Saturday, April 19, 2025
முகப்புசமூகம்வாழ்க்கைஉடனே போயிருந்தா பல பேரைக் காப்பாத்தி இருக்கலாம் - தூத்தூர் மக்கள் - வீடியோ

உடனே போயிருந்தா பல பேரைக் காப்பாத்தி இருக்கலாம் – தூத்தூர் மக்கள் – வீடியோ

-

தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கில்பெர்ட் தனது இளைய தம்பி மற்றும், மேலும் இருவருடன் 29 -ம் தேதி அதிகாலையில் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார். அரசு முறையான முன்னறிவிப்பு செய்யாத காரணத்தினால், புயல் குறித்து அறிந்திராத சூழலில்தான் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள்.

புயல் காற்றில் படகு நிலை குலைந்து கடலில் மூழ்கியது. கில்பெர்ட்டும் மற்ற மீனவர்களும் படகை நிமிர்த்துவதற்கு கடுமையாகப் போராடியுள்ளனர். இதில் படகு மோதி, அனைவருக்கும், கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கடுமையான காயத்துடன் கிட்டத்தட்ட 24 மணி நேரம் வடக் கயிறு ஒன்றை பிடித்துக் கொண்டே மீட்புக் கப்பல் வருமா எனக் காத்திருந்தனர் நால்வரும்.

குடிக்க நீர் கூட இல்லாமல், சோர்ந்து துவண்டு போன கில்பெர்ட்டை அவரது இளைய சகோதரர் கையிலேந்தி காத்திருக்கிறார். இறுதியில் தனது இளைய சகோதரனது கையிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருடன் வந்த மற்ற மூவரில் மேலும் ஒருவரும் உயிர் இழந்துள்ளார்.

அவ்வழியே வந்த ஜப்பானிய தனியார் கப்பல் உயிருடன் இருந்த இருவரை ஹெலிகாப்டர் வழியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தது. “சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்குமே…” என்கிறார் கில்பெர்ட்டின் மனைவி சலோமி.

30 -ம் தேதி இவர்கள் மீட்கப்பட்ட சமயத்திலாவது அரசு மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால் தத்தளித்துக் கொண்டிருந்த பல மீனவர்களை மீட்டிருக்கலாம். ஆனால் அரசு அதற்கு மறுநாள் தான் தேடுதல் பணியை ஆரம்பித்தது. மக்களை காக்க எந்த ஒரு அக்கறையும் இல்லாத கேடுகெட்ட அரசாகவே மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன.

வீடியோ – நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு