நீங்கள் இணையத்தில் ஏதேனும் பொழுதுபோக்கு வலைத்தளங்களுக்கோ அல்லது விளையாட்டு வலைத்தளங்களுக்கோ சென்றால் உங்களை நடிகர் பிரகாஷ்ராஜும், ’பாகுபலி’ ராணாவும் ரம்மி விளையாட அழைப்பதை விளம்பர வீடியோக்களில் பார்த்திருக்கலாம். அது தவிர ”நான் இணையத்தில் ரம்மி விளையாடி ரூ.2,50,000 ஜெயித்திருக்கிறேன், நீங்களும் ரம்மி விளையாடுங்க”, ”ரம்மி விளையாடி ரூ.1500 போனஸ் தொகையை உடனடியாகப் பெறுங்கள்”, ”ரம்மி சட்டப்பூர்வமானது – உடனடியாக இணையுங்கள்” என்பது போன்ற விளம்பரங்களையும் பார்த்திருக்கலாம்.
இந்த விளம்பரத் தூண்டில்களில் சிக்கி ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் பணத்தை இழந்து போதை அடிமைகளாகி வருவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு கணமும் அதிகரித்து வருவதை பத்திரிக்கைகளில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக்கிற்கு நிகராக இளைஞர்களை ஆட்கொள்ளும் இந்த சூதாட்டச் சீரழிவின் பிரம்மாண்டம் பற்றித் தெரிய முதலில் இதன் ஆண்டுச் சந்தை மதிப்பை பார்ப்போம். ஆன்லைன் ரம்மியின் நடப்புச் சந்தை மதிப்பு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஆகும். இதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 50%-ஆக இருக்கிறது.

இந்த பிரம்மாண்ட சந்தையின் பொருள் என்ன?
”காசு வைத்துச் சூதாடும் ‘ரம்மி’ ஆட்டம் சட்டப்பூர்வமானது தான் என இந்த ரம்மி வலைத்தளங்கள் மட்டுமல்ல, ’மாட்சிமை’ தாங்கிய உச்சநீதிமன்றமும் இது சட்டப்பூர்வமானது என்றே அறிவித்துள்ளது.
”ரம்மி , ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு; அது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு அல்ல; ஆகவே அதில் பணம் கட்டி விளையாடுவதை சூதாட்டமாகக் கருத முடியாது” எனக் கடந்த 1967-ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இது போதாதென்று, ”இணையதளத்தில் பணம் கட்டி ’ரம்மி’ ஆடுவது சட்டவிரோதமானது அல்ல; அதுவும் சாதாரண விளையாட்டு போன்றது தான்” எனக் கடந்த 2015, ஆகஸ்ட்-13 அன்று ஓர் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தாயக்கட்டை உருட்டி, ஒரு போரையே நடத்திய புண்ணிய ‘பாரதத்தில்’ ‘நீதி’த் துறை ஒரு சூதாட்டத்தை அறிவார்ந்த விளையாட்டாக அங்கீகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
உண்மையில் ரம்மி அறிவார்ந்த விளையாட்டு தானா? ரம்மி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் எதனை அடிப்படையாகக் கொண்டது? நிகழ்தகவை (அதிர்ஷ்டத்தை) அடிப்படையாகக் கொண்டதா, அல்லது அறிவை அடிப்படையாகக் கொண்டதா ?
ரம்மி உள்ளிட்ட அனைத்து சீட்டாட்டங்களிலும், யாருக்கு எந்தெந்த சீட்டுக்கள் வரும் என்பது யாருக்கும் தெரியாது (போங்காட்டம் ஆடாத வரை). நமக்கு வாய்க்கப் பெற்றிருக்கும் சீட்டுக்கள், அந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறுவதற்கு உகந்த சீட்டுக்களா?, இல்லையா? என்பதைப் பொறுத்து தான் நமது வெற்றி தோல்வி பெரும்பாலும் அமைகிறது. இதில் அறிவின் பங்களிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தாக்கம் செலுத்துகிறது. ஆகவே எந்த சீட்டாட்டத்தைப் பொறுத்தவரையிலும் நிகழ்தகவின் (அதிர்ஷ்டத்தின்) அடிப்படையில் தான் நமது வெற்றி, தோல்விகள் அமைகின்றன. வரும் சீட்டுக்களின் ஒரே பூவில் அடுத்தடுத்த வரிசையில் சீட்டுக்கள் வருவதோ இல்லை ஜோக்கர் கார்டுகள் வருவதோ அறிவின் அடிப்படையில் அல்ல.
மற்றவர்கள் போடும் மற்றும் எடுக்கும் சீட்டுக்களை வைத்து அவர்கள் வைத்திருக்கும் சீட்டுக்களை ஓரளவு கணிக்க முடியுமென்றாலும் அதுவும் கூட ஆட்டத்தில் நீடிக்கலாமா, தொடர்ந்து முயலலாமா என்பற்குத்தான் உதவும்.
எதார்த்தம் இப்படி இருக்கையில் உச்சநீதிமன்றமோ, ரம்மி அறிவை அடிப்படையாகக் கொண்டு விளையாடும் விளையாட்டு என்று கூறி அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.இதே ரம்மி சீட்டு போல ஆன்லனை சூதாட்டங்கள் பல நடத்தப்படுகின்றன. கிரிக்கெட், கால்பந்து போட்டி முடிவுகள், இன்று தங்கத்தின் விலை உள்ளிட்டு தினுசு தினுசாக பல இருக்கின்றன. இவை அனைத்தும் குருட்டாம் போக்கில் கணிப்புக்களை செய்தால் பணம் வரும் என ஒரு மாய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
சட்டப்பூர்வமானது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி தான் இன்று பல நிறுவனங்கள், ரம்மி விளையாட்டை தங்கள் வலைத்தளங்களில் நடத்துகின்றன. முகம் தெரியாத பல்வேறு பயனர்கள் ஒரே ஆட்டத்திலோ தனித்தனி ஆட்டத்திலோ, பணம் கட்டி கலந்து கொள்ளும் வகையில் இந்த வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் பணம் கட்டி விளையாடி யார் ஜெயித்தாலும், இந்த இணையதளம் தனக்கான கமிஷனை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை மட்டும் அவர்களிடம் கொடுக்கும்.
