Saturday, April 19, 2025
முகப்புசெய்திபொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்

-

டந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மொத்த செயற்படாச் சொத்துக்களை (GNPA) மீட்கும் விகிதமானது மிகக்குறைந்த அளவான 20.8 விழுக்காட்டை 2016 – 17 -ம் ஆண்டில் எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் சமீபத்திய இந்திய வங்கியல் நடைமுறை மற்றும் முன்னேற்ற அறிக்கை (2016 – 17) கூறுகிறது.

மேலும் கடன் மீட்புத் தீர்ப்பாயங்கள் (Debt Recovery Tribunals) உள்ளிட்ட பல்வேறு சட்ட வழிமுறைகளின் மூலம் பதிவழிப்புக் கடன்களை (Write-Off loans) மீட்கும் விகிதமும் ஆண்டாண்டுகளாக குறைந்து வருவதாக மேலும் கூறுகிறது. செயற்படாச் சொத்துக்களை மீட்கும் விகிதம் 2009 -ம் ஆண்டில் 61.8 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 2017, செப்டம்பர் வரையில் 7.34 இலட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் வராக்கடன் அளவானது 1.03 இலட்சம் கோடி மட்டும் இருந்தது. மொத்த செயற்படாச் சொத்துக்களில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே 77 விழுக்காடு வசூலிக்க வேண்டியிருக்கிறது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளில் இந்திய ஸ்டேட் வங்கி (SBI) மீட்க வேண்டிய தொகை மட்டுமே 1.86 இலட்சம் கோடியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் தேசிய வங்கி (57,630 கோடி), இந்திய வங்கி (49,307 கோடி), பரோடா வங்கி (46,307 கோடி), கனரா வங்கி (36,164 கோடி) மற்றும் இந்திய யூனியன் வங்கியும் (38,286 கோடி) இருக்கின்றன.

கடன் மீட்பு விகிதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த போதும் புதிய திவால் சட்டத்தை (Insolvency and Bankruptcy Code) கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்து தேசிய நிறுவன சட்டத்தீர்ப்பாயத்தில் (NCLT) தீர்க்க முடியா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சான்றாக, கடனை மீட்டுக்கொடுக்குமாறு ரிலையன்சு நிறுவனத்தின் மீது சீன வளர்ச்சி வங்கி (CDB) மற்றும் எரிக்சன் (Ericsson) நிறுவனங்கள் தொடுத்த வழக்குகளை 2018, ஜனவரி 5 -ம் தேதி தீர்ப்பாயம் விசாரிக்க இருக்கிறது.

இந்திய வங்கிகளில் சராசரி கடன் மீட்பு விகிதம் 2015 – 17 ஆண்டுகளில் 26.4 விழுக்காடாக இருந்தது. இதில் தனியார் வங்கிகளின் கடன் மீட்பு விகிதமான 41 விழுக்காட்டை ஒப்பிடும் போது பொதுத்துறை வங்கிகளின் கடன் மீட்பு விகிதம் 25.1 விழுக்காடாக இருந்தது.

இந்த இரண்டாண்டு காலப்பகுதியில் கடன் மீட்புத் தீர்ப்பாயங்கள் (DRT), பத்திரமாக்குதல் (Securitization) மற்றும் நிதியியல் சொத்துக்களைப் புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நலனை நடைமுறைப்படுத்தல் (SARFAESI) சட்டம், மக்கள் நீதிமன்றங்கள் (Lok Adalats) உள்ளிட்ட தற்போதுள்ள மூன்று சட்ட வடிவிலான மீட்பு வழிமுறைகளின் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 10 விழுக்காட்டுக் கடனை மீட்டெடுத்தன.

ஆயினும் இம்மூன்று வழிமுறைகள் மூலம் மீட்கப்பட்ட கடன் விகிதம் 2015 – 16 -ம் ஆண்டின் 10.3 விழுக்காட்டிலிருந்து 2016 – 17 -ம் ஆண்டில் 9.8 விழுக்காடாக குறைந்துவிட்டது. அதாவது 2.86 இலட்சம் கோடி வராக்கடனில் 28,000 கோடிகள் மட்டுமே 2016 – 17 -ம் ஆண்டில் மீட்கப்பட்டுள்ளது. அதுவே 2015 – 16 ஆண்டில் 2.21 இலட்சம் கோடியில் 22,800 கோடி மீட்கப்பட்டது.

வராக்கடனை மீட்பதில் ஒருபுறம் விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகள் 2016 – 17 நிதியாண்டில் 81,683 கோடி கடனை பதிவழிப்பு செய்தன. இது 2015 – 16 -ம் நிதியாண்டை விட (57,586) 41 விழுக்காடு அதிகம். பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (SCBs) 2016, மார்ச் வரைக்குமான ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 2,25,180 கோடியை பதிவழிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

வராக்கடன் மற்றும் பதிவழிப்பு கடன்களை மீட்டெடுத்தல், வங்கி நட்டமடைதல் உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட் நிறுவனங்களை பிடித்தாலே போதுமானது. ஆனால் செல்லரித்த சட்டங்களைக் கொண்டு லெட்டர்பேட் தீர்ப்பாயங்கள் சிலவற்றை மேலும் உருவாக்கி சில பல கோடிகளை மீட்பதையே சாதனையாக காட்டுகிறது மற்றும் காட்ட நினைக்கிறது இந்த அரசு.

பணமதிப்பழிப்பின் மூலம் கருப்புப்பணத்தை ஒழிப்பதாய் மத்திய அரசு ஆடிய கபட நாடகத்துடன் இதனை ஒப்பிடலாம். என்ன பிரச்சினை என்றும் தெரிகிறது. பிரச்சினையின் ஆணிவேரும் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் ஏழை எளிய மக்களுக்கான மானியங்கள், விவசாய கடன், மாணவர்களுக்கான கல்வி கடன் உள்ளிட்ட சல்லிவேர்களையே ஆணிவேராய்க் காட்டுகின்றன மக்கள் விரோத ஆளும் வர்க்கங்கள்.

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க