தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 3
வானதியின் சைலாக் ஊழல், கே.டி.ராகவனின் எட்செர்வ் ஊழல் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. தேசிய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்து மக்கள் பணத்தை ஆட்டையைப் போடுவது, பங்குச் சந்தையில் முறைகேடுகளின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுப்பது, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகளுக்கு இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தொடர்பு போன்ற ஒற்றுமைகள் தற்செயலானதல்ல.
வெளியான சைலாக் மற்றும் எட்செர்வ் இரண்டும் வகைமாதிரிகள் மட்டுமே. ஒவ்வொரு பா.ஜ.க -பிரமுகருக்குப் பின்னாலும் இதே பின்னணியுள்ள வெளியாகாத முறைகேடுகள் பல இருக்கும் என்பதையே இந்த ஒற்றுமைகள் காட்டுகின்றன.
ஊழல்வாதிகளையும், கருப்புப் பண முதலைகளையும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஞானஸ்நானம் செய்து வைக்கும் பா.ஜ.க-வின் கதையை இனி பார்ப்போம்.
பாரதீய ஜனதா கட்சி தேசிய அளவிலான தீவிரமான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் மூலம் பலரையும் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. அ.தி.மு.க ஊழல் மாஃபியாவின் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், A1- குற்றவாளிக்காக நீதியரசர் குன்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதிரவைத்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோர் பா.ஜ.க -விற்கு சமீபத்திய வரவுகள்.

அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் கோவை லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் 2015 -ம் ஆண்டு பா.ஜ.க கட்சியில் இணைந்ததைப் பற்றி ஏற்கனவே வினவில் எழுதியிருந்தோம். மார்ட்டின் யாரென்று தெரியாதவர்களுக்காக, அவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
சான்டியாகோ மார்ட்டின் கோவையை சேர்ந்த தொழிலதிபர். மியான்மரில் (பர்மாவில்) ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த மார்ட்டின் இந்தியா திரும்பிய பின், மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற லாட்டரி கம்பெனியை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.
விற்பனையாகாத லாட்டரிகளை வெற்றி பெற்றதாக அறிவிப்பதில் தொடங்கி, போலி லாட்டரிகளை அச்சடித்து விற்பது, லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பது, இரண்டு இலக்க லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என்று சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் உழைக்கும் மக்கள் பணத்தை கொள்ளையடித்தார் மார்ட்டின்.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பஞ்சாப் என பல மாநிலங்களில் தனது கள்ள லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மார்ட்டின். லாட்டரியின் மூலம் ஹவாலா பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெள்ளையாக மாற்றுவது, வருமானவரி முறைகேடுகள் என்று சகலவிதமான பொருளாதாரக் குற்றங்களிலும் ஈடுபட்டுவந்தார் மார்ட்டின். அதற்காகவே லாட்டரி மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களையும் தொடங்கி மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைத்து நடத்திவருகிறார். மார்ட்டினின் மனைவி லீமா ரோசின் பெயரில் கோவையில் ஒரு செவிலியர் கல்லூரியும், ஹோமியோபதி கல்லூரியும் இயங்கி வருகின்றன. மார்ட்டின் குழுமங்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ.7,000 கோடியைத் தாண்டும்.
மார்ட்டினின் லாட்டரி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்காக அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கேரளாவில் மட்டும் 32 வழக்குகள் சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 -ம் ஆண்டு கேரளத்தில் நடந்த லாட்டரி மோசடியின் மூலம் சிக்கிம் மாநில அரசை சுமார் ரூ.4500 கோடி மோசடி செய்து ஏமாற்றியதாக மார்ட்டினின் மீது வழக்கு உள்ளது.
1990 -களில் அ.தி.மு.க. அரசுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்ட்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். பின்னர் 2001 -ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பேரம் படியவில்லை. இதையடுத்து தான் 2003 -ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது.

கடந்த 2007 -ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2011 -ல், நில மோசடி வழக்கு, போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமீனில் வெளியே வந்துள்ளார் மார்ட்டின்.
2007 -ம் ஆண்டு கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான தேசாபிமானி இதழுக்கு மார்ட்டின் ரூ. 2 கோடி நன்கொடை அளித்தது வெளியாகியது. தனிநபருக்காக வாங்கவில்லை, கட்சிக்காகத்தான் வாங்கினோம் என்று சப்பைகட்டு கட்டினார்கள் மார்க்சிஸ்டுகள். 2011 -ம் ஆண்டு கருணாநிதி வசனத்தில் உருவான ‘இளைஞன்’ திரைப்படத்தை தயாரித்ததே மார்ட்டின் தான். வசனத்திற்காக கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 45 லட்சம். இவ்வாறு தொடக்கம் முதலே தனது கள்ள லாட்டரி தொழிலை நடத்த அரசியல் கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி வந்தவர் தான் மார்ட்டின்.
இந்த வகையில், தனது கல்வி வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே எஸ்.ஆர்.எம் பச்சமுத்து நடத்தி வரும் இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயர்ப்பலகை கட்சியில் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இணைகிறார். சென்ற 2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி தமிழகம் வந்த போது அதே மேடையில் வாளுடன் காட்சியளித்தார் லீமா ரோஸ்.

பாஜகவில் சேர்ந்த மார்ட்டினின் மகனான சார்லசின் சகோதரர் டைசன், தமிழர் விடியல் கட்சி என்ற அமைப்பைத் துவங்கி, மே-17 இயக்கத்துடன் செயல்பட்டுவந்தார். தற்போது திருமுருகன் காந்தியுடன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அப்பா முன்னர் திராவிட கட்சிகளுடன் உறவாடி தனது கள்ள லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை நடத்தியவர். அம்மா, கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் கட்சியின் உறுப்பினர். ஒரு மகன் தமிழ் தேசியவாதி, சிறையில் இருக்கிறார். இன்னொரு மகன், பா.ஜ.க உறுப்பினர். என்ன தலை சுற்றுகிறதா?
ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை பா.ஜ.க-வில் இணைத்தது யார்?
இதைப்பற்றி திருச்செந்தூர் பாஜக பிரமுகர் பாலசுப்பிரமணிய ஆதித்யன் சொல்வதைப் பார்ப்போம்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை பாஜகவில் இணைத்தது யார்?…ஏன்?…
திருமதி வானதி சீனிவாசன் கணவர்
சு.சீனிவாசன் அவர்கள் இப்பொழுது
மத்திய அரசின் வழக்குரைஞர்.
மார்ட்டின் 1,600 கோடி சொத்து
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையில் வேறு உள்ளது.
லாட்டரி மார்ட்டின் 1,600 கோடி சொத்துக்கு NOC வாங்கி கொடுக்க பேரமானதாக கேள்வி!!.
மத்திய மந்திரி,,வானதி இவர்களின் கடும் முயற்சியால் இந்த இணைப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. பலரும் இதை ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதினாலும் வானதியின் முயற்சியை கண்டு பலர் முகம் சுளித்தனர்.
பாரத பிரதமர் மோடி அவர்கள் அகில இந்திய அளவில் ஊழல்வாதிகளை சாட்டை எடுத்து சுழற்றி வரும் வேளையில் தமிழகத்தையும் இப்பிரச்சனை விடாது போல தெரிகிறது.
சன்மான தொகையில் கோவை பகுதியில் பல கோடியில் வாங்கப்பட்ட பூமிகள் குறித்து விசாரணையும் நடைபெறப் போவதாகவே தகவல்கள். – பாலசுப்பிரமணிய ஆதித்யன்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.கவில் இணைந்தது குறித்து நியூஸ் மினிட் இணையப் பத்திரிக்கை கேட்டதற்கு, ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?‘ என்று தமிழிசை சவுந்தர்ராஜன் பதிலளித்திருந்தார்.
2015 -ம் ஆண்டு சார்லஸ் பா.ஜ.கவில் இணைந்த அதே ஜூன் மாதம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் சுமார் ரூ.80 கோடி ஹவாலா (கருப்பு) பணம் கைப்பற்றப்படுகிறது. இந்த ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தாவூத் இப்ராஹிமிற்கு இருக்கும் தொடர்பைப் பற்றியும் விசாரணைகள் நடந்தது.
இதில் நாகராஜன் என்ற மார்ட்டினின் நெருங்கிய தொழில் கூட்டாளி கைது செய்யப்படுகிறார். நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2013 -ம் ஆண்டு ஆவணங்களின் படியே நாகராஜனின் டீசெல் (Teasel) நிறுவனம் தனது பங்குகளை, மாட்டினின் மகன்கள் இருவருக்கும் தலா 1000 வீதம் கைமாற்றிக் கொடுத்துள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. மேலும், இன்று வரை சார்லஸ் மார்ட்டின், தனது தந்தையின் தொழில் குழுமங்களின் நிர்வாக இயக்குனராகவும், இயக்குனராகவும் உள்ளார்.

அதாவது தனது தந்தையின் சொத்துக்களை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் ஒருவருக்கு தந்தையின் வழக்குகளில் இருந்து விலக்குரிமை உள்ளது என்கிறனர் பா.ஜ.க-வினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் நிறுவனங்களின் இயக்குனராக இருப்பவருக்கு அந்த வழக்குகளில் தொடர்பில்லை, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு என்று கேட்கிறார் தமிழிசை. இதே போல லாட்டரி மார்ட்டினின் இன்னொரு புத்திரனான டைசன் (அப்பாவின் கள்ளப்பணத்தை முதலீடாகக் கொண்டு) தமிழ் தேசியவாதியாக போராடுவதில் என்ன தவறு என்று தமிழினவாதிகள் கேட்கலாம்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்கப் போவதாகவும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்ப்போம் என சவடாலடித்தனர் பாஜக-வினர். இவர்கள்தான் கருப்பை வெள்ளையாக்குவதற்கு பேரம் பேசி கருப்புப் பண முதலைகளை கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். அப்படி வானதி அன்-கோவின் மூலம் பேசப்பட்ட பேரம் படிந்ததின் விளைவுதான் சார்லஸ் கட்சியில் இணைக்கப்பட்டது.
ஆடிட்டருடைய வேலை என்ன என்று நமது அண்ணாச்சி கடையிலோ, பாய் கடையிலோ கேட்டால், பணக்காரனுக்கு வரிகட்டாம அரசாங்கத்தை ஏமாத்த சொல்லித்தருவது, அவங்க கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி தருவது என்று சொல்வார்கள். குருமூர்த்தி, ஹெச்.ராஜா போன்ற பெரிய பெரிய ஆடிட்டர்கள் எல்லாம் சேர்ந்து கட்சி நடத்தினால் அந்தக் கட்சியின் வேலை என்னவாக இருக்கும்?
ஆக, எதிர்கோஷ்டியைச் சேர்ந்த வானதியும், பொன்னாரும் தான் சார்லசை டெல்லி வரை கூட்டிச் சென்று பா.ஜ.கவில் இணைத்துள்ளனர். இதற்கு பாலசுப்பிரமணிய ஆதியனின் கோஷ்டியைச் சேர்ந்த தமிழிசையும் உடந்தையாக தான் இருந்திருக்கிறார்.
இது மட்டுமின்றி கடந்த மார்ச், 2017 -ல் கோவையில் நடத்தப்பட்ட ‘தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை’-யும் மார்ட்டினின் பண உதவியுடன் தான் நடத்தப்பட்டுள்ளது.
தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரையை இயக்க பண உதவியும் மார்டின்தான். பூண்டி பிரிவில் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார். மார்ட்டின் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரி மருத்துவ வாகனம் எல்லா நாட்களிலுமே யாத்திரைக்கு கூடவே வலம் வந்தது. – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.
மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மக்கள் துயருற்ற போது கருப்புப் பண முதலைகள் தான் அதை எதிர்த்துப் போராடுவதாக தொலைக்காட்சிகளில் பேசிவந்தனர் பா.ஜ.க-வினர். நாடு முழுவதும் தங்கள் கட்சியில் கருப்புப் பண முதலைகளை இணைத்துக் கொண்டதோடு, அந்த மோசடிப் பணத்தின் உதவியால் தான் தமது கட்சி இயக்கங்களையும், பொதுக் கூட்டங்களையும் நடத்திவருகிறார்கள்.
அது வேற வாய், இது நாற வாய்!
தனது எதிர் கோஷ்டியின் ஊழல்களை எல்லாம் அம்பலப்படுத்தும் பாலசுப்பிரமணிய ஆதித்யன், ஒவ்வொரு பதிவிலும் அல்லேலூயா பாணியில் மோடியை மீட்பராக முன்னிருத்துகிறார்.
சொந்த கட்சியானாலும் ஊழல் செய்தால் மண்டையை உடைத்து விடுவேன்டா படவா…ராஸ்கல் என தூள் கிளப்பும் நம் தேச பிரதமர் மோடியை பார்த்து என்ன சொல்லுவீங்களோ என் மௌன பாஜக மாப்பிள்ளைகளா?!… – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.