இது தவிர ’டோர்னமெண்டு’கள் (Tournaments), ஊக்கப்பரிசுகள் என பல்வேறு வழிவகைகளில் இணையவாசிகளை இந்த விளையாட்டில் அடிமையாகச் செய்கின்றன இந்த ’இணைய ரம்மி’ வலைத்தளங்கள். இந்நிறுவனங்களின் பெருத்த இலாபத்தைக் கண்டு பல்வேறு பன்னாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்கள் இவற்றில் தங்கள் முதலீடுகளைக் கொட்டுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கனடாவைச் சேர்ந்த க்ளைர்வெஸ்ட் (Clairvest) என்ற முதலீட்டு நிறுவனம், ஏஸ்-டூ-த்ரீ(Ace2Three) என்ற இணைய ரம்மி நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை சுமார் 474கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது போன்று பல்வேறு இணைய ரம்மி நிறுவனங்களின் மொத்த மதிப்பைக் கணக்கில் கொண்டாலே இந்த இணையச் சூதாட்டத் தொழிலின் பரிமாணம் புரியும்.

தமிழகத்தில் மட்டும் இணைய ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 1 இலட்சம். இத்தகைய வலைத்தளங்களில், தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்யப்படும் புதிய பயனர் பதிவு மட்டும் சராசரியாக 15,000 என ’தி இந்து’ நாளிதழ், ஒரு பிரபல ரம்மி இணையதளம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், ஒரு குறிப்பிட்ட இணைய ரம்மி வலைத்தளத்தில், ஜூலை 2017-இல் மட்டும் சுமார் 4 இலட்சம் முறை ரம்மி விளையாடப்பட்டிருக்கிறது என்றும் இதில் 6% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ’தி ஹிந்து’ நாளிதழ் தெரிவிக்கிறது.
சூதாட்டம், அதன் இயல்பிலேயே, அதில் ஈடுபடும் நபர்கள் எத்தனை முறை தோற்றாலும், அதிர்ஷ்டத்தின் மீதான அவர்களது நம்பிக்கையின் பெயரில், அவர்களை மீண்டும் மீண்டும் சுண்டி இழுக்கும் தன்மையுடையது. தமிழகத்தில், லாட்டரிச் சீட்டு, சுரண்டல் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி, குதிரை ரேஸ் என காலங்காலமாக சூதாட்டம் பல்வேறு வடிவகளில் மக்களின் தாலியை அறுத்துள்ளது. தற்போது அது இணைய வடிவம் எடுத்துள்ளது.
ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் ஒரு முறை விளையாடி வெல்ல வேண்டும் என்ற நப்பாசையும், தோல்வியடைந்தால் ஒரு முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டுதலும் இணையப் பயனர்களை இந்தத் தூண்டிலில் சிக்க வைக்கிறது. இதில் இலட்சக் கணக்கில் பணம் இழந்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் மனச்சிதைவு ஏற்பட்டு, தற்கொலை வரை போக வாய்ப்புகள் உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூதாட்டங்களில் சிக்கி பொருளாதார நெருக்கடிகளுக்கும் மனச் சிதைவுகளுக்கும் ஆட்படுவதில் முதலிடம் வகிப்பது ஆஸ்திரேலியர்கள் தான் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
இதன் தாக்கத்தைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநில அரசு, இணைய ரம்மி சூதாட்டத்தை ஒரு அரசாணை வெளியிட்டு தடை செய்துள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கும் சூழலில், எடப்பாடி – ஓபிஎஸ் கும்பலோ பாஜகவின் அரசியல் சூதாட்டத்தில் தங்கள் தலைகள் வெட்டப்படாமல் தவிர்க்கவே பெருஞ்சிரத்தையோடு போராடிக் கொண்டிருக்கிறது.
ஊருக்கு உபதேசம் சொல்லும் கமலஹாசன் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இணைய ஒளிபரப்பில் கூட இந்த ரம்மி சர்க்கிள் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.
லாட்டரி, குட்கா, டாஸ்மாக் ஆகியவற்றின் வரிசையில் தற்போது மக்களைச் சீரழிக்க புதியதாக களத்தில் இறங்கியிருக்கும் இந்த சூதாட்டச் சீரழிவிலிருந்து இந்தத் தலைமுறையை மீட்கவேண்டிய கடமை அரசிற்கே உண்டு. ஆனால் அரசே, சூதாட்டத்தை முன்நின்று நடத்தும் போது நாம் என்ன செய்வது? நாம் குடியிருக்கும் பகுதியில் விபச்சாரத் தொழிலை நடத்தும் ஒரு புரோக்கரை கண்டுபிடித்தால் என்ன செய்வோமோ, அதை அரசிற்கும் செய்வது தானே முறை?
மேலும் படிக்க:
- Finding the way around the house of cards
- SC clears air, online rummy not gambling
- Canada’s Clairvest buys majority stake in rummy portal Ace2Three for $74M
__________________________________
இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி