நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மரணத்தின் பின்னணி என்ன ? பாகம் 2
சோராபுதீன் போலி மோதல் கொலை தொடர்பான வழக்கு 2012 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. 2014 -ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை அடுத்து மோடி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். சோராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த அமித்ஷா 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்ததென்ன?
மும்பை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஜே.டி உத்பத் தான் முதலில் இந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி வழக்கை ஒரே நீதிபதி ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பது இங்கே கவனத்திற்குரியது. வழக்கு விசாரணையின் துவக்கத்தில் இருந்தே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமித்ஷா. நீதிபதி உத்பத் விசாரணையின் பல கட்டங்களில் ஆஜராக உத்தரவிட்ட பின்னரும் அமித்ஷா டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் 2014 -ம் ஆண்டு ஜூன் 6 -ம் தேதி நடந்த விசாரணையின் போது அமித்ஷாவின் வழக்கறிஞர்களிடம் கண்டிப்பு காட்டிய நீதிபதி உத்பத், 20 -ம் தேதி நடக்கவுள்ள விசாரணையின் போது அமித்ஷா கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் 20 -ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அமித்ஷா ஆஜராகவில்லை; மேற்கொண்டு விசாரிக்காமல், 26 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி, அப்போது கட்டாயம் அமித்ஷா ஆஜராகியே தீர வேண்டுமென உத்தரவிட்டார். 26 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், 25 -ம் தேதியே உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலையும் மீறி நீதிபதி உத்பத் பூனா நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்யப்படுகிறார். எந்தவித முகாந்திரமோ, காரணமோ சொல்லாமல் தனது சொந்த வழிகாட்டுதலே மீறப்பட்டிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் வாயை மூடிக் கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் மோடி அதிகாரத்திற்கு வந்து விட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நீதிபதி உத்பத் மாற்றலான பிறகு லோயா நியமிக்கப்படுகிறார். வழக்கை நீதிபதி லோயா விசாரிக்கத் துவங்கிய ஆரம்பத்தில் நீதிமன்றத்துக்கு ஆஜராக வேண்டுமென அமித்ஷாவை வற்புறுத்தாமல் கொஞ்சம் நீக்குப் போக்காக நடந்து கொண்டார். அதாவது, வழக்கு விசாரணைகளின் போது அமித்ஷா வெளியூரில் இருந்தால் ஆஜராகத் தேவையில்லை எனவும், சாட்சி விசாரணைகளுக்கு பின் நேரடி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனவும் லோயா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அக்டோபர் 31 -ம் தேதி வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மும்பை வந்திருந்தார் அமித்ஷா. மும்பையில் இருந்து கொண்டே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த அமித்ஷாவை அன்றைக்கு கண்டித்தார் நீதிபதி லோயா.
அமித்ஷாவின் மேல் சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த 10,000 பக்கத்திற்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை முழுவதும் படித்து வழக்கை முழுவதுமாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டினார் லோயா. ஆனால், அமித்ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து விசாரணையின் ஒவ்வொரு அமர்வின் போதும் வழக்கை விசாரிப்பதற்கு முன் அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்கும் மனுவை முதலில் விசாரிக்க வேண்டுமென நீதிபதி லோயாவிடம் வற்புறுத்தி வந்தனர்.
இதற்கிடையே வழக்கின் தீர்ப்பை “சாதகமாக” வழங்க வேண்டுமென நீதிபதி லோயாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான மிரட்டல்கள் வந்துள்ளன. தனக்கு வரும் மிரட்டல்கள் பற்றியும் அதன் பின்னே இருப்பவர்களின் அதிகார பலம் பற்றியும் நன்கு அறிந்திருந்த லோயா, அவற்றைக் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த வழக்கோடு நீதிபதி வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டு ஊருக்கு வந்து நிம்மதியாக விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

2014 -ம் ஆண்டு ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் தன்னைத் தொடர்பு கொண்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித்ஷா, அமித்ஷாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்க 100 கோடி ரூபாய் பேரம் பேசியதாக நீதிபதி லோயா தனது சகோதரி அனுராதா பியானியிடம் கூறியுள்ளார். நள்ளிரவுகளில் நீதிபதி லோயாவை சிவில் உடையில் வெளியிடங்களுக்கு வரச் சொல்லி சந்தித்த தலைமை நீதிபதி மோகித்ஷா, சோராபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் தீர்ப்பை அமித்ஷாவுக்கு சாதகமாக எழுதும்படி அழுத்தம் கொடுத்து வந்தார் என நீதிபதி லோயாவின் சகோதரி குறிப்பிடுகிறார்.
