Wednesday, April 16, 2025
முகப்புஉலகம்ஆசியாபாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டம்

பாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டம்

-

பாகிஸ்தான் என்றதும், இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், தாலிபானும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு, சராசரி பொது மக்களின் மனங்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் இன்றைக்கும் நிலவும் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகள், அதற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம், யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை. மிதவாத சமூக ஜனநாயகவாதிகள் முதல் தீவிர மாவோயிஸ்ட்கள் வரையில், இன்றைக்கும் பல இடதுசாரி கட்சிகள் அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எழுபதுகளில், ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஆப்கான் முஜாகிதீன் குழுக்களுக்கு உதவிய வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், பலருக்குத் தெரியாத ஓர் உண்மை உண்டு. பாகிஸ்தானில் இயங்கும் கம்யூனிஸ்ட் அமைப்புகள், சோவியத் இராணுவ உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் நிலவுவதாக அப்போது வதந்தி கிளப்பி விடப் பட்டது. அந்தக் காரணத்தைக் கூறித் தான், பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தது.

பாகிஸ்தானில், அஷ்டநகர் மக்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தின் ஊடாக தமது சமூக பண்பாட்டு விடுதலையை பெற்றுக் கொண்டனர். மார்க்சிய லெனினிச சித்தாந்தம், அந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது. அஷ்ட நகர் என்பது, சமஸ்கிருதத்தில் எட்டு கிராமங்களை குறிக்கும். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த போராட்டம் பற்றிய முழுமையான ஆவணப் படம் இது. வரலாற்றில் மறைக்கப் பட்ட பாகிஸ்தானிய உழைக்கும் மக்களின் போராட்டம் பற்றிய ஆவணப் படுத்தல்.

நன்றி : தோழர் கலையரசன்,  கலையகம்