Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககருப்புப்பணக் கும்பலின் பினாமியாக டாஸ்மாக் நிறுவனம் !

கருப்புப்பணக் கும்பலின் பினாமியாக டாஸ்மாக் நிறுவனம் !

-

மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர், டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் ரூ.800 கோடி மதிப்புக்கு பழைய ரூ.1000, 500 பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாக அப்போதே செய்திகள் வந்தன. அப்பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு டாஸ்மாக், கூட்டுறவு வங்கிகள், கோயில்கள், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மூலமும் தமிழக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஊழல் செய்து குவித்த கருப்புப் பணத்தை மாற்றினார்கள்.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் சாதாரண பொதுமக்கள் பணத்தை மாற்றுவதற்கு முடியாமல் திண்டாடினார்கள். இந்தியா முழுவதும் 200 -க்கும் மேற்பட்ட அப்பாவி ஏழை மக்கள் கடும் வெயிலிலும், கூட்ட நெரிசலிலும் சிக்கி உயிரிழந்தனர். பணமதிப்பழிப்பு மூலம் வாழ்வாதாரத்தை இழந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்கா ..
அதே சமயத்தில், இந்தியா முழுவதும் கருப்புப்பண முதலைகள் தங்களுக்கு சாதகமான முறையில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைக் கையில் போட்டு கொண்டு சுலபமாக பணத்தை மாற்றிக்கொண்டார்கள்

பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலகட்டத்தில், 9.11.2016 முதல் 15.11.2016 வரை டாஸ்மாக் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.800 கோடி பழைய தாள்கள் செலுத்தப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை கூறியிருக்கிறது. அதாவது சராசரியாக தினமும் ரூ.115 கோடி பழைய ரூபாய் தாள்கள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளன.

டாஸ்மாக் நிறுவனத்தின் தினசரி மது விற்பனை வருமானம் ரூ.67 கோடி முதல் ரூ.70 கோடி வரை மட்டும்தான். ஆனால், ஒரு நாளைக்கு பழைய தாள்களாக மட்டும் ரூ.115 கோடி வங்கியில் செலுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக நவம்பர் மாதத்தில் மது விற்பனை குறைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் வழக்கமான வருவாயை விட அதிக பணம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வங்கியில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு டாஸ்மாக்கின் ஒருநாள் வருவாயை விட குறைவுதான் என இவ்விவகாரம் தொடர்பாக வருமானவரித் துறையிடமிருந்து வந்த அறிவிக்கைக்குப் பதில் அளிக்கப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

மேலும் அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் பேசுகையில், பழைய தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, அத்தாள்களை வாங்கக்கூடாது என குறுஞ்செய்தி மூலம் மேற்பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனாலும் பெரும்பாலான மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் 15.11.2016 வரை ஒரு வாரத்திற்கு வாடிக்கையாளர்களின் வற்புறுத்தலால் பழைய ரூபாய் தாள்களை வாங்கி வங்கியில் செலுத்தியதாகக் கூறினார்.

அதன் பின்னர் வேறொரு நாளில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கிர்லோஷ்குமார், டாஸ்மாக் மதுக்கடைகளில் பழைய ரூபாய் தாள்களை வாங்க அனுமதி அளிக்கவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் கூறியிருக்கிறார்.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார்

இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் மாட்டிக்கொண்ட கிர்லோஷ்குமார், சமீபத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் எங்கப்பன் குதிருக்குள் இல்லையென பிலாக்கணம் வைத்துள்ளார். வருமானவரித் துறையிடமிருந்து பெறப்பட்ட விளக்கம் கேட்புக் கடிதத்தில் 2016 -ம் ஆண்டு நவம்பர் 9 -ம் தேதியிலிருந்து டிசம்பர் 30 -ம் தேதிவரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்களால் செலுத்தப்பட்ட தொகையில் பணமதிப்பழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு தனியாகக் கொடுக்கப்படவில்லை எனவும், பணமதிப்பழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் தொகை, டாஸ்மாக் விற்பனைத் தொகையை விடக் குறைவுதான் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் டாஸ்மாக் பணியாளர்கள் மேலிடத்து உத்தரவை மதிக்காமல் நடந்தது தான் எனக் கூறி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். மொத்தத்தில் டாஸ்மாக் மூலம் கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றிய அதிமுக கிரிமினல்களும், அதிகாரிகளும்  தப்பித்துக் கொண்டார்கள்.

மோடி என்கிற பாசிஸ்ட்டின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை முழுக்க முழுக்க ஏழைகளையே பாதித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் கருப்புப் பண முதலைகள்  கண்டிப்பாக சிக்குவார்கள் என   நடுத்தரவர்க்கம் கனவு  கண்டிருந்தது. கருப்புப் பணக் கிரிமினல்களின்  கைக்குட்டையைக் கூட இந்நடவடிக்கையால் கிழிக்க முடியாது என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் படிக்க :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க