150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை-20. தொடர்புக்கு – 9865348163
பத்திரிக்கை செய்தி
20.12.2017
மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் 71 வயது முதியவர் தோழர் கோபட் காந்தியை பொய்வழக்கில் சிறைப்படுத்திக் கொல்லாதே! உடனே விடுதலை செய்!
***
கடந்த டிசம்பர் 12,2017 அன்று ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் கோபட்காந்தி மீண்டும் டிசம்பர் 16,2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநிலம் ஆகம்பெட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த கோபட்காந்தியை, ஆந்திர மாநில உளவுப் பிரிவு உதவியுடன், சத்திஸ்கர் மாநில காவல்துறை கைது செய்து, சத்திஸ்கர் மாநிலம் பொகாரோவிற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

மாவோயிஸ்ட் கட்சியைக் கட்டும் பணியில் ஈடுபட்டார் என்பதற்காக கடந்த 2009 -ல் கைது செய்யப்பட்ட திரு. கோபட் காந்தி, தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளில் சேர்க்கப்பட்டு பல்வேறு சிறைகளில் வதைக்கப்பட்டு வருகிறார். புனையப்பட்ட வழக்குகள் பெரும்பாலானவற்றில் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
குறிப்பாக பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கில், கடந்த ஜூன், 2016 அன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கோபட் காந்தியை விடுதலை செய்தது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் தனது கைப்பட ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த 2010 -லிருந்து நிலுவையில் உள்ள ஒரு முதல் தகவல் அறிக்கையின் மீது இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தன்னை விசாரணைக் கைதியாக நிரந்தரமாகவே சிறையில் வைத்து, சட்டப்படியே கொலை செய்கின்ற நோக்கத்துடன்தான் தற்போது கைது செய்திருக்கிறது என்று அக்கடிதத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் கோபாட் காந்தி.
“பல்வேறு வழக்குகளில் நான் விடுதலை ஆகி விட்டேன். எனக்கு 71 வயதாகிறது. உடல்நிலை மோசமாக உள்ளது. மருத்துவர்கள் ஒரு மாத கட்டாய ஓய்வில் இருக்கச் சொல்லியுள்ளனர். சிறையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பு” என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். திரு. கோபட் காந்தி அவர்கள் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் படித்தவர்.
வசதியான குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது மனைவியும் பேராசிரியருமான அனுராதா காந்தி அவர்கள் பணியைத் துறந்து பழங்குடி மக்களின் மத்தியில் பணியாற்றி, நோயுற்று சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட மிகச் சிறந்த அறிவுஜீவியும், முதிய வயதில் மனைவியை இழந்து வாடுபவருமான தோழர் கோபட் காந்தியை மரணம் வரை துன்புறுத்திக் கொல்வது என்ற நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் சிறை வைத்து வருகிறது அரசு.
மாவோயிஸ்டு என்று ஒருவரை குற்றம்சாட்டி விட்டால் அவரை காவல்துறை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே அரசின் அணுகுமுறையாக உள்ளது. இதனை நீதிமன்றங்களும் அங்கீகரிக்கின்றன. மாறாக, மாலேகான் உள்ளிட்டு பல்வேறு இடங்களின் குண்டு வைத்து பலரைக் கொன்ற கர்னல் புரோகித், அசீமானந்தா உள்ளிட்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக அரசு ஆதரவுடன் பிணையில் வருகின்றனர். கவுரி லங்கேஷ் போன்றோர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டாலும், இந்துத்துவ அமைப்பினர் யாரும் கைது செய்யப்படுவதில்லை.
கோபட் காந்தி மட்டுமின்றி, 90% மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை சிறை வைத்திருப்பது உள்ளிட்ட எல்லா அடக்குமுறைகளும் மோடி அரசாலும் உளவுத்துறையாலும் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன.
சத்திஸ்கர் மற்றும் ஆந்திர மாநில காவல்துறை நிகழ்த்திய திரு. கோபட் காந்தியின் சட்டவிரோதக் கைதை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் மீதான பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும், அவரையும் தோழர் சாய்பாபாவையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
சே.வாஞ்சி நாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்