Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

-

வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

வெள்ளாற்றை பாதுகாப்போம் ! மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் !! இனியும் தாமதித்தால் வெள்ளாறு செத்துவிடும் !!! என கடலூர் மாவட்டம் கூடலையத்தூர் பகுதி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி சுற்றுப் பகுதி விவசாயிகள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடி வருகின்றனர்.

அதனடிப்படையில் மணல் குவாரியை கடந்த 26.08.2017 அன்று திரளான விவசாயிகள், மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என குவாரியை முற்றுகையிட்டு ஆற்றில் இறங்கிப்போராடினர். போராட்டத்தை தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட போலீசு போராடுபவர்களை மிரட்டிப்பார்த்தது. ஆனால் போரட்டத்தின் வலிமை கண்டு பின்வாங்கியது.

கடந்த மாதம் 26 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது மக்கள் அமைத்த பந்தலைப் பிடுங்கும் போலீசு

பின்னர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை நம்பி மக்கள் களைந்து சென்றனர். ஆனால் மக்கள் போராட்டங்களை முதுகில் குத்தும்விதமாக காவல்துறையும், அதிகாரிகளும் தற்போது நடந்து வருகின்றனர். போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர்கள் மீது பொய் வழக்கு பூச்சாண்டி காட்டுகிறது போலீசு.

ஆனால் பொய் வழக்குகளால் போராட்டங்களை ஒடுக்க முடியாது என அடுத்தடுத்த போராட்டங்களுக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையில் தலைமைச் செயலருக்கு போலீசு மற்றும் அதிகாரிகளின் மிரட்டல் குறித்து கடிதம் அனுப்பியுள்ளனர் வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர். அந்தக் கடிதம் இங்கே தரப்பட்டுள்ளது.

***

அனுப்புதல்

கா.ஆசைத்தம்பி, வயது 45 த/பெ காசிநாதன்,
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்,
கூடலையாத்தூர், காவாலக்குடி அஞ்சல்,
திருமுட்டம் வட்டம். கடலூர் மாவட்டம்.

பெறுதல்

உள்துறைச் செயலாளர்   அவர்கள்
தலைமைச் செயலகம்,
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, .சென்னை.

அய்யா வணக்கம்,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். விவசாய தொழில் செய்கிறேன். வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பில் கூடலையாத்தூர் கிராம ஒருங்கிணைப்பாளாராக உள்ளேன். வெள்ளாற்றங்கரையில் உள்ள பல்வேறு கிராம மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டம், திருமுட்டம், தாலுக்கா கூடலையாத்தூர் வெள்ளாற்றில் கடந்த இரண்டு மாத காலமாக அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. பொதுப்பணித்துறைதான் நேரடியாக இணையதளம் மற்றும் டி.டி மூலமாக இரண்டு யூனிட் மணலுக்கு 1,080 ரூ என பெற்றுக்கொண்டு  லாரிகளில் ஆற்றிலேயே ஜே.சி.பி மூலம் நிரப்பட்டு கிராம சாலை வழியாக திருமுட்டம், சேத்தியா தோப்பு வழியாக தமிழகத்தின் பல ஊர்களுக்கு செல்கிறது.

கூடலையாத்தூர் வெள்ளாற்றில் அதே இடத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக 2005 முதல் இதற்கு முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளபட்டுவிட்டது. பல இடங்களில் களிமண் தெரிகிறது. இதனால் மழை பெய்தாலும் தண்ணீரை தேக்கி வைக்க இயலாமல் கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் 50 அடி இறைத்த போர் இன்று 250 அடி ஆழத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் கீழே இறங்கி விட்டது. விவசாயம் பெருமளவில் பாதித்து வருகிறது. வெள்ளாற்றங்கரையில் சுமார் 2,500 போர்வெல் உள்ளது. பல போர் வெல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சுமார் 70 சதவீத போர் செயலிழந்து விட்டது. மேலும் வீராணத்தில் தண்ணீர் இல்லாததால் பல இடங்களில் ஆழ்துளை போர் போட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடலூர் ரசாயண ஆலைகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி மாறிவருகிறது. நெய்வேலி சுரங்கம் பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி வருகிறது. அருகில் கடல் நீர் உள்ளே புகும் அபாயம் என கடலூர் மாவட்ட விசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும்  நீராதரத்திற்கு  சுகாதாரமான குடிநீருக்கு பெரும் அபாயத்தில் உள்ளனர்.

கூடலையாத்தூர் மணல் குவாரியால்  மணல் அள்ள வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் கிராமம் தோறும் ரயில் வண்டி போல் வரிசை கட்டி நிற்கிறது. வெளியூர் லாரி ஓட்டுநர்கள் இரண்டு மூன்று நாள் வரை  தங்குவதால் குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து போடுவது, தொடர்ந்து லாரி நகர்த்துவதால் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பது, இதனால் பொது மக்களின் பள்ளி மாணவர்களின், அன்றாட வாழ்க்கை பாதிக்கிறது. பயணிகள் பேருந்துகூட தற்காலிகமாக நிறுத்தபட்ட அவல நிலை. இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர், சேத்தியா தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மேலும் மாவட்ட ஆட்சியர், பொது பணித்துறை அதிகாரிகள் என உரிய அதிகாரிகளுக்கு பல முறை நேரிலும் மனுவாகவும் அனுப்பினோம். மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

மேலும் போலீசாரின் துணையோடு அதிமுகவினர் சிலர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 500 – 1,000 என மாமுல் கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர். இவ்வாறு வசூலித்த தொகை மட்டும் சுமார் எழுபது லட்சம் இருக்கும். தினம்தோறும் திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷாவிற்கு இருபதாயிரம் லஞ்சமாக பணம் கொடுக்கின்றனர். காவல் நிலையத்திற்கும் மாமூல் செல்கிறது. உள்ளுரில் வசூல் செய்வதில் கோஷ்டி பூசல் எற்பட்டு அமைதி குலைகிறது. தாய் போன்ற வெள்ளாறு சிதைக்கப்படுவதற்கு அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். பர்மிட் இல்லாமல் லாரிகள் மணல் ஏற்றி செல்வது, அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி செல்வது என தினம்தோறும் தொடர்கிறது.. மாநில சுற்றுசூழல் ஆணையம் வரையறுத்துக் கொடுத்த உத்திரவில் சர்வே எண் 8-ல் 19 ஹெக்டேர் என்பதை தாண்டி கண்ணில் தெரிந்த வரை வெள்ளாற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. ஆறும் வறண்டு போய் விட்டது.

ஆற்று மணல் கொள்ளை போவது பற்றியும், இத்தகைய முறைகேடுகள் பற்றியும் பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. சரவணன் அவர்களிடம் கைபேசி மூலமும், நேரிலும் புகார் தெரிவித்தோம். அது போல் திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா அவர்களிடமும் இவ்வாறே புகார் தெரிவித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இவர்கள் இவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஆற்றுமணலை கொள்ளையடிக்க அனுமதித்து வருகின்றனர்.

வெள்ளாற்றை காக்க மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க காவல் துறை மற்றும் உரிய அதிகாரிகளிடம்  தெரிவித்து விட்டு 26-8-2017 அன்று காவாலகுடி, கூடலையாத்தூர், அகர ஆலம்பாடி, பவழங்குடி, ஓட்டி மேடு, பெருந்துரை, கானூர், முடிகண்ட நல்லூர் என பல் வேறு கிராம மக்கள், மற்றும் வெள்ளாற்றுபாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், பல கட்சி பிரமுகர்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆற்றிலிறங்கி அமைதியான முறையில் போராடினர். சுட்டெரிக்கும் வெயிலிலும் பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என கலந்து கொண்டனர்.

திருமுட்டம் ஆய்வாளர் பீர்பாஷா மற்றும் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. திரு. அருள் சந்தோஷ்முத்து மக்களுக்கு குடி நீர் கொடுக்க விடாமல் மிரட்டி தடுத்தனர். பெண்கள் தாகத்தில் தவித்தனர். சிதம்பரம் கோட்டாட்சியரிடம் முறையிட்டதும் குடிநீருக்கு அனுமதி அளித்தனர். சிதம்பரம் கோட்டாட்சியர் அவர்கள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். ஆற்றில் நடக்கும் முறைகேடுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கோரிக்கை குறித்து கோட்டாட்சியர் கைபேசி வழியாக பேசினார். பிறகு இந்த குவாரியை தற்காலிகமாக மூட உத்திரவிடுகிறேன் என பொது மக்களிடம் அறிவித்தார். அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றோம்.ஆனாலும் வெயில் கொடுமைக்கு கொண்டு வந்த சாமியாணாவையும் போலீசார் பிடுங்கி கொண்டனர். போராட்டம் நடைபெற்ற தினத்தன்று மணல் குவாரி இயக்காமல் நிறுத்தபட்டு இருந்தது.

ஆனால் எந்த முன் அறிவிப்பும் பேச்சுவார்த்தையின்றி 30-8-2017 முதல் மணல் குவாரி மீண்டும் செயல்பட துவங்கியது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி விடக்கூடாது என என் பெயரிலும் மேலும் சிலர் பெயரிலும் பொதுப்பணித்துறை பொறியாளர் திரு சரவணனிடம் பொய் புகார் பெற்று திருமுட்டம் போலீசு ஆய்வாளர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ஊரில் அதிமுகவினர் லாரிகளுக்கு 1,200 வரை மாமூல் வசூலித்து திருமுட்டம் காவல் ஆய்வாளருக்கு நாள் தோறும் இருபதாயிரம் மாமூல் தருகிறார்கள். பொதுப்பணித்துறை பொறியாளர் சரவணனும் இது போல் மணல் கொள்ளை முறைகேடுகளுக்கு உடந்தையாக உள்ளார். பல லாரிகள் பர்மிட் இல்லாமல் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி செல்கிறது என கிராம மக்கள் எங்களிடம் தொடர்ந்து முறையிட்டனர். நாங்களும் அதிகாரிகளுக்கு தெரிவித்து கொண்டே இருந்தோம் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களை அச்சுறுத்தும் வகையில் பேசினர். மணல் முறைகேடு தடுக்கபடவில்லை.

இந்நிலையில் 9-9-2017  அன்று காலை சுமார் 8-30 மணியளவில் கூடலையாத்தூர் குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மக்கள் அச்சுறுத்தும் வகையில் சென்றது. இது பற்றி திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா அவர்களிடம்  கைபேசியில் தகவல் சொன்னேன். மணல் லாரி மேட்டரில் தலையிடாதே, ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்  குண்டாசில் உள்ளே தள்ளி விடுவேன், உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தும் வகையில் பேசினார். பிறகு  பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. சரவணன் அவர்களிடம் இது பற்றி புகார் தெரிவித்தோம். அவரும் “ஆசைதம்பி ரொம்ப ஓவரா போறீங்க நல்லதல்ல, எல்லாம் தெரிஞ்சுதான் நடக்குது உங்களுக்கு வேணும்னா ஏதாவது வாங்கிங்க எது நடந்தாலும் உங்க மேல் வழக்கு போடுவேன், ஒதுங்கி கொள் என மிரட்டும் வகையில் பேசினார். உடனே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிதம்பரம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தோம். அதிகாரிகள் வரும் வரை தாமதமானதால் பல லாரிகள் தப்பித்து சென்று விட்டன. பிறகு 15 லாரிகளை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மடக்கி பிடித்தோம். பிடிபட்ட லாரிகள் அனைத்திலும் பர்மிட் இல்லை. அளவுக்கு அதிகமாக சுமார் 4 யூனிட் மணல் ஏற்றி யிருந்தது. அனைத்த தொலைகாட்சிக்கு ஊடகங்களுக்கும் தகவல் தெரிவித்து  திருட்டு மணல் லாரிகளை சிறைபிடித்தோம்.

சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் விஜயவேந்தன் வந்தார். உளவு பிரிவு பேலீசார் அன்பரசன் ஏன் நேரிடையாக எஸ்பியிடம் பேசினீர்கள் என்னிடம் சொல்ல வேண்டும் என எங்க கூட இருந்த கிருஷ்ணன ராஜை கடிந்து கோபமாக பேசினார். பிறகு காவல்துறை அதிகாரிகள் திருமுட்டம் காவல் நிலையத்தில் ஆறு வண்டிகள் மீது மட்டும் வழக்கு போட்டு பறிமுதல் செய்தனர். பிற வண்டிகளை அனுப்பி விட்டனர். பர்மிட் இல்லாமல் ஓவர் லோடு லாரி மணல் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் வரை அபராதம் கட்ட வேண்டும்.

அரசு கணக்கில் வராமல் மணல் லாரிகள் செல்ல உடந்தையாக இருந்தது, வெள்ளாற்றில் மணல் கொள்ளைஅடிக்க கனிம வள திருட்டு குற்றங்களுக்கு பொது பணித்துறை பொறியாளர் சரவணன் மற்றும் அதை தடுக்க வேண்டிய காவல் ஆய்வாளர் திரு பீர்பாஷா தடுக்காமல் மணல் கடத்தலுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதித்த குற்றத்திற்கும், திருட்டு மணல் லாரிகளை பிடித்து கொடுத்த ஆசைத்தம்பி மற்றும் கிராம மக்களை அச்சுறுத்தியது ஆகிய செயல்களுக்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவம் எங்கள் ஊரை சேர்ந்த மற்றும் காவாலகுடியை சேர்ந்த  பொதுமக்கள் பலருக்கும் நேரிடையாக  தெரியும்.

இப்படிக்கு
தேதி – 15-9-2017
உண்மையுடன்

ஆசைத்தம்பி

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க