Saturday, April 19, 2025
முகப்புவாழ்க்கைபெண்பாரி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயி கமலாவின் போராட்டம் !

பாரி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயி கமலாவின் போராட்டம் !

-

மிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்கள் உரிமைக்காக போராடி வருவது அனைவரும் அறிந்ததே. கதிராமங்லம், நெடுவாசல் போன்ற விவசாய டெல்டா பகுதிகளில் அனுதினமும் விவசாயிகள் கொதித்தெழுந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

கமலாவும் அவரது மகன் இளவேந்தனும்

காவேரி பாயும் டெல்டா பகுதியான கரூர் மண்மங்கலம் தாலுக்கா பகுதிகளில் நெல், கரும்பு, வாழை போன்ற விவசாயம் செய்வது வழக்கம். இந்நிலையில் மண்மங்கலம் கிழக்கூரைச் சேர்ந்த பெண் விவசாயி கமலாவும் அவரின் மகன் இளவேந்தன் தன் சொந்த நிலத்தில் விளைவித்த கரும்பை வெட்டுவதற்கு புகளுர் பாரி சர்க்கரை ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய சம்பவம் சமீபத்தில் அனைத்து தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளியானது அனைவரும் அறிந்ததே!

இந்நிலையில் மக்கள் அதிகாரம் சார்பாக பாதிக்கப்பட்ட ஏழை பெண் விவசாயி கமலாவின் குடும்பத்தினரை சந்தித்து பிரச்சினை குறித்து கேட்டறிந்தோம். கிழக்கூரைச் சேர்ந்த பெண் விவசாயி கமலாவின் கணவர் தங்கவேல் இறந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தனது மகன் இளவேந்தனை கல்லூரியில் படிக்க வைத்து, கண்பார்வையற்ற தனது மாமியாரை பராமரித்து சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்.

தனக்கு சொந்தமான 3 ஏக்கரில் 1 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். 3-வது போகம் கரும்பு பயிரிட்டு வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு விற்பனை செய்ய கடந்த 21.12.2017 அன்று வெட்டும் பொழுது புகளுர் பாரி சர்க்கலை ஆலை ஊழியர்கள் மற்றும் கரும்பு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கமலாவின் கரும்பு காட்டிற்கு வந்து கரும்பை வெட்டக் கூடாது என்றும், கமலாவின் நிலத்தில் பயிர்செய்யப்பட்ட கரும்பு மேற்படி சர்க்கரை ஆலைக்கு சொந்தமானது என்றும், அதற்குண்டான ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து செய்துள்ளீர்கள் என்றும் கூறி கரும்பை வெட்ட விடாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

அப்பொழுது பெண் விவசாயி கமலா மூன்றாவது போகத்திற்கு மேற்படி சர்க்கரை ஆலையுடன் தான் எந்தவித ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்றும், கையெழுத்து என்னுடையது அல்ல என்றும், போலியான ஆவணம் தயார் செய்து, போலியாக கையெழுத்து போட்டு, நான் ஏழை விவசாயி என்பதால், என் கரும்பை அபகரிக்க நினைக்கிறீர்கள் என்று கூறி போராடியுள்ளார். மேலும் வலுக்கட்டாயமாக அவரின் சொந்த நிலத்திலிருந்தே கமலாவை வெளியேற்றியுள்ளனர்.

கமலாவின் நிலத்தில் பயிரிடப்பட்டு வெட்டாமல் கிடக்கும் கரும்பு

மேலும் கமலா கூறும்பொழுது, நாங்கள் 1 மற்றும் 2-வது போக கரும்பு வெட்டுவதற்கு மட்டுமே பாரி சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். 3-வது போக கரும்பு வெட்ட மேற்படி ஆலையுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறியது மட்டுமல்லாமல், பாரி சர்க்கரை ஆலையின் அடாவடித்தனத்தையும், முறைகேடுகளையும் தோலுரித்து காட்டுகிறார் கமலா. கரும்பு ஒரு டன்னுக்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ.2750.00 ஆனால் பாரி சர்க்கரை ஆலையோ டன் ஒன்றுக்கு ரூ.2333.00 மட்டுமே தருகிறார்கள். அதோடு 12 மாதத்தில் வெட்ட வேண்டிய கரும்பை 14 மாதங்கள் கழித்த பின்னரும் கரும்பை வெட்டாமல் பாரி நிறுவனம் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றும், கரும்பு நன்கு விளைந்த நிலையில் வெட்டாமல் அது காய்ந்து சருகாகும்போதுதான் மேற்படி நிறுவனம் வெட்டுகிறது. இதனால் கரும்பில் உள்ள சர்க்கரை அளவு குறையாது… கரும்பின் எடை குறைந்து எங்கள் வயிறுதான் எரிகிறது… எனக்கூறி வேதனையடைகிறார் கமலா.

மேற்படி பாரி சர்க்கரை ஆலை வெட்டிய கரும்பை காலை முதல் மாலை வரை வெயிலில் அடுக்கி வைத்து மாலைக்கு மேல் லோடு செய்து எடுத்துச் செல்வதால், கரும்பின் எடை குறைந்து, கரும்பு மெலிந்து விடுகிறது. மேலும் கரும்பை எடை போடும்பொழுது அதனை பார்க்க எங்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் சொல்லும் எடைதான். மேலும் முதல் போகம் கரும்பை வெட்டி 10கி.மீ தொலைவில் உள்ள சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் சென்றதாகவும், இரண்டாவது போகம் வெட்டியபோது 60கி.மீ தொலைவில் உள்ள பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் சென்று காலை முதல் கரும்பை டிராக்டரிலேயே வைத்து, அதன்பின் தான் சர்க்கரை ஆலைக்குள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தற்போது 200கி.மீ தொலைவில் உள்ள ஆலைக்கு கரும்பை எடுத்துச் சென்று எடைபோடுவதால் கரும்பின் எடை குறைந்து எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவுப்படி, 30 கி.மீ சுற்றளவில் மட்டுமே கரும்பை கொள்முதல் செய்துகொள்ள வேண்டும், விவசாயிகளை அலைக்கழிக்க கூடாது என பிறப்பித்த உத்திரவினை மீறி பாரி சர்க்கரை ஆலை செயல்படுகிறது.

முருகப்பா நிறுவனத்தின் பாரி சர்க்கரை ஆலை

2வது போகம் கரும்பை வெட்டிய பின்னர் அரசு நிர்ணயித்த ஒரு டன்-க்கு ரூ.2750 வீதம் கணக்கு பார்த்தால் முதல் இரண்டு போகத்திற்கு மேற்படி பாரி சர்க்கரை ஆலை தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.58000 தனக்கு வரவேண்டியுள்ளது என்றும், அதனை தராமல் இன்றுவரை எங்களை அலைக்கழித்து ஏமாற்றி வருகிறார்கள் எனக்கூறினார். மேலும் ஏழை விவசாயிகள் மேற்படி ஆலையுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யாத நிலையில், ஒப்பந்தம் செய்துள்ளதாக பொய்யான ஆவணங்களை தயாரித்து எங்கள் கரும்பை அபகரித்து கொள்கின்றனர் என்றும், பணக்கார விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அவர்களாகவே கரும்பை வெட்டினாலும் ஆலை நிறுவனம் கண்டுகொள்வதில்லை என்றும், மேற்படி பாரி நிறுவனம் ஏழை விவசாயிகளை துன்புறுத்தியும் அரசியல் செல்வாக்குள்ள பணக்கார விவசாயிகளை கண்டுகொள்ளாமலும், பராபட்சமாக நடந்து கொள்கிறது என ஆதங்கப்படுகிறார் கமலாவின் மகன் இளவேந்தன்.

மேலும் கரும்பு காய்ந்து போனால் ஆலையின் சார்பில் எங்களுக்கு காப்பீடு தருவதாக கூறி எங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கரும்பு காய்ந்தவுடன் இழப்பீடு கேட்டால் 100 ஏக்கர் 200 ஏக்கர் என மொத்தமாக காய்ந்தால்தான் காப்பீடு தருவோம், ஒரு ஏக்கர், 2 ஏக்கருக்கு நீங்கள் தான் பொறுப்பு என தட்டிக்கழிக்கிறார்கள். இதனை அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. கரும்பு வெட்டிய பிறகு எங்களுக்கு மொத்த தொகையும் கிடைக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது. இதனால் நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், எங்கள் குழந்தைகளுக்கு உரிய காலத்திற்குள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மேலும் கடன் பெறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது என குமுறுகிறார் கமலா. ஆகையால் இனிமேலும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளாத ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் கட்டுப்படமாட்டோம் என்கிறார் கமலா.

நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை

21.12.2017 அன்று சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு இன்ஸ்பெக்டர் வந்து, உங்களுக்கு குறையிருந்தால் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று கூறியதால், 23.12.2017 அன்று கமலாவும், அவரின் மகன் இளவேந்தனும் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் இல்லாத காரணத்தால் அவரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்துள்ளனர். மேற்படி மனுவில் 3-வது போகத்திற்கு தாங்கள் பாரி சர்க்கரை ஆலையுடன் எந்தவித ஒப்பந்தமும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும், அந்த கையெழுத்தும் தங்களுடையது அல்ல என்றும், எங்கள் நிலத்தில் விளைவித்த கரும்பிற்கு எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, எங்கள் விருப்பப்படி வெல்லம் தயார் செய்ய கரும்பை வெட்டுவதற்கு இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர். இந்த அரசு நடவடிக்கை எடுக்காது என்பதும் எங்களுக்கு தெரியும், அதிகாரிகள் கூறியதால் மனு கொடுத்தோம் என்று கூறினார் இளவேந்தன்.

விவசாயி கமலாவின் வீடு

எங்கள் கரும்பு காயும்போதும், நாங்கள் கஷ்டப்படும்போதும், பாரி நிறுவனம் எங்களை துன்புறுத்தியபோதும் இந்த அரசாங்கம் தலையிடவில்லை. அதனால்தான் நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை என்றும், என் மகனும் அப்படித்தான் என்கிறார் கமலா. இறுதியாக 27.12.2017-ம் தேதி புதன் கிழமை எங்கள் விளைநிலத்தில் உள்ள கரும்பை வெட்டப்போவதாகவும், “எவன் தடுத்தாலும் எங்கள் கரும்பு, எங்கள் மண்ணை விட்டுச் செல்லமாட்டோம்” இரவு பகல் பார்க்காமல் லாரியில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி நல்ல விளைச்சல் செய்வதால் தானே பாரி சர்க்கரை ஆலை வெட்ட வருகிறது. காயந்திருந்தால் எவன் வெட்டவருவான் ? பாரி நிறுவனத்திற்கு ஒரு துண்டு கரும்பக்கூட வெட்ட அனுமதிக்க மாட்டோம். மீறி வெட்ட முயற்சித்தால் என்னையும் என் மகனையும் வெட்டிவிட்டு கரும்பை வெட்டிட்டு போகட்டும் என மன உறுதியுடன் இருக்கிறார் எதிர்வரும் பிரச்சினையை களத்தில் சந்திக்க தயாராக உள்ளார் கமலா.

ஆம்! உண்மைதான், இது ஏதோ ஒரு கரும்பு விவசாயி கமலா குமுறல்கள் மட்டுமல்ல, உழைத்து வாழும் விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உண்டான கோபமும், மன உறுதியும் ஒட்டுமொத்த தமிழகத்தில் இந்தியாவில் தன் நிலத்தின் மீது விளையும் பொருளுக்கு தானே சொந்தக்காரன் என்று ஆளுமையோடு வரும் போராட்டக் குரல் !…

போராட்டக் குரலுக்கு தோள் கொடுப்போம் !
விவசாயிகளை காப்போம் !!
விளை நிலத்தின் மீதான நமது உரிமையை நிலைநாட்டுவோம்!!!

தகவல்
மக்கள் அதிகாரம், கரூர்
செல் – 97913 01097

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க