Monday, April 21, 2025
முகப்புசெய்தி“பணமதிப்பிழப்பு – GST – நீட்” உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பேரழிவு ஆயுதங்கள்...

“பணமதிப்பிழப்பு – GST – நீட்” உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பேரழிவு ஆயுதங்கள் !

-

திருவள்ளுர் (மேற்கு) மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 12.09.2017 அன்று மாலை 5.30 மணி முதல் 07.30 மணி வரை பட்டாபிராம் மேம்பாலம் அருகில் “பணமதிப்பு நீக்கம் – ஜி.எஸ்.டி – நீட் உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பேரழிவு ஆயுதங்கள்!” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று நடத்தினார். தலைமையுரையில் தெருமுனைக் கூட்டத்தின் நோக்கத்தையும், பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி பேசினார்.

சிறப்புரை ஆற்றிய மாவட்டச் செயலாளர் தோழர் முகிலன், “ மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். மோடி அரசின்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று பத்திரிக்கை, ஊடகங்களால் புகழ்ந்து பேசப்பட்டது. அண்

மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை படுதோல்வி என காறித் துப்பியுள்ளது.

இதனால் மக்கள்பட்ட துன்பங்களை வார்தைகளால் சொல்லி மாளாது. இந்தியா முழுக்க ஏறக்குறைய 152 பேர் இறந்து போயுள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2% அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளின் கருப்பு பணங்களை எல்லாம் வெள்ளையாக மாற்றித் தந்துள்ளார் மோடி. கருப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் ஆகியவை ஒழிக்கப்படும் என அறிவித்தார். இதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. மாறாக கருப்புப்பணம், ஊழல், தீவிரவாதத்தின் மொத்த உருவாக பிஜேபி மாறியுள்ளது.

மோடியின் ஒவ்வொரு அறிவிப்பிற்கு பின்னும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் ஒளிந்து கொண்டுள்ளது. உழைக்கும் மக்கள் மீது அடுத்தடுத்த பேரிடியாக GST – NEET ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. WTO உத்தரவை நிறைவேற்றும் விதமாக சிலிண்டர் மானியம், ரேசன் மானியம் ஒழிக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டின் வளங்கள், மக்களின் உரிமைகள், போராடிப் பெற்ற சட்டங்கள், விவசாயம், சிறுதொழில், சிறுவணிகம், உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் ஆகியவை முதலாளிகளின் நலனுக்காக காவு கொடுக்கப்படுகின்றன.

இதனையே சாதனையாகவும், நாட்டை வளர்ச்சி, வல்லரசாக்கும் பாதையாகவும், இதன் மூலம் புதிய இந்தியா பிறக்க போவதாகவும் ஓயாமல் பொய்ப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளை மிக வேகமாக அமல்படுத்தியும், தலித், சிறுபான்மை மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்து இந்துமதவெறி பாசிச நடவடிக்கைகளையும் அரங்கேற்றி வருகிறது.

இதனை முறியடிக்க புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு போராடுவதே ஒரே வழி !” என்று விளக்கி பேசினார். கூட்டத்தில் கிளை சங்க தோழர்கள், உள்ளுர் பகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளுர் மேற்கு மாவட்டம்.

***

“பணமதிப்பிழப்பு – GST – நீட்” உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பேரழிவு ஆயுதங்கள்!” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

கும்முடிப்பூண்டியில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு புஜதொமு மாவட்டச் செயலாளர் தோழர் கே.எம்.விகேந்தர் தலைமையேற்றார். அவர் தனது உரையில், “தற்போது தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் இணைய வேண்டிய தருணமிது. அதை உணர்த்தும் வகையிலே தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்திவருகிறோம்.

நீட் தேர்வினை தனித்துப் பார்க்க முடியாது. மோடி அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்துமே உழைக்கும் மக்களுக்கு எதிரானவைகளாகவே உள்ளன. ஒருபுறம் பணமதிப்பு நீக்கம், GST வரி விதிப்பு போன்ற தொடர் பொருளாதார தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கும் போதே, இந்து மதவெறி பாசிச நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது என்பதை உள்ளூர் அனுபவங்களை உதாரணமாக கொண்டு விளக்கி, தற்போது மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுகோள் விடுத்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர்.ம.சி.சுதேஷ்குமார் தனது கண்டன உரையில், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறாததையும், அதுகுறித்து சற்றும் கவலைகொள்ளாமல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படுவதையும் சுட்டிக் காட்டி பேசினார். குறிப்பாக ரூ.500, 1000 செல்லாது என அறிவித்த பின், மக்கள் ATM வாசலில்  மயங்கி விழுந்து பலர் செத்து மடிந்தார்கள். சிறு-குறு தொழில்கள் முற்றிலும் முடங்கின.

மாட்டுக்கறிக்கு தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகர திட்டங்களால் விவசாயம் அழிக்கப்பட்டது. GST வரி விதிப்பு மூலம் சட்டப்பூர்வ பகற்கொள்ளைக்கு வழிவகுத்தார் மோடி. தற்போது நீட் தேர்வு கொண்டு வந்து சாதாரண மாணவர்களின் மருத்துவக் கனவைக் கலைத்தார். மோடி அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானதாக உள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு சமூக மாற்றம் தான். அப்படிப்பட்ட சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தப் போவது   ஓட்டுக்கட்சிகளா? அல்லது கம்யூனிச சித்தாந்தத்தை ஏந்திக் கொண்டிருக்கின்ற புரட்சிகர அமைப்புகளா? என்பதை மக்களே தீர்மானியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ஜி.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்த  கண்டன கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படக்கூடிய கிளை மற்றும் இணைப்பு சங்க தொழிலாளார்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மோடி அரசின் இந்து மதவெறி பாசிச நடவடிக்கையையும், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் எதிர்த்து முழக்கமிடப்பட்டது.

மேற்கண்ட தலைப்பின் கீழ் மணலி பகுதியிலும் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்துக்கு பு.ஜ.தொ.மு உறுப்பினரும், SRF எம்ப்ளாயீஸ் யூனியனின் பொதுச் செயலாளருமான தோழர் பி.ஆர் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் SRF எம்ப்ளாயீஸ் யூனியனின் துணைத்தலைவரும், கொடுங்கையூர் 34-வது வட்டச் செயலாளருமான தோழர் துரைசாமி தமது கண்டனத்தைப் பதிவு செய்தார். இறுதியாக மாவட்டப் பொருளாளர் தோழர் செல்வகுமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

***

காஞ்சிபுரத்திலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் “பணமதிப்பிழப்பு – GST – நீட்” உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பேரழிவு ஆயுதங்கள்!” என்ற தலைப்பில் 09.09.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார்  20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர்கள் கண்டன உரையாற்றி முழக்கமிட்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்.

_____________

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க