
வேலூர் மாவட்டம் ஆம்பூர் மருத்துவமனை வளாகத்தில் கடந்த (ஆகஸ்டு 15, 2017) சுதந்திரதினமன்று கொடியேற்றப்பட்ட போது, அங்கிருந்த மருத்துவர் கென்னடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல தேஷபக்தர்களுக்கு கடும் ‘மன உளைச்சலை’ ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஒரு தேஷபக்தர் ஆம்பூர் போலீசில் புகார் கொடுக்க, ஆம்பூர் போலீசும் துரிதமாக வழக்கை விசாரித்து வந்தது.
இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார் கென்னடி. இம்மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், தேசியக் கொடியை அவமதித்தல் என்ற மாபெரும் ‘பாதகத்தைப்’ புரிந்த கென்னடிக்குப் பிணை வழங்க, பிணைத்தொகை ரூ.10,000 -த்தோடு ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.
அதன்படி கென்னடி, தனது மருத்துவமனை வளாகத்தில், செப். 12 -ம் தேதி முதல் ஒரு வாரகாலத்திற்கு தினமும் காலையில் 10:00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். அதோடு அவரே தேசியகீதத்தைப் பாட வேண்டும். அதே போல மாலையில் அவரே தேசியக் கொடியை இறக்க வேண்டும். அதனை அப்பகுதி போலீசு ஆய்வாளர் தினமும் உடனிருந்து ஆய்வு செய்ய வேண்டும். இவை தான் நீதிபதி பிரகாஷ் விதித்த நிபந்தனைகள். இவையனைத்தும் சரிவர நடக்கிறதா என மாவட்ட நீதிபதிக்கு அறிக்கையும் அனுப்பவேண்டும். தற்போது இந்த நிபந்தனைகளை அன்றாடம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் மருத்துவர் கென்னடி.
தேசியக் கொடி ஏற்றும் போதும், தேசியகீதம் பாடப்படும் போதும் புலியே எதிரில் வந்தாலும் அசரக்கூடாது என்னும் போது ஒரு போன் காலுக்கு செவிசாய்க்கலாமா? புலியோ, பாம்புகளோ வந்தால் கூட பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டு அனைவரும் அப்படியே சிலையாக நிற்க வேண்டும், ஓடினால் நீதிமன்றம் கடுமையாக தண்டித்து விடும். சரி, ஒரு இடத்தில் கொடியேற்றும் போது பாக் ‘தீவிரவாதிகள்’ வந்து சுட்டால் போலீசும் இராணுவமும் என்ன செய்ய வேண்டும்? திருப்பிச்சுட்டால் அது குற்றமா இல்லையா? அவர்களுக்கும் தண்டனை அளித்தால்தானே தேசியக் கொடியின் ஆன்மா சாந்தியடையும். ஆனால் செய்வார்களா? இல்லை கொடியேற்றும் போது திருவாளர் மோடிக்கு மாரடைப்பு வந்து விழுவதாக வைத்துக் கொள்வோம். காப்பாற்றுவார்களா இல்லை போகட்டும் என விட்டு விடுவார்களா?
தமிழகத்தில் தேஷபக்தியை வளர்க்க நீதிமான்கள் இவ்வாறு போராடிக் கொண்டிருக்க, மத்தியப்பிரதேசத்தில் தேஷபக்தியை வளர்க்க ஒரு அமைச்சர் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
ம.பி.யில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசின் கல்வித்துறை அமைச்சரான விஜய்ஷா, ஒரு திட்டத்தை சோதனை முயற்சியாக சாட்னா என்றொரு மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தியிருக்கிறார். தினந்தோறும் வகுப்புகளில் வருகைப் பதிவு சரி பார்க்கப்படும் போது மாணவர்களின் பெயர்களை ஆசிரியர் கூப்பிட்டதும், மாணவர்கள் “உள்ளேன் ஐயா” எனக் கூறுவதற்குப் பதிலாக இனி “ஜெய்ஹிந்த்” எனக் கூறி தனது இருப்பைப் பதிவு செய்ய வேண்டும். இது தான் அந்தத் திட்டம்.
