Wednesday, April 16, 2025
முகப்புசெய்திதேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை !

தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை !

-

காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (MGNREGA) கீழ் பணி புரிபவர்களுக்கு 2017 – 18 நிதியாண்டின் முதலிரண்டு காலாண்டுகளுக்கு வழங்க வேண்டிய நிதியில், வெறும் 32% ஊதியம் மட்டுமே மோடியின் அரசு வழங்கியுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகமோ (MORD) இதற்கு முரணாக 85% ஊதியம் நேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் நாராயணன் இரண்டு ஆய்வாளர்களை இணைத்துக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினார். ஊதியத்தை உரிய நேரத்தில் கொடுப்பதிலும், ஊதிய காலதாமதத்திற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டிலும் MGNREGA சட்டத்திற்கு புறம்பாக மத்திய அரசு நடந்து வருவதாகவும் அந்த ஆய்வு குற்றஞ்சாட்டுகிறது.

பத்து மாநிலங்களைச் சேர்ந்த 3,603 ஊராட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை டிசம்பர் 1 -ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாராயணன் வெளியிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கூறியதற்கு மாறாக வெறும் 32 விழுக்காடு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

வார வேலை முடிந்த 15 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதை MGNREGA சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

“முன்பு போலல்லாமல் [MGNREGA] வேலைத்திட்டத்தின் ஊதிய வழங்கல் முறையை இந்த அரசு மையப்படுத்தியிருக்கிறது. தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் கொடுப்பதற்கு ஒருவேளை விரும்பினாலும் கூட எந்த அதிகாரமும் மாநில அரசுக்கு இல்லை. இதற்காக தேசிய மின்னணு நிதி மேலாண்மை அமைப்பு (Ne-FMS) ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி வேலை வாரம் முடிந்தவுடன் தொகுதி அல்லது ஊராட்சி அளவில் பணப்பரிமாற்ற ஆணைகள் (FTO) தயார் செய்யப்பட வேண்டும்.

இணையத்தின் வழியாக பணப்பரிமாற்ற ஆணை மைய அரசுக்கு பின்னர் அனுப்பப்படும். மைய அரசு அதற்கு உடனடியாக இணையத்தின் மூலமாகவே ஒப்புதல் அளித்து பின்னர் பணியாளரின் வங்கிக் கணக்கு அல்லது தபால் கணக்கிற்கு இணையப் பரிமாற்றம் செய்யப்படும். இந்த அமைப்பு உண்மையில் வேலை செய்திருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. வெறும் 32% பணம் மட்டுமே ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் செலுத்தப்பட்டிருப்பது, அது சரியாக வேலை செய்யவில்லை என்பதையே காட்டுகிறது” என்று நாராயணன் கூறினார்.

உரிய நேரத்தில் பணம் கொடுக்காதது பிரச்சினையின் ஒருபக்கம் மட்டுமே. ஆனால் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் சட்டத்தின் படி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் பணப்பரிமாற்ற ஆணை தயார் செய்யப்படும் வரை மட்டுமே இழப்பீடு கணக்கில் கொள்ளப்படுகிறது. பல நேரங்களில் பணப்பரிமாற்ற ஆணை தயாரித்த பிறகும் பணம் வருவதற்கு மாதங்கள் கூட ஆகிறது. இதை இந்த அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது” என்கிறார்.

அவர்கள் ஆய்வு செய்த ஊராட்சிகளில் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத்தொகை 1.03 கோடி என்று இருந்தது. வேலை வார முடிவிற்கும் பணப்பரிமாற்ற ஆணையைத் தயாரிப்பதற்கும் இடைப்பட்ட கால தாமதத்திற்கான இழப்பீடு இது. ஆனால் அதன்பிறகு (வங்கிக் கணக்கிற்கு கிடைக்கும் வரை) ஏற்பட்ட காலதாமதத்தையும் கணக்கில் சேர்த்தால் இழப்பீட்டுத் தொகை உண்மையில் 7.52 கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். இந்த வகையிலும் 86% குளறுபடி நடந்திருக்கிறது.

சட்டத்தின் படி இந்திய அரசு வெறும் 0.05% இழப்பீட்டைக் கொடுத்தாலே போதுமானது. இது மிகவும் சொற்பமானது. எடுத்துக்காட்டாக ஒரு பணியாளருக்கு 1,000 ரூபாய் வழங்க வேண்டும் எனில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வெறும் 50 காசுகள் மட்டுமே இழப்பீடாக அரசு கொடுக்கும்.

பணப்பரிமாற்ற ஆணைகள் தயாரிக்கப்பட்டும் இரண்டு மாதங்களாக 100% ஊதிய வழங்கல் நிலுவையில் இருக்கிறது. மின்னணு அமைப்பை முதலில் நடைமுறைப்படுத்திய கேரளா போன்ற மாநிலங்களுக்கு கூட கடந்த 71 நாட்களாக ஊதிய வழங்கல் நிலுவையில் இருக்கிறது. மேலும் வேறு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை.

“ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இதுவரை பணியாளர்களுக்கு குறைந்தது 3,243 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் கொடுக்கவில்லை. வரவிருக்கும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும்” என்று வேலைவாய்ப்பு உத்தரவாததிற்கான மக்கள் நடவடிக்கை – People’s Action for Employment (Guarantee) அமைப்பைச் சேர்ந்த நிக்கல் டே, பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இதே ஆய்வுக்குழு 2017, அகஸ்டு மாதம் நடத்திய மற்றொரு ஆய்வில் சரியாக நிதி ஒதுக்கப்படாதது தெரிய வந்தது. இச்செய்தி வெளிவந்த பிறகு நிதியமைச்சகத்தின் செலவுத்துறையைச் சேர்ந்த உதவி செயலாளர் மூலம் கண்துடைப்பிற்காக சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தணிக்கை அறிக்கைகளை சில மாநிலங்கள் அளிக்கவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை காட்டி பணம் அனுப்புவதையே மத்திய அரசு ஒட்டுமொத்தமாக தடுத்து விட்டது. “மாநில அரசுகள் அறிக்கை தரவில்லை என்பதற்காக ஏழை மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்” என்று கேட்கிறார் நிக்கல் டே.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு

மாநில அரசுகள் கேட்ட தொகையோ 80,000 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோ வெறும் 48,000 கோடி தான். பழைய இழப்பீட்டுக் கணக்கையும் சேர்த்தால் கிராமப்புறங்களின் துயரை அகற்றுவதற்கு இந்த தொகை மிகவும் சொற்பமானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றார் சந்திப்பில் கலந்து கொண்ட பிரசாந்த் பூசன்.

“தாமதப்படுத்தும் தந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் எங்களைப் போன்ற ஏழை மக்களை நிம்மதியாக சாகவோ அல்லது வாழவோ இந்த அரசாங்கம் விடுவதில்லை. இதைவிட கொத்தடிமைகளாக நாங்கள் இருந்திருப்பதே மேல் என்று சில நேரங்களில் நான் நினைக்கிறேன்” என்று உ.பி, சீதாபூரைச் சேர்ந்த MGNREGA பணியாளரான ராம் பேடி இச்சந்திப்பில் கூறினார்.

தன்னுடைய பகுதிக்கு வரவேண்டிய MGNREGA -ன் நிதியானது 2013 -ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கிறது என்றும் இதனால் பெரும்பாலானோருக்கு குஜராத்திற்கு இடம் பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார், தெற்கு இராஜஸ்தானின் கோத்ராவைச் சேர்ந்த தர்மசந்த்.

‘மீட்பர்’ மோடியின் நடவடிக்கைகள் அப்படியிருக்கின்றன. ஆனால் “நீங்கள் இங்கே சாதித்துள்ளது மிகவும் தனிச்சிறப்பானது. தேனீர் விற்பவராக இருந்து இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரை மாற்றம் என்பது சாத்தியம் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்” என்று ஐதராபத்தில் நடைபெற்ற உலக தொழில்முனைவோர் உச்சிமாநாட்டில் இவாங்கா ட்ரம்ப் மோடியை பாராட்டியிருந்தார். இந்த பாராட்டிற்கு செலவழிக்கப்பட்ட பணம் எப்படியும் பல கோடிகளில் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

ஏழை எளிய மக்களுக்கான நிதியை அள்ளி அம்பானிக்கும், அதானிக்கும், அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தடையின்றி கொடுத்ததுதான்  மோடி அரசின் சாதனை என்பது ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தை பார்க்கும் போது உறுதியாகிறது.

மேலும் :


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க