“சாதிகளிடையே வெறுப்பை உருவாக்குவதாகக்” கூறி மத்திய அரசு விருது பெற்ற மராத்தியத் திரைப்படமான ‘தாஷ்கிரியா’ வை தடைச்செய்ய கோரி புனேவைச் சேர்ந்த இந்துத்துவ கும்பல்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
பார்ப்பனர்கள் தங்களுடைய பிழைப்பிற்காக இறுதிச்சடங்கு செய்வதாக அப்படத்தில் காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திரைப்படம் வெளியிடக்கூடாது என்று புனேவின் காவல்துறை ஆணையரிடமும், திரையரங்கத்தினரிடமும் கேட்டுக்கொண்டதாகவும் அகில பாரதீய பிராமணர் சபாவின் தலைவரான ஆனந்த் தேவ் தெரிவித்துள்ளார்.
மறுபிறவியில் இருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு 13 -ம் நாள் இறுதிச்சடங்கை நடத்தும் கிர்வாந்த் பார்ப்பனர்கள் இழவு வீட்டிலும் பணம் பறிக்கிறார்கள் என்பதாக காட்டும் அத்திரைப்படம் நவம்பர் 17 -ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் கதை படத்தின் பெயரிலேயே 1994 -ம் ஆண்டு நாவலாக வெளிவந்துள்ளது. இதை எழுதியவர் பாபா பந்து. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“எல்லா மதங்களிலும் இறுதிச்சடங்கு கலாச்சாரம் உள்ளது, ஆனால் இந்துக்களின் கலாச்சாரத்தை மட்டும் இத்திரைப்படம் குறி வைக்கிறது. பார்ப்பனர்கள் காசுக்காக இறுதிச்சடங்கை நடத்துவதில்லை. மக்களாகவே விருப்பப்பட்டு செய்கின்றனர். இது நம்பிக்கை சார்ந்த விடயம்“ என்று தேவ் கூறினார்.
மத்தியத் திரைப்பட தணிக்கைக்குழுவிடம் இருந்து தடையில்லா சான்று கிடைத்து விட்டப்பிறகு என்ன பிரச்சினை என்று தேவிடம் கேட்கப்பட்டது. அந்நாவல் வெளியிடும் போது தாங்கள் சிறுவர்களாக இருந்தோம் என்றும் மத்தியத் தணிக்கைக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு இந்து கலாச்சாரத்தை பற்றி எதுவும் தெரியவில்லை; அதனாலேயே தணிக்கை சான்று கொடுத்து விட்டார்கள் என்றும் அதற்கு அவர் கூறினார். அப்படத்தின் இயக்குனர் எங்களுக்கு படத்தை காண்பித்த பின்னரே படத்தை வெளியிடலாம் என்று மேலும் கூறினார்.
சமூகத்தின் இரட்டை நிலைபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அத்திரைப்படம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் விருதுகள் பல வாங்கியிருக்கிறது என்று கூறுகிறார் அப்படத்தின் இயக்குனரான சந்தீப் படேல்.
தணிக்கைக்குழு ஏற்கனவே சான்று வழங்கி விட்டதால் வரும் வெள்ளிக்கிழமை திரைப்படத்தை கண்டிப்பாக வெளியிட இருக்கிறோம் என்று சந்தீப் கூறினார். வெறும் இரண்டு நிமிட விளம்பரத்தை மட்டும் பார்த்துவிட்டு ஏன் இந்த அமைப்புகள் எதிர்க்கின்றன என்றும் இது போக்கிரித்தனமானது என்றும் அவர் மேலும் கூறினார்.
“இந்த நாவலை 22 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் எழுதினேன். இதில் பார்ப்பனர்களையும் இந்து மதத்தையும் தவறாக எதுவும் எழுதவில்லை. இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் பல பல்கலைகழகங்களிலும் பாடமாக உள்ளது. அவர்கள் இந்த படத்தை முழுக்க பார்த்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டும்” என்று நாவலாசிரியரான பாபா கூறினார்.
“அனைத்து சமூக மக்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு அவர்களுக்கு இப்படத்தில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை விவாதிக்க வேண்டும். படத்தை எதிர்ப்பவர்கள் அதை முறையாக எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு படத்தை வெளியிடக்கூடாது என்று கூறுவதற்கு அதிகாரம் கிடையாது” என்று படத்தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
கருவறையில் இருந்து கல்லறை போகும் வரை அனைத்தையும் சடங்காக்கிவிட்டு பன்னெடுங்காலமாக மக்களை சுரண்டி வருகிறது பார்ப்பனியம். ஆகமத்தின் பெயரில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே இறை பூஜைக்கு உரிமை என்று பேசுவதை பெருமையாக பேசும் பார்ப்பனர்கள், அதை தட்டிக் கேட்டால் சடங்கு சம்பிரதாயத்தின் உரிமை என்று பேசுவார்கள். அந்த சடங்கு சம்பிரதயாத்தின் இலட்சணத்தை கோடிட்டுக் காட்டினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
வர்ணாசிரமம் என்ற பெயரில் இந்துக்களில் ஒரு பகுதியை தீண்டத்தகாதவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும், சமூகத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு. தம்மை உயர்குலத்தோனாக காட்டிக்கொண்ட பார்ப்பனர்கள் தம்முடைய சாயம் சமூகத்திடம் வெளுக்கும் போதெல்லாம் இந்துக்கள் என்ற பெயரில் மறைந்து கொள்கின்றனர்.
மேலும் :
https://thewire.in/197129/marathi-film-ban-pune/