இதனைத் தற்போது சோதனை முயற்சியாக செய்து வருவதாகவும், அதன் பின்னர், முதல்வரிடம் அனுமதி கேட்டு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு தேஷபக்தி வளருமாம். இதையே இனி வந்தே மாதரம், பாரத்மாதாகி ஜே, இந்து ராஷ்டரகி ஜே என மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. துப்பாக்கி முனையில் வராமல், இந்துராஷ்ட்ரம் என்ன கருணையாலா வர முடியும்?
ஆனால் தேஷபக்த நீதிபதிகளையும் ‘குறை’ சொல்ல முடியாது. எப்போது பார்த்தாலும், இந்திய (மத்திய) அரசுக்கு எதிராகவே ‘சவுண்டு’ கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பெரும்பான்மை ‘ஆண்டி – இந்தியன்களின்’ (Anti – Indians), மனதில் தேஷபக்தியை விதைத்துப் பூத்துக் குலுங்கச் செய்யத்தான் நமது நீதிபதிகள் மெனக்கெடுகின்றனர். ‘இல.கணேசன்’ சொன்னது போல, ஒரு நாட்டிற்காக இந்த மாநிலத்தையே ‘தியாகம்’ செய்யும் அளவிற்கு தேஷபக்தியை நமக்கு வளர்க்கத்தான் நீதிபதிகள் இடையறாது சிந்திக்கின்றனர். அதற்குத்தான் பிட்டுப்பட சினிமா தியேட்டர்களில் கூட ‘ஜன கன மண’வும், அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரமும்’, ஒலிக்க உத்தரவிட்டனர். ஆனாலும் தமிழகத்தில் எந்த ஒரு பலனுமில்லை. தமிழகம் ‘நீட்’ தடைக்காக மாட்சிமை தாங்கிய நீதிமன்ற உத்தரவையே எதிர்த்துக் கலகம் புரிந்துள்ளது.
நீதிபதிகளும் சளைத்தவர்கள் இல்லை. தியேட்டரில் தேசியகீதம் பாடச் சொன்னாலும், ‘தேஷ’பக்தி வளரமாட்டேன் என்கிறது என்பதால் தான் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடச் சொன்னார்கள். அதுவும் வேலைக்காகாது என்பதால் இப்போது சிறை, தண்டனை என்று போகிறார்கள்.
சமூகவலைத்தளங்களில், ‘நீட்’ எதிர்ப்பு போன்ற ‘தேஷ’விரோத கருத்துக்கள் பரவுவதைத் தடுத்து தேஷபக்தியை வளர்க்க, இனி சமூக வலைத்தளங்களில் ‘குட்மார்னிங்’ சொல்வதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’தும், ‘குட்நைட்’டிற்குப் பதிலாக ‘வந்தேமாதர’மும் தான் சொல்லவேண்டும் என்று கூட இவர்கள் உத்தரவிடலாம். மீறினால் அன்றாடம் ஐந்து தேசபக்தி ஸ்டேட்டஸ்கள் போட வேண்டும் இல்லையேல் சிறைத் தண்டனை என்றும் கூட ‘அச்சுறுத்தலாம்’.
நீதிபதிகள் எதற்கு இவ்வளவு சிரமப் படவேண்டும்? தேஷபக்தியை வளர்க்க குடிமக்கள் அனைவரும், காலையில் கழிப்பறையில் கூட வந்தேமாதரம் என்று சொல்லித்தான் அன்றாட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என உத்தர விட்டால் தான் என்ன? அதைக் கண்காணிக்க ‘தேஷபக்தாள்களான’ ஸ்வயம்சேவகர்கள் அனைவரையும் களத்தில் இறக்கி விட்டு, காலையில் அனைத்து வீடுகளின் கழிப்பறைக் கதவுகளிலும் காதை வைத்து, ‘வந்தேமாதரம்’ ஒலிக்கிறதா? என கண்காணிக்கச் சொன்னால், ‘பேஷாக’ செய்ய மாட்டார்களா என்ன?
மேலும் படிக்க:
- This is why the Madras HC has ordered a doctor to hoist the National Flag for one week
- No more ‘Present sir’, MP school students to answer roll call with ‘Jai Hind
_________________
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி