை விளக்கினார்.

பசுமடத்தை மூடுவதை பற்றி கேட்டபோது, Notice அனுப்புகிறோம் என இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததை உளறிக் கொட்டினார் உடன் இருந்த ஒரு அதிகாரி. மேலும், ”எப்போது மூடுவீர்கள் ?” எனக் கேட்டபோது, அதற்கு தங்களுக்கு அதிகாரமில்லை எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட PRPC மாவட்ட செயலர் தோழர் முருகானந்தம் சுற்றுச்சூழல் (Environmental Act) சட்டப்படி என பேச ஆரம்பித்தவுடன் சுதாரித்துக்கொண்ட AC எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என மாற்றிப் பேசினார்.

மேலும், 31.05.17 -ல் மனுகொடுத்தும் இதுவரை Notice கூட அனுப்பாததை தோழர் முருகானந்தம் கேள்வி கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல் திணறி, ”அத மூடுவதற்கு நாங்க Ensure (உத்திரவாதம்) பண்றோம்” என சமாளித்தார். மேலும், ஒரு மாத காலத்திற்குள் மூட வேண்டும் எனக் கெடு வைத்ததையும் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எழுத்துப்பூர்வமாக தருமாறு கோரியதை ஏற்றுக்கொண்டு எழுதிக்கொடுத்தனர். அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதை மக்களிடம் அறிவிக்கும் வகையில், 31.08.17 அன்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்போது, ஒரு பெண்மணி “இதுக்கப்புறமும் செஞ்சு கொடுக்கலன்னா ரோட்ட போய் மறிப்போம். அவனே நம்மள தேடி வருவான்” எனக் கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு – 94454 75157

_____________

இந்த போராட்டக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க