தனது மகனுக்கு லஞ்சமாக பணம் மட்டுமின்றி மும்பையில் ஒரு வீட்டையும் கொடுக்க அமித்ஷா தரப்பினர் தயாராக இருந்தார்கள் என நீதிபதி லோயாவின் தந்தை குறிப்பிடுகிறார். மேலும் அமித்ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை டிசம்பர் 30 -ம் தேதி அறிவிக்க வேண்டுமெனவும், ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனம் இந்த வழக்கின் மேல் இல்லாத வகையில் அன்றைய தினம் வேறு ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் எனவும் அமித்ஷா தரப்பினர் சொல்லி வந்திருக்கின்றனர். நீதிபதி லோயாவின் மரணத்திற்குப் பின் 2014 -ம் ஆண்டு டிசம்பர் 15 -ம் தேதி எம்.பி கோசாவி எனும் நீதிபதி பொறுப்பேற்கிறார். புதிய நீதிபதி பொறுப்பேற்ற பதினைந்தே நாளில் (அதே டிசம்பர் 30 -ம் தேதி) அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்கிறார்.
அதே டிசம்பர் 30 -ம் தேதி தான் கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுகிறார். அன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் தோனியின் கிரிக்கெட் சாதனைகள், அவரது அறிவிப்பின் பின் உள்ள அரசியல் குறித்தெல்லாம் கிரிக்கெட் வல்லுநர்கள் அலசித் துவைத்துக் காயப் போட்டனர்; இந்த ஆரவாரங்கள் தொலைக்காட்சித் திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது கீழே ஒருவரிச் செய்தியாக அமித்ஷா விடுதலை கடந்து போனது.
***
அமித்ஷாவைத் தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, பி.சி பாண்டே, கூடுதல் டி.ஜி.பி ஜோஹ்ரி, அதிகாரிகள் அபய் சுதாசாமா, ராஜ்குமார் பாண்டியன் அமீன் போன்றோரும் யாஷ்பால் சுதாசாமா, அஜய் பட்டேல் போன்ற கூட்டுறவு வங்கி அதிகாரிகள் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒவ்வொருவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட அனைவருக்குமே பதவி உயர்வுகள் தேடி வந்தன. இன்னொருபுறம் வழக்கை நேர்மையாக விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய் 2007 -ல் இருந்து தொடர்ந்து பணியிடமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறார்.
அமித்ஷாவை விடுதலை செய்த சி.பி.ஐ. நீதிமன்றம், அவர் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. பொதுவாக புலனாய்வு அமைப்புகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் போது அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வது வழக்கம்; அமித்ஷா விவகாரத்தில் இந்த வழக்கம் பின்பற்றப்படவில்லை.
சோராபுதீன் ஷேக்கை மக்கள் அப்படியே மறந்து போனார்கள். போலி மோதல் கொலைகள் சூடாக விவாதிக்கப்பட்டு வந்த சூழலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் இவ்வாறாகப் பேசினார் மோடி:
“காங்கிரசுக்காரர்கள் மோடி சட்டவிரோத என்கவுண்டர் கொலைகளைச் செய்வதாகச் சொல்கிறார்கள். அவர்கள் மோடி தான் சோராபுதீனைக் கொன்றதாகச் சொல்கிறார்கள். காங்கிரசு நண்பர்களே, உங்கள் கையில் மத்திய அரசு அதிகாரம் உள்ளது. உங்களுக்குத் துணிவிருந்தால் மோடியை தூக்கு மேடைக்கு அனுப்பிப் பாருங்களேன்” இவ்வாறாகச் சவால் விட்டவர், கூட்டத்தினரை நோக்கி “சோராபுதீன் ஷேக்கை என்ன செய்யலாம்?” எனக் கேட்டார்.
அதற்கு அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவினர் “அவனைக் கொல்லுங்கள், அவனைக் கொல்லுங்கள்” என பதிலளித்தனர்.
***
நீதிபதி லோயாவின் சந்தேகத்துக்குரிய மரணம் அம்பலமானதைத் தொடர்ந்து தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்கள் அனைத்தும் ஓர் ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்று விட்டன. அமித்ஷாவைப் பற்றிய செய்தியை வெளியிடும் அளவுக்கு இந்த ஊடகங்களின் முதுகெலும்பு உறுதியாக இருக்கும் என எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான்; எனினும், பொதுவாக பீற்றிக் கொள்ளப்படும் நீதித்துறை மாண்பின் கோவணத்தை லோயாவின் குடும்பத்தார் உருவி எறிந்திருப்பதைப் பற்றிக் கூட யாரும் பேசவில்லை. வயர், ஸ்க்ரோல் போன்ற ஓரிரு இணையப் பத்திரிகைகளே இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகின்றன.
செய்தி வெளியாகி ஏழு நாட்களுக்குப் பின் கேரவனில் வெளியான கட்டுரையில் உள்ள தரவுகள் உறுதியில்லை என்பதைத் தமது சொந்த விசாரணைகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக எழுதியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. உண்மையில் கேரவன் கட்டுரை எழுப்பும் சிக்கலான கேள்விகளை மிக கவனமாக தவிர்த்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், அந்தக் கட்டுரை எழுப்பும் இரண்டாம்பட்சமான கேள்விகளை மட்டும் தெரிவு செய்து அதற்கு பதிலளித்துள்ளது. அப்படி அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களும் தம்மளவில் முரண்பாடுகள் கொண்டவையாகவே உள்ளன.
முதலில் நீதிபதி லோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதென்பதையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையும் உடன் தங்கியிருந்த நீதிபதிகளிடம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்கிறது. ஆனால், நீதிபதி லோயா முதலில் திருமணத்திற்குச் செல்லும் உத்தேசத்தில் இல்லை என்பதையும் சில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வற்புறுத்தலுக்குப் பின்னரே திருமணத்திற்குச் சென்றார் என்பதும் கேரவன் கட்டுரையிலேயே உள்ளது. மேலும், நீதிபதியின் மரணம் சந்தேகத்துக்குரியது என்றால், உடனிருந்தவர்களின் உதவியின்றி அதை நிறைவேற்றியிருக்க முடியாது.

அடுத்து மாரடைப்பு ஏற்பட்ட உடன் கேரவனில் சொல்லப்பட்டதைப் போல் லோயாவை ஆட்டோவில் அழைத்துச் செல்லவில்லை எனவும், உள்ளூர் நீதிபதி விஜய்குமார் பார்டேவின் காரில் அழைத்துச் சென்றதாகவும் எக்ஸ்பிரஸ் கட்டுரை தெரிவிக்கிறது. எந்த வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள் என்பதல்ல – அப்படி மாரடைப்பு ஏற்பட்ட உடன் குடும்பத்தாருக்கு ஏன் தெரிவிக்கவில்லை. மேலும் நீதிபதி அதிகாலை 4:45 -க்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் 6:15 -க்கு இறந்துள்ளார் – ஆனால், அதிகாலை 5:00 மணிக்கே நீதிபதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்து, நீதிபதிக்கு ஈ.சி.ஜி எடுத்ததாக எக்ஸ்பிரஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால், அந்த ஈ.சி.ஜி -யில் நேரமும், பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி பலரும் சுட்டிக்காட்டிய பின், தமது பத்திரிகை சார்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசியதாகவும் அவர்கள் “டெக்னிக்கல் பிரச்சினை” காரணமாக தவறான நேரமும் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனச் சொன்னதாகவும் தனது கட்டுரையில் பிற்சேர்க்கையாக குறிப்பிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
அடுத்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணம் சந்தேகத்துக்குரியதல்ல என குறிப்பிட்டுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இயற்கையான மரணத்திற்கு பிரேதப் பரிசோதனை அவசியம் என தீர்மானித்தது யார் என்பதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. மேலும் பிரேதப்பரிசோதனையின் போது வெளியேறிய ரத்தம் நீதிபதியின் உடையில் பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டுள்ளனர் – ஆனால், பிரேதப் பரிசோதனை முடிந்த பின் மருத்துவமனை கவுன் அல்லது வெள்ளைத் துணியால் சுற்றி உடலைக் கொடுக்கும் வழக்கமான நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதைப் பற்றி எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஏதும் சொல்லவில்லை.
அடுத்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட்டது நீதிபதி லோயாவின் ஒன்றுவிட்ட சகோதரனின் மருமகன் பிரஷாந்த் ரத்தி என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கண்டறிந்துள்ளது. ஆனால், கேரவனின் விசாரணையின் போது நீதிபதியின் தந்தை தனக்கு நேரடிச் சொந்தம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தன்னுடைய மாமா தன்னை அழைத்து தனது ஒன்றுவிட்ட சகோதரன் இறந்து விட்டதாகச் சொல்லி மற்ற நடைமுறைகளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பிரஷாந்த் ரத்தி குறிப்பிட்டுள்ளார். இதை ஏன் இத்தனை நாட்களாக நீதிபதி லோயா குடும்பத்தாரிடம் சொல்லவில்லை என்பது பற்றியோ, அப்படி பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட நீதிபதி குடும்பத்தாரிடம் தொலைபேசியிலாவது அனுமதி பெறப்பட்டதா என்பதைக் குறித்தும் பிரஷாந்த் ரத்தி ஏதும் சொல்லவில்லை.
லோயாவின் மர்ம மரணம் குறித்த கேரவனின் கட்டுரைகளுக்கு வழக்கமான பா.ஜ.க சொம்புகளான ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்றவர்களை நாடாமல் வழக்கமாக ஓரளவு நடுநிலையோடு செயல்படும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நாடியுள்ளனர் என்பதை அப்பத்திரிகையில் வெளியான மறுப்புக் கட்டுரையில் உள்ள ஏராளமான ஓட்டைகளே தெரிவிக்கின்றன. மேலும், பதிலளிப்பதற்கு வசதியான கேள்விகளை மட்டுமே தெரிவு செய்து பதிலளித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஈஸ்வர் பஹேட்டியின் அதீத அக்கறை பற்றியோ, நீதிபதியின் செல்பேசியை மூன்று நாட்கள் கழித்து இவரே கொண்டு வந்து கொடுத்தது பற்றியோ ஏதும் சொல்லவில்லை.
***
பச்சை ரத்தப் படுகொலைகளை எந்த மன உறுத்தலும் இன்றிச் செய்யும் கிரிமினல் கும்பல் ஒன்றின் கையில் மொத்த அதிகாரமும் குவிந்துள்ளது. தங்கள் உடலில் காவி ரத்தம் பாயும் ஒரு சில ‘இந்துக்கள்’ “சாகப் போவது துலுக்கனும் கிறித்தவனும் தானே” என இறுமாந்து இருக்கின்றனர். துள்சிராம் பிரஜாபதியும் நீதிபதி லோயாவும் இந்துக்கள் தான். சொல்லப் போனால் சோராபுதீன் ஷேக் மற்றும் கௌசர்பி ஆகியோரின் உயிர்கள் ஓரிரு நாள் சித்திரவதைக்குப் பின் பறிக்கப்பட்டுவிட்டன.
ஆனால், துள்சிராம் பிரஜாபதி பல மாதங்களாக நெருங்கி வரும் மரணத்தைக் கண்டு அஞ்சியவாறே சிறைக் கொட்டடியில் தவித்து பின் உயிரை விட்டுள்ளான். நீதிபதி லோயா பல மாதங்கள் உளவியல் சித்திரவதைகளை அனுபவித்த பின் “இயற்கை மரணம்” அடைய வைக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளது; அவர்களில் பெரும்பாலானோர் “இந்துக்கள்” என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் ஊழல்வாதிகள் என்றால் பாரதிய ஜனதாவோ மதவெறியும், கொலை வெறியும், ஊழல் வெறியும் இணைந்த வீரிய ஒட்டுரகமாக உள்ளது. இரத்த தாகத்தோடு அலையும் இந்த பாசிச மிருகத்தை உடனடியாக அழித்தொழிப்பதே உண்மையான தேசபக்தர்களின் முன் உள்ள அவசரக் கடமை.
– சாக்கியன்
இந்த கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
செய்தி ஆதாரம் :
- A Family Breaks Its Silence: Shocking Details Emerge In Death Of Judge Presiding Over Sohrabuddin Trial
- Chief Justice Mohit Shah Made An Offer Of Rs 100 Crore To My Brother For A Favourable Judgment In The Sohrabuddin Case: Late Judge Loya’s Sister
- Who killed Sohrabuddin? Debate around judge’s death puts focus back on murders by Gujarat police
- CBI judge BH Loya’s death in 2014: Nothing suspicious, say two Bombay HC judges who were at hospital