Monday, April 21, 2025
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்அம்பானிக்கும் நூறு - பட்டினிக்கும் நூறு !

அம்பானிக்கும் நூறு – பட்டினிக்கும் நூறு !

-

ஊட்டசத்துக் குறைபாட்டில் இந்தியாவுக்கு 100 வது இடம் !

ர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute ) கடந்த  அக்டோபர், 2 . 2017 அன்று வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணையில் (GHI) இடம் பிடித்த 119 நாடுகளில் இந்தியா 100 வது இடத்தில் இருக்கிறது. 2014 -ம் ஆண்டில் 55 வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே அம்பானி தலைமையிலான இந்தியாவின் 100 பெரும்பணக்காரர்களின் வரிசையை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டதும் தற்செயலான நிகழ்ச்சியல்ல. உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா ஒரு “அபாயமான கட்டத்தில்” உள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

ஐந்து வயதிற்குட்பட்ட 21 விழுக்காட்டு இந்தியக் குழந்தைகள் எடை குறைபாட்டுப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக அதில் எந்த ஒரு முன்னேற்றமும் அடையாத ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவைத் தவிர சீபூத்தீ, ஸ்ரீலங்கா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் மட்டுமே எடை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளின் எண்ணிக்கை 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது.

மேலும் இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைத் தவிர ஏனைய தெற்காசிய நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா பின்தங்கியே இருக்கிறது.

நீண்டகால உணவுத்தட்டுப்பாடு, தொடர்ச்சியான உடல்நல குறைபாடு மற்றும் மோசமான சுகாதாரம் ஆகியவற்றால் ஏற்படுகின்ற ஊட்டச்சத்து குறைபாட்டினை இந்த எடை குறைபாடு பிரச்சினை பிரதிபலிப்பதாக சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) மூத்த ஆராய்ச்சியாளரான பூர்ணிமா மேனன் கூறுகிறார். வளர்ச்சி குன்றுதல் (Stunting) பிரச்சினை முன்னர் இருந்ததைவிட சற்று குறைந்துள்ளது. எனினும் முதல் இரண்டு ஆண்டுகளில் குழந்தையின் உணவுத்தேவை, சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீதான புறக்கணிப்பையே இந்த எடை குறைபாடு (Wasting) பிரச்சினையானது பிரதிபலிப்பதாக மேனன் கூறுகிறார்.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் மற்றும் தேசிய சுகாதார குறிக்கோள் என்று இரண்டு தேசிய ஊட்டச்சத்து திட்டங்களை ஆரவாரமாக அறிவித்தும் பிரச்சினைகளின் அளவை இந்தியா போதுமான அளவிற்கு குறைக்கவில்லை என்று மேனனின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில் கவனம் செலுத்தப்பட வேண்டியவையாக மூன்றை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

  1. சரியான நேரத்தில் நிறைவான உணவை (தாய்ப்பாலைத் தவிர) இளம் குழந்தைகளுக்கு வழங்குதல்; இது 2006 மற்றும் 2016 இடையே 52.7% இருந்து 42.7% ஆக குறைந்துள்ளது.
  2. 6 – 23 மாதத்திற்குட்பட்ட வெறும் 9.6 விழுக்காட்டு குழந்தைகள் மட்டுமே போதுமான உணவைப் பெறுகின்றன மற்றும்
  3. குழந்தை சுகாதார மற்றும் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் பெற்றுள்ள வீடுகள் எண்ணிக்கை 2016 -ல் 48.4 விழுக்காடாக இருந்ததாக அது மேலும் கூறுகிறது.

ஆயினும் மேனன் கணக்கில் எடுத்துக்கொண்ட உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தை குழித்தோண்டி புதைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 16,000 கோடி ரூபாயும் அதே அளவிளான தொகையை மாநில அரசுகளும் செலவிட்டு வந்தன. இந்தியா முழுவதும் 4.6 கோடி குழந்தைகளும் 1.9 தாய்மார்களும் பயன்பெற்று வந்த இந்த திட்டத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு நேரடியாக சேமிப்பு கணக்கில் பணத்தை போட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எப்படி சமையல் எரிவாயு திட்டத்திற்கான மானியத்தை மோடி கும்பல் குழி தோண்டி புதைத்ததோ அதே போன்றதொரு சதிவேலை தான் இதுவும்.

இந்திய பொருளாதராம் மந்த நிலையில் இருக்கும் போதும் ஆகபெரும்பான்மையான ஏழை எளிய இந்திய மக்கள் பசி பட்டினியில் சாகும் போதும் எப்படி அம்பானி அதானிகளால் பன்மடங்கு சொத்து சேர்க்க முடிந்தது என்று வாய்பிளந்து வியக்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள்.

ஏற்கனவே இருக்கும் சமூக நலத்திட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மென்மேலும் அதை நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் விரித்து எடுத்து செல்லும் போதுதான் ஊட்டசத்து குறைபாட்டை ஒழித்து இந்த பெருந்திரளான மக்களை ஆக்கபூர்வமாக வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுத்த முடியும். இவர்களோ இருக்கும் அரைகுறை நலத்திட்டங்களையும் குழிதோண்டிப் புதைக்கிறார்கள்.

மோடியின் ஆட்சியில் வேலையிழப்பு, விலை வாசி உயர்வு, கொள்ளை நோய் தாக்குதல், வணிகர் – சிறு தொழில் முடக்கம் ஆகியவற்றோடு குழந்தைகளும் மெலிந்து நலிகிறார்கள். அம்பானி – அதானிகளோ சொத்துக்களை பெருக்குகிறார்கள்! இதுதான் மோடியின் சாதனை!

இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி