Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கசிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !! - மோடியின் பணமதிப்பழிப்பு !

சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !! – மோடியின் பணமதிப்பழிப்பு !

-

பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !!

”கருப்புப் பணத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லிய தாக்குதல்” என மெச்சப்பட்ட நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக்கொள்ளப்பட்ட அந்த நோக்கத்தில் கடுகளவைக்கூட நிறைவேற்ற முடியாமல், கேவலமான முறையில் படுதோல்வி அடைந்துவிட்டது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016 – 17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் வழியாக இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதனை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ”காஷ்மீரிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான கருப்புப் பணம் முடக்கப்பட்டுவிடும்” என ஆணித்தரமாக அறிவித்தார்.

இந்திய அரசு வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நவம்பர் 23, 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், ”2.4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 4.8 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பணம் வங்கிக்குத் திரும்பாது. இந்தப் பணம் முழுவதும் அரசுக்குக் கிடைத்த இலாபமாகக் கருதப்பட்டு, அந்தப் பணம் நாட்டின் அடிக்கட்டுமானப் பணிகள் தொடங்கி பலவற்றிலும் மூலதனமாகப் போடப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

”நாட்டைத் தூய்மைப்படுத்தும் மகாயாகத்தைத் தொடங்கியிருக்கின்றேன். இதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்குபெற வேண்டும். இதனால் ஏற்படும் துன்பங்களை எனக்காக, 50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார், மோடி.
ஐம்பது நாட்கள் அல்ல, கடந்த பத்து மாதங்களாகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்குக் கிடைத்தது என்ன? சமையல் எரிவாயு மானியம் ரத்து, பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வு, ரேஷன் அரிசியின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும் கத்தி, வங்கி சேவைக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. வரிக்கொள்ளை ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள்தான் பொதுமக்களுக்குக் கிடைத்த சன்மானம்.

சரி, இது போகட்டும், உள்நாட்டில் புழுங்கும் கருப்புப் பணத்தையாவது மோடி அண்ட் கம்பெனி முடக்கியதா என்றால், அதிலும் படுதோல்வி அடைந்துவிட்ட உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக 15.44 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்தன. அதில், 15.28 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது, ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை. வங்கிக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட பணம்தான் கருப்புப் பணம் என்ற அளவுகோலின்படி பார்த்தால், வெறும் 16,000 கோடி ரூபாய் பணத்தைத்தான் மோடியின் நடவடிக்கை கருப்புப் பணமாக முடக்கியிருக்கிறது.

மைய அரசின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரமொன்றில், ”2013 – 14 ஆம் ஆண்டு தொடங்கி, வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 11,000 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டப்படாத தொகையைக் கண்டுபிடித்து வருவதாக”க் கூறப்பட்டிருக்கிறது. இதோடு ஒப்பிட்டால், வெறும் 16,000 கோடி ரூபாயைக் கண்டுபிடித்திருக்கும் மோடியின் துல்லிய தாக்குதலை, நமத்துப் போன பட்டாசு என்றுதான் குறிப்பிடமுடியும்.

வங்கிக்கு வராமல் வெளியே இருப்பதாகக் கூறப்படும் இந்த 16,000 கோடி ரூபாயிலும், ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய் – 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக இந்தியா வெங்கிலுமுள்ள மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் இருப்பதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவன்றி, இந்தியாவின் அண்டை நாடான நேபாள மத்திய வங்கியிலுள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் முடக்கப்பட்ட கருப்புப் பணம் எனச் சொல்லிக்கொள்ள ஒரு பைசாகூடத் தேறாது என்பதே உண்மை.

’மலையைக் கெல்லி எலியைப் பிடித்த’ பழமொழியோடுகூட ஒப்பிடத் தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப் பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது. அதேசமயம், அவரது சுயதம்பட்ட நடவடிக்கைக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தமது வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டனர்.

பணவரத்து சுருங்கிப் போனதால், விவசாயிகள், தாம் விளைவித்த தானியங்களை விற்க முடியாமல் தெருவில் கொட்டினார்கள். கூட்டுறவு சங்க கடன்களை நம்பி சாகுபடியைத் தொடங்க எண்ணியிருந்த விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலை நோக்கித் துரத்தப்பட்டார்கள். கூலிப் பணம் கொடுக்க வழியில்லாததால், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.

திருமணத்திற்கும், மருத்துவத்திற்கும் சேர்த்து வைத்திருந்த பணம் செல்லாது போன நிலையில், பலரும் செய்வதறியாது தவித்துப் போனார்கள். ஓய்வூதியப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியாத முதியவர்கள், மருந்துக்கும் சாப்பாட்டுக்கும் வழிதேடி அலைந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வங்கி வாசலிலிலேயே உயிரைத் துறந்தார்கள்.

சிறுதொழில்களும், கடைகளும் பணத்தைப் புரட்ட முடியாமல் நசிந்து நின்றன. சிறுதொழில்களும், கட்டிட வேலைகளும் முடங்கியதால், நாடெங்கும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சில இலட்சங்களைத் தொட்டது.

பொதுமக்களின் மீது திணிக்கப்பட்ட இத்துணை துன்பங்களை, சித்திரவதைகளை மோடி அரசும், பா.ஜ.க. கும்பலும் அனுதாபத்தோடா எதிர்கொண்டனர். ”தேசத்தின் நலனுக்காக கியூவில் நிற்பதைக்கூடவா பொறுத்துக் கொள்ள முடியாது” என எகிறினார்கள், ”நாட்டின் எல்லைப் பகுதியில் நிற்கும் சிப்பாயின் கஷ்டத்தைவிடவா இதெல்லாம் பெரிது” எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள்.

”பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தையோ இலஞ்சத்தையோ ஒழித்துவிட முடியாது. காரணம், கருப்புப் பணம் என்பது இந்த அமைப்பு முறையே திரும்பத் திரும்ப உருவாக்கும் பொருளாதார நடவடிக்கை. மேலும், மொத்தக் கருப்புப் பணத்தில் 1 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாகப் புழக்கத்திலுள்ளது.

மீதமனைத்தும் சொத்துக்களாகவோ, வெளிநாட்டு வங்கி இருப்பாகவோ மாற்றப்பட்டுவிட்டது” எனச் சமூக அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்களும், புரட்சிகர, ஜனநாயக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னபோது, அதனை அவர்களால் மறுதலித்துப் பேச முடியவில்லை.

எனினும், மோடியின் நடவடிக்கை கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது கருப்புப் பணத்தை வளைத்துப் பிடிக்கும் என அப்பாவித்தனமாக நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கை வழியாக உறுதியாகியிருக்கிறது.

-செல்வம்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க