காஜியாபாத்தில் இருவீட்டாரின் சம்மதத்துடனும் ஒத்துழைப்புடனும் 22.12.2017 வெள்ளிக் கிழமை அன்று நடந்த மதக்கலப்பு (Inter-Faith) திருமண விழாவில் இந்து மத வெறியர்கள் புகுந்து கலவரம் செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தின் காஜியாபாத் டெல்லிக்கு மிக அருகிலும் தேசிய தலைநகர் பகுதியின் ஒரு அங்கமாகவும் இருக்கிறது. அங்கு வசித்துவரும் புஷ்பேந்திர குமார் என்ற சிறுதொழிலதிபரின் மகள் நுபுர் சிங்கால். 26 வயதான இவர் உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஹத் பஷிர் கான் என்பவரது மகன் மன்சூர் ஹர்ஹத் கான். இவர் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்.

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து அதை தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த போது முதலில் இரு குடும்பத்தினரும் தயங்கியுள்ளனர்.
“இருவரும் வயதுவந்தவர்கள், எது தவறு எது சரி என்று தெரிவு செய்யும் முதிர்ச்சியுள்ளவர்கள், உரிமையுள்ளவர்கள். ஆனாலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எனது கவலை குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியதாக இருந்தது. மணமகனின் குடும்பத்தினரும் கூட அதே கவலைகளை கொண்டிருந்தனர்” என்கிறார் பெண்ணின் தந்தை புஷ்பேந்திர குமார்.
நாட்டில் நிகழ்ந்து வரும் சூழலைக் கணக்கில் கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துள்ளனர். பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக பொது இடத்தில் திருமண வரவேற்பை நடத்தாமல் தன் வீட்டில் நடத்துவது, திருமணத்தில் இந்து சடங்குகளையோ அல்லது இஸ்லாமிய சடங்குகளையோ பின்பற்றாமலிருப்பது, 50 பேருக்கும் குறைவான மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பது, வரவேற்பின் போது இந்து அல்லது இஸ்லாமிய மத அடையாளங்களை அணியாமலிருப்பது, திருமணம் முடிந்தவுடன் உடனடியாக மணமக்களை தேனிலவுக்கு அனுப்பிவைப்பது போன்ற தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மணமக்களின் குடுபத்தினர் எடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் காஜியாபாத் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். வெள்ளிக் கிழமை (22.12.2017) அன்று திருமண வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே லவ் ஜிகாத் என்ற பெயரில் புஷ்பேந்திர குமாரை மூளைச் சலவை செய்ய முயன்றிருக்கின்றன இந்து வானரங்கள். “இது எனது தனிப்பட்ட விவகாரம், உங்களது குறுக்கீடு எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு மனிதர்கள் தான் முக்கியம் மதம் இரண்டாம் பட்சமானது தான். ஒரு மனிதரை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது தான் முக்கியம், அந்த நபர் இந்துவா அல்லது முஸ்லீமா என்று நான் பார்க்கவில்லை” என்று அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் புஷ்பேந்திர குமார்.
தங்கள் நோக்கத்திற்கு பலியாகாததால் பின்னர், இந்து மதத்தை கேவலப்படுத்துவதாக சொல்லி திருமணத்தை நிறுத்துமாறு புஷ்பேந்திர குமாரை தொலைபேசியில் மிரட்டி வந்துள்ளனர். இது குறித்து புஷ்பேந்திர குமார் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.
மன்சூர் தனது மகளை இந்து முறைப்படி மணமுடிக்கவும் கூட முன்வந்திருந்தார் என்கிறார் புஷ்பேந்திர குமார். “இங்கு எந்த மதமாற்றமும் நடைபெறவில்லை, எந்த மத அடையாளங்களும் பின்பற்றப்படவில்லை. எங்கள் குடும்பமோ அல்லது மணமகன் குடும்பமோ மணமக்களின் மீது எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை, இங்கு லவ் ஜிகாத் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்.
திருமண வரவேற்பு அன்று உள்ளூர் பா.ஜ.க -வினர் தலைமையில் இந்துமதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு நடைபெற்ற புஷ்பேந்திரகும்மாரின் வீட்டை சட்ட விரோதமாக முற்றுகையிட்டுள்ளனர்.
திருமணத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை, சிறப்பு திருமணச் சட்டத்தின் படிதான் திருமணம் நடந்தது, லவ் ஜிகாத் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று புஷ்பேந்திர குமார் கூட்டத்தினரிடம் விளக்கமளிக்க முற்பட்டுள்ளார். ஆனால், அதை காதுகொடுத்து கேட்கக்கூட தயாரக இல்லை இந்து மதவெறி கும்பல். இப்படி விளக்கமளிக்கத் தேவையில்லை என்றாலும் இந்தியாவில் இந்துமதவெறியர்களின் பகிரங்க ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
“நான் ஒரு போர் பிரதேசத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். யார் வேண்டுமானாலும், யாருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்து எதையும் ஆணையிடலாம், தகராறு செய்யலாம் என்பது டெல்லி போன்ற தேசிய தலைநகர் பகுதியிலேயே நடக்கிறதென்றால் மற்ற நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை” என்கிறார் புஷ்பேந்திர குமார்.
பின்னர் போலீஸ் லேசான தடியடி நடத்தி கும்பலைக் கலைத்துள்ளது. புஷ்பேந்திர குமார் மற்றும் ஹர்ஹத் பஷிர் கான் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து மதவெறிக் கும்பலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காஜியாபாத் போலீசார்.
இருவர் தங்களது வாழ்க்கையை தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை, மதத்தை மறுக்கும் உரிமையை மறுப்பதோடு அதையும் கலவரமாக்க முயற்சித்துள்ளனர் இந்து மதவெறி பாசிஸ்டுகள்.
இந்துமதவெறியர்கள் இந்நாட்டின் சாபக்கேடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
மேலும் :
- Hindu-Muslim marriage disrupted in Ghaziabad: Bride’s father had informed authorities, yet mob turned up
- This Ghaziabad father defied BJP leaders to ensure his daughter’s marriage to a Muslim man
- BJP Workers, Police Clash As Hindu Girl Marries Muslim Man in UP