Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎடப்பாடியின் குண்டர் ஆட்சியில் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது ! - வீடியோ Updates !

எடப்பாடியின் குண்டர் ஆட்சியில் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது ! – வீடியோ Updates !

-

கார்டூனிஸ்ட் பாலா நெல்லை போலீசாரால், சென்னையில் அவரது வீட்டில் வைத்து இன்று (05-11-2017) கைது செய்யப்பட்டார்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததோடு கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டனர் அச்சன்புதூர் காவல்துறையினர். ஆறுமுறை மனு அளித்தும் அதன் மீது மாவட்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கவில்லை.

“ஆமா, இந்தக் கார்ட்டூன் ஆத்திரத்தின் உச்சத்தில் நான் வரைந்தது” – கார்ட்டூனிஸ்ட் பாலா

இசக்கிமுத்துவின் தற்கொலைக்கு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் செயல்படாத எடுபிடி அ.திமு.க அரசும் தான் காரணம் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கழுவி ஊற்றியது.

இசக்கிமுத்து படுகொலை தொடர்பாக நெல்லை போலீஸ் கமிஷனர், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி ஆகியோரை அம்பலப்படுத்தி கார்ட்டூன் கேலிச்சித்திரம் வரைந்து தனது முகநூலில் வெளியிட்டிருந்தார் கார்ட்டூனிஸ்ட் பாலா. அதை பல்லாயிரக்கணக்கான பேர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

கார்டூனிஸ்ட் பாலா

இசக்கிமுத்துவின் ஆறு மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுக்காத நெல்லை கலெக்டர் இந்த கார்ட்டூன் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட நெல்லை காவல்துறை உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்து பாலாவைக் கைது செய்து தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர்.

அவரது கணினி மற்றும் இணைய இணைப்பு சாதனங்களையும் வலுக்கட்டாயமாக பிடுங்கிச் சென்றுள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 501, மற்றும் 67 (பிணையில் வெளிவரமுடியாத பிரிவு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கணினி, கணினியின் உப-பாகங்கள், அவரது கைப்பேசி, மோடம் ஆகியவை போலீசால் அள்ளிச் செல்லப்பட்டன.

பாலாவைக் கைது செய்ய 4 போலீசு மற்றும் ஒரு பெண் போலீசு இன்ஸ்பெக்டர் ஆகியோர் நெல்லையில் இருந்து வந்திருந்தனர். இன்று (05-11-2017) காலை பாலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த போலீசு அவரது குடும்பத்தினரிடம் எந்தக் காரணமும் சொல்லாமல் பாலாவின் வீட்டிலிருந்த கணினி மற்றும் அதன் அனைத்து உப பாகங்களையும், அவர் உபயோகித்த மோடம், அவரது மனைவியின் செல்போன், அவரது செல்போன் உள்ளிட்ட உபகரணங்களைப் பறிமுதல் செய்தது. அதனைத் தொடர்ந்து வலியுறுத்தி காரணம் கேட்ட பின்பு, முதல்வர் மற்றும் கலெக்டரை இழிவுபடுத்தும் விதமாக இசக்கிமுத்து விவகாரத்தில் கார்ட்டூன் வெளியிட்டதற்கு எதிராக நெல்லை கலெக்டர் கொடுத்த புகாரின் பெயரில் கைது நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியது.

கைது செய்யப்படும் சூழலில் பாலாவுக்கு சட்டரீதியாக உள்ள உரிமைகளை மறுத்து அவரை, அவர் குடியிருக்கும் பகுதியிலேயே தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறது எடுபிடி அரசின் எடுபிடியான போலீசு.

பாலா கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படும் போது அவருடன் அவரது அண்டைவீட்டுக்காரரான பாலாஜியும் உடன் சென்றுள்ளார். அவரிடமும் கூட முழுமையான விவரங்கள் எதுவும் சொல்லாது பாலாவை அழைத்துச் சென்றிருக்கிறது போலீசு. அருகில் உள்ள மாங்காடு போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆவண வேலைகளை முடித்துவிட்டு கிளம்புவதாகக் கூறிய போலீசு, மாங்காடு போலீசு நிலையம் செல்லாமல், போரூர் அருகிலேயே ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு, பாலாவின் அண்டைவீட்டுக்காரர் பாலாஜியிடம் அவருக்கான உடைகளை மட்டும் எடுத்து வந்து கொடுக்கக் கூறியிருக்கிறது. பாலாஜியும் அவருடைய உடைகளை எடுத்துக் கொண்டு போய் கொடுத்துள்ளார்.

பாலாவின் அண்டை வீட்டுக்காரர் பாலாஜி, பாலாவின் மனைவி சாந்தினி, பத்திரிக்கையாளர் அருள் எழிலன் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்ட போது அவர்கள் கூறியது பின்வரும் வீடியோவில் உள்ளது.

 

நேற்றே கைது செய்ய முயற்சித்ததா போலீசு?:

முந்தைய தினமே (04-11-2017) பாலாவுக்கு ஒரு பெண் அவரது கார்ட்டூனைப் பாராட்டி போனில் பேசி, அவரைச் சந்திக்க வெளியூரில் இருந்து வந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மழை பெய்யும் சமயத்தில் எதற்கு உங்களுக்கு வீண் அலைச்சல் என்று பாலா கேட்டுள்ளார். இருந்தும் அவர் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தவே, சரி அடையார் ஆனந்த பவனில் சந்திக்கலாம் என நேரம் கூறிவிட்டு, குடும்பத்துடன் அவர் வீட்டுப்பகுதியில் உள்ள அடையாறு ஆனந்தபவனிற்கு  சென்றுள்ளார். ஆனால் போனில் பேசிய பெண்ணோ அடையாரில் உள்ள ஆனந்தபவனிற்குச் சென்றிருக்கிறார். இதன் காரணமாக நேற்று அவரை சந்திக்கமுடியவில்லை.

இன்று கார்ட்டூனிஸ்ட் பாலாவைக் கைது செய்ய வந்த பெண் போலீசு இன்ஸ்பெக்டரின் குரலும், முந்தையநாள் தனக்கு போனில் பேசிய குரலும் ஒன்று தான் என கைது செய்து இழுத்துச் செல்லப்படும் போது தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார், பாலா. இச்சம்பவத்தை வைத்துப் பார்க்கையில் ‘காக்கிகள்’ பாலாவை நேற்றே கைது செய்யத் திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.

பெருகும் ஆதரவு:

பாலாவின் மனைவி சாந்தினியை சந்தித்துப் பேசும் தோழர்கள்

கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். முன்னணி பத்திரிக்கையாளர்கள், கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர். பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்

பாலாவிற்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை

 

(படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது அழுத்தவும்)

– வினவு செய்தியாளர்கள்