கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று நடந்துள்ளது. சத்தியசோதனை செய்த சத்தியாகிரகி, அகிம்சா மூர்த்தி காந்தி தேசமென்பதால் இது நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தகுதியின் கீழ் வராத தொழிலாளியின் அடிப்படை மாதச் சம்பளம் ரூ. 10,500/- என சட்டம் போட்டு விட்டதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஒரே நாடு ஒரே தேசம் – ஒரே வேலைக்கு நிரந்தர செவிலியர் சம்பளம் 35 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரம் வரை வாங்கும் பணியிடத்தில் ரூ.7,700/-க்கு 5 ஆண்டுக்கும் மேல் 11,000 செவிலியர்களை வேலை வாங்கி வருகிறது தமிழக அரசு.
இந்த ரூ.7,700 சம்பளத்திற்கு கணவன் மனைவி பிரிந்து, மாவட்டம் விட்டு மாவட்டம் போய் பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்துவரும் தங்கள் அவலத்தை மாற்ற சம்பள உயர்வு கேட்டு சுகாதாரத் துறை தலைமை இயக்குநரகம் (DMS) முன்பு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள் செவிலியர்கள்.

3 நாட்களுக்கும் மேல் நீடித்த போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 -க்கும் மேற்பட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த செவிலியர்கள் இயற்கை உபாதைக்கு ஒதுங்கவும் இயலாதபடி கழிப்பறைக்குப்பூட்டு போட்டு போலீசு வைத்துகாவல் காத்தது தலைமை சுகாதார இயக்குநரகம். பெண்களுக்கே உண்டான இயல்பு வாழ்க்கைப் பராமரிப்பைத் தடுத்து, மருத்துவ செவிலியர்களுக்கே சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கியது மாநில சுகாதாரத் துறை இயக்குநரகம். இதைக் கேட்கநாதியற்று இருந்தும் தங்கள் உரிமைக்காக மூன்று நாள்களாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர் செவிலியர்கள்.
தொழிலாளர்கள் போராட்டம் என்றாலே போலீசை வைத்து காட்டுமிராண்டி தாக்குதல் நடத்திப் போராட்டத்தை ஒடுக்கும் அரசும் ஆட்சியாளர்களும் இந்த முறை “பெண்கள்’ என்ற கரிசனையால் இதனினும் மேலான ஒடுக்குமுறையைக் கத்தியின்றி இரத்தமின்றி நடத்தும் திறமைசாலிகளான உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் ஒப்படைத்தனர்.
மாதம் ரூ. 2 இலட்சம் ஊதியம், குடியிருப்பு, கார், போன், உதவியாளர் என சகலமும் குடும்பத்துடன் அனுபவிக்கும் மாட்சிமை பொருந்திய மாண்புமிகு நீதியரசர்கள், செவிலியர்கள் போராட்டம் பொதுமக்களைப் பாதிப்பதாகவும் ரூ.7,700/-சம்பளம் கட்டுப்படியானால் வேலையை செய் அல்லது வேலைவிட்டுப்போகுமாறு கோபம்கொண்டு கொதித்துப்போராட்டத்திற்குத் தடை விதித்துள்ளனர்.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு துறையின் இயக்குநர்கள், தலைமை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், ஆணையாளர்கள் என ஆளும் அதிகார வர்க்கங்களின் ஊதியம், குடியிருப்பு, கார், மின்சாரம், போன், குடிதண்ணிர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்காக இரவும் பகலுமாக உண்மையிலேயே உழைக்கும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை இவர்களின் தயவின்கீழ் கெஞ்சி வாழ வைத்துள்ளது. மற்ற யாவரும் இவர்களின் அடிமையாகவே இருக்கவேண்டும் என்பதுதான் இந்த நாட்டின் எழுதப்படாத விதி.
தமது அறியாமையால் தொடர்ந்து அற்ப குற்றங்களைச் செய்து சிறையில் கிடக்கும் கைதிகள் மற்ற கைதிகளை டேய், ஏய், வாடா, போடா’ என ஒருமையிலேயே அழைப்பார்கள். இது இவர்களின் அடிமை மனோபாவத்தால் ஏற்பட்ட விளைவு.
போலீசுகாரர்கள் தங்களை அதிகாரம் படைத்தவர்கள் போல் செய்யும் நடைமுறையும் இதை ஒத்ததே. இதுமேல்சொன்ன அதிகாரவர்க்கங்களின் அடிமைகளாக அவர்களை நடத்துவதன்மூலம் ஏற்பட்டுள்ள அடிமை மனோபாவம்.

வாய்க்கால், வரப்பு பிரச்சினைக்காக நீதிமன்றத்திடம் நம்பி நீதி கேட்டு வந்த கிராமத்து விவசாயிகள் வழக்காடுவதற்காக இருந்த நிலத்தை இழந்ததோடு அவர்கள் வாழ்நாள் முடிந்தும் தீர்ப்பு வராத வழக்குகள் ஏராளம்.
தொழிலாளிகளைச் சட்டவிரோத வேலை நீக்கம் செய்துவிட்டு, ஆலைக்குள் வராமல் தடுக்க தடையாணை கோரும் முதலாளிகளுக்கு எதையும் கேட்காமல் தடை கொடுத்து, கொத்து கொத்தாக தொழிலாளிகளின் வாழ்வை அழிப்பது, பொது நீதிக்காக போராடுபவர்களின் மீது போலீசு தமது எடுபிடிகள் மூலம் எழுதி வாங்கிய புகாருக்கு பொருத்தமில்லாமல் அற்ப காரணங்களுக்கு பிணையிலேயே வர முடியாதபடி 7, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு போராடும் மக்களில் மாணவர்கள், பெண்கள் எனக் கூடப் பார்க்காமல் பிணை வழங்க மறுக்கிறார்கள் நீதிபதிகள்.
புகாருக்கே சம்மந்தமில்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகள் பற்றி எந்த மறு கேள்வியும் கேட்காமல் இருப்பதுடன் பிணை வழங்காமல் இழுத்தடித்த போதெல்லாம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக வாயே திறக்காத மாட்சிமை பொருந்திய மாண்புமிகு நீதிபதிகள் இப்போது செவிலியர்கள் போராடும்போது மக்களுக்குப் பிரச்சினை எனக் கூறுவது வேடிக்கையானது.
இதுவரை போலீசு மூலம் மட்டுமே நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு சடங்குத்தனமான அறிக்கைவிட்டு ஓலமிடும் ஒட்டுக்கட்சிதலைவர்களும், அதன் சங்கங்களும் நீதிமன்ற அவமதிப்பு என்ற மாபாதகத்திற்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் நீதிமன்ற மாண்பைக் காக்க அனைவரும் கள்ள மெளனம் சாதிக்கின்றனர்.
கேட்பாரற்ற நர்சுகள் செய்வதறியாது தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக முடித்துக் கொள்வதாக அறிவித்து அவமானமும் விரக்தியுமாக தங்கள் ஊர் திரும்பி, மீண்டும் தங்கள் வேலையைச் செய்துவருகிறார்கள்.
இந்தியா வல்லரசு நாடு என உலகம் சுற்றி மோடி உலகத்தில் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான இந்து இந்தியாவைத் தான் நாலு கால் பாய்ச்சலால் உயர்த்தி விட்டதாக பார்ப்பன இந்து இந்தியாகும்பல் புளகாங்கிதம் அடைகிறது.
ஒரு மனிதனின் சராசரி வாழும் வசதியில் இந்தியா 148 நாடுகளில் 131வது இடத்தில் உள்ளது.
அடிப்படை சம்பளம் ரூ.10,500/- எனச் சட்டம் போட்டுள்ளது மத்திய அரசு. நான்கு ஆண்டுகள் பயிற்சி முடித்து, மருத்துவ செவிலியராக வேலை பார்க்கும் செவிலியர்களின் அடிப்படைசம்பளம் ரூ.7,700 என்பதை ஏற்றால் வேலை செய், இல்லையேல் வேலையைவிட்டுப் போ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேசுவது சமூக நீதிக்கு எதிரானது. இதன் மீது கேள்வி எழுப்பினால் அவன் தீவிரவாதி, தேசவிரோதி. இதுதான் இந்திய நாட்டின் சனாதனஜனநாயகம்.
– இல. பழனி