தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு செயல்பாட்டுக் குழு (ஜாக்டோ-ஜியோ) கடந்த 7 -ம் தேதி முதல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து நடத்தி வந்தனர்.
இப்போராட்டத்தால் அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகள் பெரும்பான்மையாக இயங்கவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் டி.சேகரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்ட ஜாக்டோ-ஜியோ குழுவினரை அழைத்து விளக்கம் கூட கேட்காமல், “பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகாது” என்று கூறி போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்தும் போராட்டத்தைத் தொடர்ந்ததால், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் நீதி மன்றத்தில் கடந்த 15.09.2017 அன்று ஆஜராக வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் குறிப்பாணைகள் வழங்கப்பட்டன. குறிப்பாணை பெற்றதும் 15 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் 17 -பி பிரிவின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை மிரட்டியது.
இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாது நடைபெற்ற தொடர் போராட்டத்தில் கடந்த 15.09.2017 அன்று நீதிமன்ற விசாரணையில் அரசின் மெத்தனப் போக்கு தான் இப்போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று போராட்டக் குழுவினர் வாதிட்டனர். இதனையடுத்து அரசுத் தரப்பு செப்டெம்பர் 21 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் போராட்டக் குழு தற்காலிகமாக போராட்டத்தைத் தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் இருந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் அவர்களிடம் இப்போராட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்..
உங்களுடைய போராட்டத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

நீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன்னால், இயற்கை நீதியின் ( Principal of Nature Judgement) அடிப்படையில் இதனை அணுகி இருக்க வேண்டும். ஏனென்றால் இது 14 இலட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் குறித்த முக்கியமான போராட்டம். இந்த போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஒரு தனி நபர் கோரும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட ஜாக்டோ – ஜியோ தலைவர்களை அழைத்துப் பேசி நீதிமன்றம் முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு விரோதமாக எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் ஒருதலைப்பட்சமாக போராட்டத்திற்கு தடை விதித்தது எந்த விதத்தில் நியாயம்?
மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்த பிறகும் போராட்டத்தைத் தொடர்வது சரியில்லை என்று அரசு கூறுகிறதே?
இந்த போராட்டத்திற்குக் காரணம் தமிழக அரசு. நாங்கள் இல்லை. எங்கள் போராட்டம் என்பது 14 ஆண்டு கால கோரிக்கை. இதற்காக நாங்கள் செய்யாத போராட்டம் இல்லை. கொடுக்காத மனுக்கள் இல்லை. ஆனால் அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். ஆனால் அவர் அதனை நிறைவேற்றவில்லை. அவரின் வழி என்று சொல்லும் இப்போதைய அரசும் நிறைவேற்றவில்லை. அரசு இதை செய்யாததால் தான் இந்த போராட்டம்.
உங்களின் போராட்டத்தால் “மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை உங்களின் சம்பளத்தில் இருந்து கொடுக்க நேரிடும்” என்று நீதிபதி கிருபாகரன் கூறியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீதிபதி அவர்கள், இழப்பீடை எங்களிடம் வசூலிக்கச் சொல்லியிருக்க கூடாது. இந்த போராட்டத்திற்கு காரணமான அரசிடம் தான் வசூலித்திருக்க வேண்டும். அவ்வாறு எங்களிடம் வசூலிக்கக் கூறியிருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.
அரசு ஊழியராகிய நீங்கள் அரசுக்கு எதிராக போராடுவது தவறு இல்லையா?
தமிழக முதல்வர் கூறியதை சட்டப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அரசு அதனை செய்யாமல் எங்களை ஏமாற்றி வருகிறது. அதனால் தான் போராடுகிறோம்.
நீட் தேர்வில் மாநில பாடத்திட்ட மாணவர்களால் தேர்ச்சி பெற முடியாததற்கு, கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர்கள் போராடியதும் ஒரு காரணம் என்றும் இதற்கு ஆசிரியர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் என்று நீதிபதி கூறியிருக்கிறாரே?
அது பொய்யானது. நீதிபதியின் இந்த கருத்து மிகவும் தவறு. CBSE பள்ளியில் படித்த மாணவர்கள் 2, 3 ஆண்டுகள் தனியார் பயிற்சி நிறுவனத்தில் பல லட்சங்கள் செலவு செய்து படிக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வாறு படிப்பதற்கான வசதி இல்லை. இந்த சூழலில் எப்படி அவனால் தேர்ச்சி பெற முடியும்?
நீதிபதி அவர்கள், எங்கள் போராட்டம் தான் காரணம் என்கிறாரே அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? இல்லை தனியார் பள்ளி மாணவர்கள் நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு எந்த பயிற்சி வகுப்பிற்கும் போகாமல் நீட் தேர்வை எழுதினார்கள் என்று தான் சொல்ல முடியுமா? அப்படி யாரையேனும் அவர்களால் காட்ட முடியுமா?
மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு உங்கள் ஆதரவு உள்ளதா? அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன?
இன்றைக்கு மக்களே போராட்ட களத்திற்கு வந்துவிட்டார்கள். மாணவர்களும் போராட்டத்திற்கு வந்து விட்டார்கள். மாணவர்களின் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கின்றோம். இது ஒரு மனுதர்மக் கொள்கையாக உள்ளது. அதனால் தான் எங்கள் கோரிக்கையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்துள்ளோம்.
உங்கள் சம்பள பிரச்சனைக்கு நீங்கள் போராடுகிறீர்கள். ஆனால் மாணவர்கள் உரிமைக்காக போராடினால் தடுக்கிறீர்கள் என்ற விமர்சனம் பரவலாக எழுந்த பிறகு தான், தற்போது நீங்கள் இதை உங்கள் கோரிக்கைகளில் சேர்த்திருக்கிறீர்கள் என்கிறார்களே?
இல்லை. நாங்கள் புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்ததில் இருந்தேதான் எதிர்த்து வருகிறோம். அதற்காக பல போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம்.
ஆனால் இப்பொழுது போராடுவது போன்று இவ்வளவு வீரியமாக போராடவில்லையே?
அது தவறு. அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி, மாணவர்களுக்கான ஓய்வறை கட்டக்கோரி தொடர்ச்சியாக போராடி உள்ளோம். எங்கள் அமைப்பின் சார்பாக மாற்று கல்விக் கொள்கை திட்டமும் வரையறுத்து அரசுக்கு வழங்கியுள்ளோம். அரசு எதையும் கண்டு கொள்வதில்லை.
தற்போதைய போராட்டத்தையும் அரசு கண்டுகொள்ளாமல், கோரிக்கைகளை கிடப்பில் போட்டால் என்ன செய்வீர்கள்?
அதற்கு தான் முயற்சி செய்கிறார்கள். எங்கள் கோரிக்கையை ஏற்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். அப்படி விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடர்ந்து போராடி வருகிறோம்.
நீதிமன்ற மிரட்டலால் தான் தற்போது போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றிருக்கிறீர்களா?
இல்லை. “நீதிமன்ற தடையை மீறி நீங்கள் போராடி இருக்கிறீர்கள்” என்று நீதிபதி கேட்டார். அதற்கு எங்கள் தரப்பில், அரசின் நடவடிக்கை தான் எங்களைப் போராட வைத்தது. அரசு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்றோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 21 -ம் தேதி உரிய ஆவணங்களோடு ஆஜராக அரசு தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார். இதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி தான். 21 -ம் தேதிக்கு பிறகு மேல்மட்டக் குழு போராட்டத்தைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
– வினவு செய்தியாளர்
_____________
இந்த நேர்காணல் உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி