மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு பிறகு சட்டவிரோத ரூ.2,000 நோட்டுக்கள் பதுக்கிய வழக்கிலிருந்து, “கறுப்புப் பண” தொழிலதிபர் சேகர் ரெட்டியை விடுவிக்கும் வேலைகளில் மோடி அரசு இறங்கி உள்ளது. ‘மணல் மாஃபியா’ சேகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மையான காண்ட்ராக்டராகவும் இருந்தவர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டு பல மூத்த அமைச்சர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் சேகர் ரெட்டி. கடந்த 2016 நவம்பர் 8 -ம் தேதி பணமதிப்பிழப்பை அறிவித்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அப்போது, நாடு முழுவதும் புதிய ரூ.2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள சேகர் ரெட்டிக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 8 -ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 33 கோடியே 60 லட்சம் மதிப்பிலான ரூ.2000 ரூபாய் நோட்டுகளும், 178 தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சேகர் ரெட்டியை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரது ஆடிட்டர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்களும், பணமும் சிக்கின. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு முழுமையாக சிபிஐ -க்கு மாற்றப்பட்டது. தமிழகமே அதிர்ச்சிக்குள்ளான இந்த வழக்கில் 90 நாட்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.

இதுகுறித்து நீதிமன்றத்தில் “ரூ.33.6 கோடி புதிய 2000 நோட்டு குறித்து வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் குறித்த காலத்தில் எங்களால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. என சி.பி.ஐ. கூறியதையடுத்து, சேகர் ரெட்டி கும்பலை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
பிறகு, சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ரூ.2000 நோட்டுகளின் வரிசை எண்களைக் குறிப்பிட்டு, எந்த வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை என்ற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது.
ஆனால் ரிசர்வ் வங்கியோ, “சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எந்த பணக் கிடங்கு வழியாக சென்றன என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இல்லை. என்றும் பணத்தை அனுப்பும் போது வரிசை எண்களை தாங்கள் குறித்து வைக்கவில்லை” என்றும் ரிசர்வ் வங்கி கூலாக தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் கொண்ட பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று டிசம்பர் 2 -வது வாரம்தான் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து இயல்பு நிலைக்கு வந்த பின்னரே, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை குறித்து வைத்து அனுப்பும் பணிகளைச் செய்ய முடிந்ததாகவும், சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ள ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் தொடர்பான விவரங்கள் எவையுமே தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது.
இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் சி.பி.ஐ. அடுத்தகட்டமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சேகர் ரெட்டி மீதான வழக்கையே தள்ளுபடி செய்யும் நிலை கூட வரலாம் என்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கடந்த நவம்பர் 8 -ம் தேதி முதல் டிசம்பர் 8 -ம் தேதி வரை சேகர் ரெட்டி, கணக்கு வைத்துள்ள வங்கியில் புதிய 2,000 மதிப்புள்ள ரூ.5 கோடி பணத்தை வங்கியில் கட்டியுள்ளது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சேகர் ரெட்டியின் எஸ்ஆர்எஸ் மணல் குவாரி நிறுவனத்தின் மூலம் சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.300 கோடி பணத்தை கடந்த 2015 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை எடுக்கப்படவுமில்லை.
எனினும், சேகர் ரெட்டிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தது? பழைய ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக மாற்றியது எப்படி? என்பது தெரியவில்லை என்கிறது சி.பி.ஐ. இதனை எல்லாம் கணக்கில் கொண்டு “இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி” நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் சேகர் ரெட்டி.

கறுப்புப் பண பதுக்கலில், சேகர் ரெட்டி மட்டுமின்றி தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போதுவரை சோதனை நடத்தப்பட்ட யார் மீதும் நடவடிக்கை இல்லை. இந்தக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் வருமான வரித் துறையின் பாதுகாப்பில் இருக்கிறதேயொழிய, பறிமுதல் செய்யப்படவுமில்லை. இதுதான் மோடி அரசின் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணம்.
மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல, கர்நாடகத்திலும், மேற்குவங்கத்திலும் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இவை அனைத்தும் “குற்றவாளிகள் உட்பட” மோடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
ஆனாலும், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூ.2000 நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என்பதை சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது குற்றவாளிகளை தப்ப வைப்பது என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும்?
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டிலேயே இப்பேற்பட்ட கருப்புப் பண பெருச்சாளிகள் பகிரங்கமாக மோசடி செய்கிறார்கள். உள்நாட்டு பெருச்சாளிகளையே பிடிக்க முடியாத இந்த சூரப்புலிகள்தான் வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவார்களாம்.!
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி