Monday, April 21, 2025
முகப்புசெய்திநோயாளிகளை காக்க வைத்து ’ரெப்’களோடு குலாவும் அரசு மருத்துவர்கள் !

நோயாளிகளை காக்க வைத்து ’ரெப்’களோடு குலாவும் அரசு மருத்துவர்கள் !

-

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனைத்து வகையான வசதிகளுடன் ஓரளவு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், உள்நோயாளியாக 3,000 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டுக்காண்டு இந்த மருத்துவமனையை நோக்கி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் இந்த மருத்துவமனை எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும். உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிளுக்கு சிகிச்சை அளிக்க தனித்தனியே அரசு மருத்துவர்கள் உள்ளனர். பொதுவாக அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் நண்பகல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.

இப்படி செல்லக்கூடிய மருத்துவர்கள் பெரும்பாலும்  தனியாக ’கிளினிக்’ வைத்து மருத்துவம் பார்க்கின்றனர். இந்த  மருத்துவர்களை, தனியார் மருந்து விற்பனை பிரதிநிதிகள் (Medical Rep) சந்தித்து தங்கள் நிறுவன மருந்துகளை பரிந்துரைக்குமாறு கேட்டுச் செல்வது வழக்கம். மருத்துவர்களின்  சொந்த ’கிளினிக்கில்’ மருத்துவ விற்பனை பிரதிநிதிகள், அதிகளவில் படையெடுப்பதால், அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல், தங்கள் வருமானம் குறைந்து விடும் என்று  கருதி மருந்து விற்பனை பிரதிநிதிகளை, தினமும் காலை அரசு மருத்துவமனையில் புறநோயாளி பிரிவுக்கு வரவழைத்து மருத்துவர்கள்  பேசுகின்றனர்.

இதனால் அரசு மருத்துவர்கள்  தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகள் அனைவரையும் சந்திப்பதில்லை. நோயாளிகள் வந்து செல்லும் நேரத்திலே மருந்து விற்பனை பிரதிநிதிகள் வந்து செல்கின்றனர். புறநோயாளிகளுக்கான நேரம் முடிந்ததும் மருத்துவர்கள் கிளம்பிச் சென்று விடுகின்றனர். மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் வீட்டிற்கு திரும்புகின்றனர். மக்களின் உயிரை காப்பதற்கே அரசு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், சில மருத்துவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக நோயாளிகளின் உயிரோடு விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. இவ்வாறு மருந்து விற்பனை பிரதிநிதிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களைச் சந்தித்துச் செல்வது மக்கள் மத்தியில் மருத்துவர்கள் மீதான மதிப்பை இழக்கச் செய்கிறது.

இதுகுறித்து தினகரன் நாளிதழிடம் நோயாளிகள் கூறுகையில், “புறநோயாளி பிரிவில் மருத்துவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் மெடிக்கல் ரெப்பை சந்தித்து வெகு நேரம் பேசுகின்றனர். இதனால், நாங்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்கிறோம். எங்களால் அதிக பணம் கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என்பதால்தான் நாங்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம். ஆனால், இங்கு எங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். மருத்துவர்களை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். ஆனால், அவர்கள் எங்களை மதிப்பதில்லை” என்கிறார்கள்.

தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்த அலெம்பிக் மருந்து கம்பனியின் (Alembic Pharmaceuticals) மருத்துவ பிரதிநிதி ஒருவரிடம் பேசினோம்.

”எங்களுக்கு ஒரு மாதத்திற்கு 100 மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்பது இலக்கு. அதன்படி ஒரு நாளைக்கு குறைந்தது 8 மருத்துவரையாவது பார்க்க வேண்டும். இந்த மருத்துவர்களை குறைந்தது 200 முறை சந்தித்தால் தான் எங்களுடைய இலக்கு நிறைவேறும் சூழல் உள்ளது. எங்கள் வேலையின் நெருக்கடி தான் இந்த நிலையை நோக்கி தள்ளுகிறது. பொதுவாக ஒரு கம்பனியின் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்தால் அந்த மருத்துவருக்கு ஆண்டிற்கு ரூ. 20,000, முதல் 50,000 வரை  சம்மந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் கமிசன் வழங்கும். இந்த தொகை என்பது மருத்துவரும், மருத்துவமனையும் எந்தளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்காக உள்ளனர் என்பதைப் பொறுத்து மாறுபடும்”  என்றார்.

மருத்துவர்களின் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசே ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவு, அரசு மருத்துவமனைகள் என்றாலே, உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற எண்ண ஓட்டத்திற்கு மக்களைத் தள்ளியிருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தனியார் மருத்துவமனையை நோக்கி படையெடுகிறார்கள். இதனை தங்கள் கொள்ளைக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மருந்து கம்பெனிகள் மருத்துவர்களையும் விலைபேசுகிறார்கள்.

சுகாதாரம், மருத்துவம் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவு தான் இந்த நிலைக்கு காரணம்.

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி