இவளல்லவோ பெண்!
சாதிய – மத எதிர்ப்பில்,
மண் என்றால்
அது தமிழ்நாடு
பெண் என்றால்
அது கவுசல்யா
தந்தை என்றால்
அது பெரியார்!
கவுசல்யா…
பெண்ணின் பெருமை
மட்டுமல்ல
இந்த மண்ணின் பெருமை,
ஆயிரம் அடக்குமுறைகள்
அழுத்தினாலும்
சாதிய வேலிகள் தடுத்தாலும்
சமுதாயம்
முன்னோக்கி வளர்ந்தே தீரும்
என்ற வரலாற்றின் உண்மை.

தனிப்பட்ட
காதலுக்காக மட்டுமன்றி
தான் வாழும் சமூகத்தின்
கொடுமைகளுக்கு
எதிராகத் துடிக்கும்
அவள் இதயம்.
என்ன ஒரு திண்மை!
சாதிவெறியைப் பார்த்து
சொந்த தந்தையையும்
வெறுத்தாள்.
சமத்துவத்தை நேசிக்கும்
சுயமரியாதை
உணர்வைப் பார்த்து
பெரியாரை தந்தையாய்
நினைத்தாள்.
இவளல்லவோ பெண்!
நேசித்த காதலனை
கண் எதிரே
வெட்டி வெறியாடிய போதும்
நிலைகுலைந்த
தனக்காக மட்டும்
கதறவில்லை
அந்தக்காதல்.
வெறுக்கத்தக்க சாதிவெறியை
கட்டி அழும்
சமூகத்தின் குரூரத்தை
பேசுகிறது அவள் குரல்.
கவுசல்யா,
யாரையும்
பாவப்பட கூப்பிடவில்லை,
சாதிவெறி ஆணவத்திற்கு எதிராக
கோவப்பட கூப்பிடுகிறாள்…
விலங்குகள் கூட
விளங்கிக் கொள்ளும்
சக அன்பை,
மனிதர்களுக்கு மறுக்கும்
கயமைத்தனம் தான் சாதி.
கவுசல்யா போல்
சுயசாதிக்கு எதிரான
கலகம்தான் நீதி!
வெட்டியவர்கள்
சமூகத்தின் கண்களுக்கு
தழும்பாக,
வெட்டுப்பட்டவளோ
சமூக நீதியின் பிழம்பாக,
சங்கர்
வெட்டவெட்ட துளிர்க்கிறான்
கவுசல்யாவிடம்,
பெரியார் மொழியில்
நகைக்கிறான்
சாதிய மனம்
இருந்தாலும்
அழுகிடும் பிணம்
சங்கர் இறந்தாலும்
கவுசல்யாவின்
கருத்தில் பரவிடும்
சமூக நறுமணம்.
ஒரு ஆணை
விரும்பியதைவிட
சங்கர் எனும்
தாழ்த்தப்பட்டவரை
காதலித்தது தான்
சாதிய மனநிலைக்கு
கடுங்குற்றம்.
சங்கரின் மீதான காதல்
சமூகத்தின் மீதான காதலாக
விரிவதைப்பார்த்து
ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள்
வசவுகளில் வாழ்கிறது.
உண்மையில்
‘வாழா வெட்டி’யானது
கவுசல்யா அல்ல,
வக்கிரம் பிடித்த சாதிவெறி.
கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே
தாங்கள் கெட்டழிவது திண்னம்!
பல கவுசல்யாக்களை உருவாக்கும்
பெரியார் மண்ணில்
பலிக்காது உங்கள் எண்ணம்!
கவுசல்யாவின்
தனிப்பட்ட காதல் பிரச்சனை என்று
யாரும் ஒதுங்கிட முடியுமா?
சாதியின் காதலர்கள்
வெறியோடு
எகிறி வரும் போது,
காதலுக்காக
உருகுபவர்கள்,
காதலுக்காக
படம் எடுப்பவர்கள்,
காதலுக்காக
தத்துவம் பேசுபவர்கள்,
சுடப்பட்ட காவலர்க்கு
வீரவணக்கம் செலுத்தும்
விசித்திர காதல் தளபதிகள்
யாருமே
வெட்டப்பட்ட
கவுசல்யா பக்கம்
காணவில்லையே ஏன்?
சாதிவெறி
அரிவாளோடு சுத்தும்
கூலிப்படை என்று
நாம் நினைத்தால்
அது அறியாமை.
சாதிவெறியர்கள்…
சினிமாவாக
இலக்கியாமாக, எழுத்தாக
பேஸ்புக்காக, டிவிட்டராக
நம்மை சுற்றி திரிகிறார்கள்.
சமூகத்தின் காதலர்களே
நாம்
கவுசல்யாக்களாக
உருவெடுப்போம்
சாதிவெறிக்கு எதிராக
பெரியாரின் தடியை
முன்னேடுப்போம்!
-துரை. சண்முகம்