Thursday, April 17, 2025
முகப்புசெய்திஅந்த மருத்துவமனை அறையின் ஒரு நாள் வாடகை 3,50,000 ரூபாய் !

அந்த மருத்துவமனை அறையின் ஒரு நாள் வாடகை 3,50,000 ரூபாய் !

-

இதுதான் இன்றைய இந்தியா

நோய் வந்தால் மருத்துவர் ஊசி போடுவாரே என்று குழந்தைகள் பயப்படுவார்கள். குழந்தைகள் என்றில்லை, நோய் வருவதையும், மருத்துவமனை செல்வதையும் யார்தான் விரும்புவார்கள்? அது உடலை முடக்கும் வதை மட்டுமல்ல, வருமானத்தை உறிஞ்சும் அட்டை என்பதை மக்கள் சமீப ஆண்டுகளாக அதிகம் அனுபவித்து வருகிறார்கள்.

ஆனால் தலைநகரம் புது தில்லியில் இருக்கும் ஃபோர்டிஸ் லா ஃபெம்மி மருத்துவமனை (Fortis La Femme Hospital in India) அப்படியல்ல. அரசு மருத்துவமனையில் வேறு வழியின்றி தரையில் படுத்து சிகிச்சை பெறும் நம் மக்கள் ஃபோர்டிஸ் மருத்துவமனையைப் பார்த்தால் அது ஆஸ்பத்திரி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏதோ பூங்கா அல்லது நட்சத்திர விடுதி, விருந்தினர் மாளிகை… இல்லையில்லை இந்த சிகிச்சை மையத்தை விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை!

ஆணாதிக்கத்தால் சபிக்கப்பட்ட பெண்ணினத்திற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மிக அதிகமாக வருகிறார்கள். பெண்கள் தொடர்பான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் இங்கு அளிக்கிறார்கள். கர்ப்பம், பிரசவம், குண்டு, அழகு சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை என்று இங்கு எதுவும் விடுபடவில்லை. இதைத்தாண்டி  பூங்கா, ரம்மியமான காத்திருப்பு அரங்கு என எங்கு சென்றாலும் சொர்க்கத்தை தரிசிக்கலாம்.

மருத்துவமனையில் சாதா, ஸ்பெஷல் போக சூப்பர் ஸ்பெஷல் அறைகளும் உண்டு. அந்த அறைகளில் விசாலமான பால்கனி, இயக்குநர் மிஷ்கின் ஷாட் போல வானத்தை விரிந்து பார்க்கும் சன்னல்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு தனி இடம், விருந்துண்ணும் அறை, சிறப்பு சமையலறை, தனிப்பட்ட உதவியாளர்கள், தனிப்பட்ட சமையல்காரர்கள் எல்லாம் உண்டு. வாடகை என்ன? இவ்வளவு வசதிகளையும் கொடுத்து விட்டு அதை பணமதிப்பால் அளப்பதே நமது தரித்திரம் என்பார்கள் இம்மருத்துவமனையின் மக்கள் தொடர்பு தேவதைகள்! ஆம், வாடகை ஒரு நாளைக்கு சுமார் ரூ. 70,000 முதல் ரூ. 3,50,000 வரை இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வரும் சீமாட்டிகளும் சரி, உள்நாட்டிலிருந்து வரும் அம்மணிகளும் சரி இங்கே தங்கி ஒய்யாரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டோ இல்லை ஓய்வோடு சற்று மருந்து சாப்பிட்டுக் கொண்டோ செல்கிறார்கள்.

இம்மருத்துவமனை இருக்கும் தில்லிக்கு அருகாமையில் இருக்கும் உ.பி -யின் கோரக்பூர் மருத்துவமனையில்தான் சமீபத்தில் ஆக்சிஜின் இல்லாமல் ஆறே நாட்களில் 60 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போனார்கள். தில்லியின் மோடி இருக்கிறார் என்றால் கோரக்பூரில் ஆதித்யநாத் இருக்கிறார்.

முன்னவர் சர்வதேச சுற்றுலா சென்று அரசு அதிபர்களையோ இல்லை தொழில் அதிபர்களையோ சந்தித்து அழைப்பு விடுக்கிறார். அப்போது அவர்களது நாகரீகத்திற்கு சற்றும் குறையாமல் அப்படி ஒரு மருத்துவமனை எம் மண்ணில் இருக்கிறது என்று மார் தட்டியிருப்பார். அதே போல ஆதித்யநாத்தும் சாதிவெறி, மதவெறி பேசி மக்களை பிரித்தது போக ஏழைகள் அவர்களே தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வண்ணம் இப்படி பிராண வாயு இருப்பதை அறிந்து வைத்திருக்கிறார்.

இதே பாஜக ராமன் சிங் ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தில் 2014 நவம்பரில் ஒரு சம்பவம் நடந்தது. பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் போது 11 பெண்கள் மரித்து, பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

பாஜக -வின் இளைய பங்காளியான ஜெயா சட்டசபை தேர்தலில் வென்ற சில மாதங்களில்  2001 ஆகஸ்டு 6 -ம் தேதியில் ஏர்வாடி மனநல மையத்தில் நடந்த தீ விபத்தில் 28 நோயாளிகள் மரணமடைந்தனர். சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்ட பிற நோயாளிகள் 500 -க்கும் மேற்பட்டோர் அரசு மையங்களுக்குச் சென்றனர்.

இந்தியாவின் அதி உயர் மருத்துவமனைகள் அதிகரிக்கும் காலத்தில் இந்தியாவின் ஏழைக மக்கள் அதி உயர் எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதையும் காண்கிறோம். டெங்குவால் தத்தளிக்கும் மக்களுக்கு என்ன நிவாரணம் என்று மோடி அரசைக் கேட்டால்?

எல்லையிலே வீரர்கள் கஷ்டப்படும் போது இங்கே ஒரு கொசுவை தாங்க முடியாதா என்று கேட்டாலும் கேட்பார்கள்!

மேலும் :

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க