முன்னர் ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது திறமையை உச்சிமோர்ந்த பார்ப்பனர்கள், ஊழல் என்றதும் அவை ஜெயாவுக்குத் தெரியாமல் சசிகலாவும் மன்னார்குடி கும்பலும் நடத்தியவை என்பார்கள். அதே போல, ஊழலை ஒழித்து, தேஷ வளர்ச்சியை சாதித்து அதன் மூலம் இந்து ராஷ்டிரத்தை படைப்பதற்கு ஆற்றலும் திறமையுமுள்ள, முக்காலமும் அறிந்த மோடிக்கு பா.ஜ.க-வினரின் ஊழல்கள் தெரியாது. தெரிந்ததும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்கிறார்.
வானதி மற்றும் பொன்னார் மீதான தமது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அமித் ஷாவிடம் கொடுத்துள்ளதாக பதிவிட்டிருந்தார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். கடந்த செப்டம்பர் 5 அன்று மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது கடும் நடவடிக்கைகள் துவங்கும் என்றும் கூறினார். நிர்மலா சீத்தாராமன், ரோகித் வெமுலா கொலை இழிபுகழ் பண்டாரு தத்தாத்ரேயா போன்றோர் பதவிவிலகிய போது நடவடிக்கையின் துவக்கமாக அதைச் சொன்னார். ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அமைச்சர் பதவியளிக்கப்பட்டதும் அருண் ஜெட்லியின் நிர்பந்தம் காரணம் என்றார். பொன்னாருக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையே கடுமையான நடவடிக்கையாக சித்தரிக்கின்றனர் பாலசுப்பிரமணிய ஆதித்யனின் நண்பர்கள்.
எது எப்படியோ இப்படி தங்கள் சொந்த கட்சியினரின் ஊழல்களை வெளியிட்டு வண்டவாளங்களை மக்கள் முன் கொட்டுகிறார்கள் இவர்கள். அதன் காரணம் உட்கட்சி கழுத்தறுப்புக்கள் என்றாலும் மற்ற கட்சிகளை விட கட்சி சார்ந்த ஊழல் இங்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு கூட இல்லை என்றாலும் மத்தியில் ஆளும் அரசாக இருப்பதால் தமிழக பாஜக முதலைகள் ஊழலில் அடித்து விளையாடுகிறார்கள். இப்பேற்பட்ட முதலைகள் தற்போது அதிமுக பெருச்சாளிகளை அடிமையாக்கி வேலை செய்கின்றனர். இதன் விளைவு தமிழகத்தை நாசம் செய்யும் என்பதை விளக்க வேண்டியதில்லை அல்லவா?
மோடியின் ஆஸ்திரேலியப் பயணம் அதானியால் ஸ்பான்சர் செய்யப்பட்டது. லண்டன் வெம்ப்ளே மைதானத்தில் நடந்த மோடியின் கூட்டத்திற்கு டாடா, ஏர்டெல் மற்றும் லைக்கா மொபைல் போன்றவை ஸ்பான்சர் செய்தன. மோடி போன்ற உயர் மட்ட அளவில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ளூர், மாநில அளவில் மார்ட்டின் போன்றோர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.
இதில் ஒருவரை மீட்பராகவும், மற்றொரு தரப்பை ஊழல்வாதிகளாகவும் சித்தரிப்பதற்கு ஒருவர் காரியக் கிறுக்கனாகத் தான் இருக்க வேண்டும். அதாவது, ஒன்று கார்ப்பரேட் சேவைக்கானது, மற்றொன்று எதிர்கோஷ்டியை கழுத்தறுப்பது. அது வேற வாய், இது நாற வாய்! இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு தான் இவர்கள் ஒரே கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்துத்துவ பாசிசம்.
– முற்றும்.
– வினவு புலனாய்வுக் குழு
முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்
தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்
தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2 – வானதி சீனிவாசன்
ஆதாரங்கள் :
- The trader of shadow fortunes
- லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பாஜகவில் சேர்ந்ததில் என்ன தவறு? – கேட்கிறார் தமிழிசை
- Businessman Jose Charles Martin Son alleged lottery- cam kingpin Santiago Martin joined BJP
- Company raided in Kolkata had links to ‘lottery king’ Santiago Martin
- JOSE CHARLES MARTIN
- லாட்டரி மார்ட்டின் : கொள்ளைப் பணத்தில் கொள்கை தானம் !
- Explained – Profile: Santiago Martin, from labourer in Myanmar to Lottery King
- Putting up the big Modi show
_____________
தமிழக பா.ஜ.க-வின் ஊழல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்தப் புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி