Wednesday, April 16, 2025
முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைகொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் - படக் கட்டுரை

கொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை

-

யிரக்கணக்கான அப்பாவி ஏமன் மக்களை மரணத்திலும் இலட்சக்கணக்கான மக்களை பஞ்சத்திலும் தள்ளிய சவூதிக் கூட்டணிப் படையினரின் தாக்குதல் 1000 நாட்களை கடந்து விட்டது. தென் மேற்கு ஏமனில் உள்ள ஒரு சந்தையில் சமீபத்தில் சவுதி நடத்திய வான்வெளித் தாக்குதலால் கிட்டத்தட்ட 20 ஏமன் மக்கள் கொல்லப்பட்டனர்.

தொடரும் இந்த கொடூரத்தின் விளைவால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏமனின் அடிப்படை கட்டமைப்பில் பணிப்புரியும் 12 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக சம்பளம் கிடையாது.

ஏமனின் உள்கட்டமைப்பும் பொதுமக்களின் குடியிருப்புகளும் நொறுங்கி விட்டன. 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பணம், தண்ணீர், உணவு, மருந்துக்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியுறுகின்றனர். நார்வே அகதிகள் அமைப்பு எடுத்த இந்த பேரழிவின் காட்சிகள் சில இங்கே. இசுலாமிய சர்வதேசியம் பேசி ஏழை முஸ்லீம்களை மதவாதத்தால் ஏமாற்றும் கொலை கார சவுதி அரேபியவின் ‘சாதனைகள்’ இவை!

சனா(Sanaa), வான்வெளித் தாக்குதலால் நிலைகுலைந்த தனது வீட்டை ஒருவர் காட்டுகிறார். ஏமன் தலைநகர் முழுவதும் வீடுகள், திருமண மாளிகைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள் ஆகியவை வான் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டு வருகின்றன.

சனாவின் நிலைகுலைந்த குடியிருப்புகளை ஒருவர் கடந்து செல்கிறார்.

அல் தாலேவைச்(al-Dhalea) சேர்ந்த 50 வயதான அலி மோத்தனா அலியின் வீடு தாக்கப்பட்ட போது படுகாயமடைந்தார். “வீட்டைத் தாக்கிய அந்த வான் தாக்குதலில் வீட்டிற்கு வெளியில் நான் சிக்கிக்கொண்டேன். வெடித்துச் சிதறிய குண்டு என்னைத் தாக்கியது. நான் முகக்காயங்களுக்கு ஆட்பட்டேன். சிராய்ப்புகளை என்னுடைய இடுப்பில் இருந்து அகற்ற வேண்டியதாயிற்று. என்னுடைய காலில் ஒருப்பகுதியை உலோக துண்டு ஒன்று வெட்டியது. அண்டை வீட்டுக்காரர்கள் என்னை சிகிச்சைக்காக அருகிலிருக்கும் கிராமத்திற்கு அழைத்து சென்றதால் உயிர் தப்பினேன். காயங்களால் நான் ஊனமாகிவிட்டேன். இனி என் குடும்பத்திற்காக என்னால் உழைக்க முடியாது. குடும்பத்தில் பணம் சம்பாதிப்பவன் நான் மட்டுமே. என்னுடைய மூத்த மகனுக்கு 10 வயது ஆகிறது.” என்று கூறுகிறார்.

சனாவுக்கு வெளியே நடக்கும் தீவிரமான போர் நாடு முழுவதும் 30 இலட்சத்திற்கும் அதிகமான ஏமன் மக்களை சொந்த குடியிருப்புகளில் இருந்து காலி செய்திருக்கிறது. சாடாவைச் (Saada) சேர்ந்த மொலோக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சுற்றுப்புறம் தாக்கப்பட்டபோது தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட 460 குடும்பங்களுடன் வெளியேற நேர்ந்தது. அதன் பிறகு ஹவுத்தில் (Houth) உள்ள ஒரு தற்காலிகக் குடியேற்றத்தில் வசித்து வருகிறார்.

டையிஸ் (Taiz), ஓமரின் முன்னால் வீட்டின் ஒரே ஒரு புகைப்படமும், கட்டிடத்தின் இடிந்த குவியல் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. “என் குழந்தைகளின் தலைக்கு மேல் ஒரு கூரையை உறுதி செய்ய, இந்த வீட்டை ஒவ்வொரு கல்லாகக் கட்டி முடிக்க, 10 ஆண்டுகள் எனக்குத் தேவைப்பட்டது”. ஆயுதக் குழுக்கள் 2015-ம் ஆண்டின் பிற்பகுதியில் அவரை வெளியேறுமாறு கட்டளையிட்டன; அதன் பிறகு அவரது கிராமம் ஒரு போர்க்களமாகியது. வான் தாக்குதல்களால் அவரது வீடு தரைமட்டம் ஆவதற்கு சில நாட்கள் முன்பு தான் அவரது குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஜபல் அல்-நுக்மின்(Jabal al-Nugm) அருகே நடந்த ஒரு வான் தாக்குதலுக்கு பிறகு மஹ்மூத் ஸீத் மற்றும் அவரது மனைவி சபா இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறிய அந்த நாள் பற்றி கூறினார்கள். முன்பு மஹ்முத் ஒரு தையல்காரராக பணிபுரிந்தார். ஆனால் போரும் முற்றுகையும் தொடங்கியதிலிருந்து அவருக்கு வேலையெதுவும் இல்லை. சிறுநீரக பிரச்சினையால் சபா அவதிப்படுகிறார். ஆறு குழந்தைகள் அவர்களுக்கு. ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் கீழ் நார்வே அகதிகள் அமைப்பு அவர்களுக்கு உணவு வழங்குகிறது. “நாங்கள் உயிர் பிழைக்க வேண்டும். முன்பு கிடைத்தது போல உணவு இல்லை, செலவழிக்க பணமும் இல்லை. எங்களுக்கு ஓரிரண்டு தட்டு உணவே கிடைக்கும் மேலும் அதை வைத்து தான் சமாளிக்க வேண்டும். அதோடு சேர்ந்து எங்களுக்கு சமையல் எரிவாயு கூட இல்லை” என்றார் மஹ்மூத்.

அம்ரானைச்(Amran) சேர்ந்த கைம்பெண்ணான வதேதாவிற்கு(Wedad) நான்கு குழந்தைகள். பசி மற்றும் வறுமையின் கொடுமை காரணமாக சாகவே அவர் விரும்புகிறார். “இந்த பிரச்சினையை சரி செய் அல்லது அமைதியாக சாக விடு – காலையில் மக்கள் எழுந்து பார்க்கும் போது நாங்கள் மடிந்து போயிருக்க வேண்டும் என்று நான் கடவுளை மன்றாடுகிறேன். நாங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையை விட அது ஒன்றும் மோசமில்லை. நாங்கள் பசியை பார்த்துவிட்டோம், கடுங்குளிரையும் பார்த்துவிட்டோம், அனைத்தையும் பார்த்துவிட்டோம்” என்று கூறினார்.

டையிசை சேர்ந்த 12 வயதான அம்மானி தனது தந்தையை இழந்துவிட்டார். அன்றிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். “மோதல்கள் கடுமையானதாக இருந்தன. கிராமத்தில் இருந்து தப்பிய கடைசி குடும்பம் நாங்கள் தான். ஒரு பாதுகாப்பான இடத்திற்கு தப்பி வந்த பிறகு எங்கள் பின்னால் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த எங்கள் தந்தை ஒரு ஷெல் குண்டால் பலியானார். அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டார் ஆனால் எங்களுக்கு தெரியவில்லை. அவரது தொலைபேசியை தொடர்ந்து அழைத்தோம் ஆனால் பதில் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இறந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். உங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவது மிகவும் மோசமானது. இங்கே தண்ணீர் இல்லை, விறகும் இல்லை, எங்களுக்கு என்று எதுவும் இல்லை. வீட்டிற்கு திரும்பினால் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது. நான் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன் ஆனால் இப்போது முடியாது. நான் இந்த போரைக் கண்டு அஞ்சுகிறேன். வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் வெடிக்க கேட்பது பயங்கரமானது. நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம். எங்கள் அறையில் மரண பயத்தில் ஒளிந்திருந்தோம்” என்று அவர் கூறினார்.

வடக்கு ஏமன், ஹௌத்திக்கு வெளியே ஒரு தற்காலிக குடியேற்றத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்த 4 வயதான அஹ்லம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். 2015-ம் ஆண்டில் அவளது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தாக்குதல் தொடங்கப்பட்ட பிறகு சாடாவில் இருந்து தப்பி வெளியேறிவிட்டனர்.

ஹௌத்திக்கு வெளியே இந்த குடியேற்றத்தில் 9 வயதான ஒபைட் (இடது) மற்றும் அவனது நண்பன் மோட்ரெக் இருவரும் மறுசுழற்சிக்கான வெற்று நெகிழிப் புட்டிகளை சேகரிக்கிறார்கள். “நாங்கள் ஒரு பெரிய பை முழுதும் சேகரித்தால் எங்களுக்கு 150 ஏமன் ரியால் (38 ரூபாய்) கிடைக்கும் என்று ஒபைட் கூறினான். “நான் பள்ளி சென்றுக்கொண்டிருந்தேன். நான் படிக்க விரும்புகிறேன் ஆனால் இங்கே பள்ளிக்கூடம் இல்லை”. போருக்கு முன் ஏமன் மக்களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே வாசிக்கவும் எழுதவும் செய்தனர். போர் தொடர்வதால் ஏமனின் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் படிப்பை இழந்துவிட்டனர்.

ஏமனில் உள்ள நெருக்கடி காரணமாக குழந்தைகளில் பலர் பட்டினி மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் இறக்கின்றனர். 5 மாத குழந்தையான அமானியின் எடை 2 கிலோ மட்டுமே. அவள் சனாவில் உள்ள அல்-சபீன் மருத்துவமனையில் ஊட்டச்சத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளாள். “அமானியை மருத்துவமனையில் சேர்க்க எங்கள் அண்டை வீட்டார் பணம் கொடுத்தனர்” என்று அவளது தாயார் பாத்திமா கூறினார். “நாங்கள் இந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு என் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்காது என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

முஹம்மத் குடும்பத்தினர் பல்வேறு சோதனைச்சாவடிகளை கடந்து 15 மணிநேர பயணத்திற்குப் பின்னர் ஊட்டச்சத்து குறைபாடுடைய தங்களது குழந்தையுடன் அல்-சபீன் மருத்துவமனைக்குச் சென்றனர். “எங்களுக்கு வேறு வழியில்லை. இப்போது எங்கள் பகுதியில் எந்த வசதிகளும் இல்லை” என்று அவனது தந்தை வஹீப் கூறினார். இரண்டு வயதான முகமதுவின் எடை 5.9 கி.கி.

ஒரு வயது ஃபாத்திமாவின் எடை 4.2 கிலோ கிராம். அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டபோது அவளது தாயார் அவளை அல்-சபீன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருகிறாள். ஃபாத்திமா, நான்கு குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால் அவருடைய மூத்த உடன்பிறந்தவர்களைப் போல ஊக்கமாக இல்லை. சரியும் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் கொண்டு வருவதற்கான தடைகளால் இலட்சக்கணக்கான ஏமன் மக்களுக்கு உடனடியான உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

ஏமன் மக்கள், சனாவில் உணவு உறுதிச்சீட்டு பகிர்மான மையத்தில் வரிசையாக நிற்கிறார்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உணவு உறுதிச்சீட்டுகள் மற்றும் பிற உதவிகளை நார்வே அகதிகள் அமைப்பு செய்கிறது. 1,000 நாட்களாக நடக்கும் போர் மற்றும் உணவு, எரிபொருள், மருந்து முற்றுகையைத் தொடர்ந்து 84 இலட்சம் ஏமன் மக்கள் இப்பொழுது பட்டினி பாதிப்புக்கு அருகில் உள்ளனர்.

சனாவில் உள்ள அல்-சபீன் மருத்துவமனையில் டாக்டர் ஜிக்ரா அப்துல்லா சைஃப் பணிபுரிகிறார். “கொடுமை என்னவெனில், உணவிற்காக நாங்கள் போராடும் போது எங்களது வேலையை எப்போதும் போல செய்ய முடியாது”. போர்த் தொடர்ந்தால், எங்களுக்கு சம்பளம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், நாங்கள் அனைவரும் கிராமங்களுக்கு தப்பிச்செல்ல தான் வேண்டும். நாங்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். நகரங்களில் இருந்து வெளியேறி பழங்கால மக்கள் வாழ்ந்தது போல வாழ வேண்டும்” என்று கூறினார்.

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம் : சுந்தரம்

மேலும் :