Tuesday, April 29, 2025
முகப்புசெய்திகார்ட்டூனிஸ்ட் பாலா விடுதலை ! மீண்டும் கைது செய்ய போலீசு ஆத்திரம் !

கார்ட்டூனிஸ்ட் பாலா விடுதலை ! மீண்டும் கைது செய்ய போலீசு ஆத்திரம் !

-

நெல்லை எஸ்பி அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை இன்று (06-11-2017) காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது போலீசு. முன்னதாக மக்கள் அதிகாரம் தோழர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னர் நின்று “பாலாவை விடுதலை செய்” என முழக்கம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களும், நண்பர்களும், பிற தோழர்களும் நீதிமன்ற வளாகத்தில் பாலாவை விடுதலை செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் சார்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூன்று வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். வழக்கறிஞர்கள் கொடுத்த பெட்டிசனில், வழக்குப் பதிவு செய்திருப்பதே சட்டவிரோதமான முறையில் தான் என்றும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் முதலில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று பின்னர் தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர். மேலும் பிரிவு 67-ற்கு பிணையில்  வெளியிடலாம் என்று 2008-ம் ஆண்டே சட்டதிருத்தம் செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மொத்தத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது சட்டவிரோதமானது, இரண்டாவதாக இந்தக் கைதும் சட்டவிரோதமானது, உச்சநீதிமன்றம் ஏற்கனவே கொடுத்த தீர்ப்பிற்கு நேர்விரோதமானது, மூன்றாவதாக இது பத்திரிக்கையாளரின் கருத்துரிமைக்கு எதிரானது என தங்களது வாதத்தை முன்வைத்தனர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். பெட்டிசனைப் படித்த நீதிபதி, இவ்வழக்கில் பாலாவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இதனால் தனது முட்டாள்தனமும், கிரிமினல்தனமும் அம்பலப்பட்டதால் மூக்குடைபட்ட போலீசு, அவரை விசாரிக்க நாங்கள் காவலில் எடுக்க வேண்டும் என்று கேட்டு பாலாவை விடுவிக்க மறுத்துள்ளனர். வழக்கறிஞரோடு வெளியே வந்த பாலாவை சட்டவிரோதமாக கைது செய்ய முயற்சி செய்தது போலீசு.

இச்செய்தியினைக் கேட்டு நீதிமன்றத்தில் இருந்த மற்ற வழக்கறிஞர்கள் ஒன்று கூடி, பாலாவை போலீசு காட்டுமிராண்டிகளின் பிடியில் இருந்து விடுவித்துள்ளனர். உடனடியாக வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், மீடியாக்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து நீதிபதியிடமும் முறையிட்டுள்ளார்.

இதனைக் கண்டித்த நீதிபதி, பாலாவை விடுவிக்க வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் விசாரணை அதிகாரி தவிர மற்ற அனைத்து போலீசும் கோர்ட்டு வளாகத்துக்கு வெளியே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். போலீசு கும்பலோ, அவருக்கு சம்மன் அனுப்பி நாங்கள் அவரை விசாரிக்கவிருக்கிறோம் எனக் குறிப்பிட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி, சம்மன் அனுப்புவதை முறையாக அனுப்புமாறும், சட்டப்படியான முறையை மட்டுமே பின்பற்ற வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாலாவை வழக்கறிஞர்கள் அறையில் பாதுகாப்பாக இருக்க வைத்திருக்கிறார்கள் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் பக்கபலமாக நிற்கின்றனர். தற்போது பாலா நீதிமன்றத்தில் இருந்து நண்பர்கள், வழக்கறிஞர்கள், தோழர்கள் பாதுகாப்புடன் வெளியே வந்துவிட்டார். போலிசோ எப்படியாவது அவரை கைது செய்ய வேண்டும் என்ற கொலை வெறியில் துடிக்கிறது. சட்டபூர்வ ஓட்டைகள், தவறுகள் காரணமாக போலீசின் போங்காட்டம் முடிவுற்றதால் அரசிடன் ‘நல்லபெயர்’ எடுக்கும் விதமாக வேறு என்ன செய்யலாம் என்று சதித்திட்டம் தீட்டுகிறது.

வெளியே நடக்கும் போராட்டத்தை நாம் தொடர வேண்டும்! அதுதான் பாலாவுக்கு பாதுகாப்பு!

இது  குறித்த விரிவான விவரங்களை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வினவு செய்தியாளரிடம் தொலைபேசியில் அளித்த நேர்காணல் வீடியோவை இணைத்திருக்கிறோம்.

பாருங்கள், பகிருங்கள்!