Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇராஜஸ்தான் விவசாயிகள் பணத்தை திருடும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !

இராஜஸ்தான் விவசாயிகள் பணத்தை திருடும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !

-

ந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ- வங்கியின் ஆயுள் காப்பீட்டுப் பிரிவு, ஐ.சி.ஐ.சி.ஐ புருடன்சியல் லைஃப் என்ற பெயரில் செயல்படுகிறது. இவ்விரு நிறுவனங்களும் சேர்ந்து நிலை-வைப்பு நிதி (fixed Deposit) திட்டங்களில் சேமிக்கவரும் வாடிக்கையாளர்களின் பணத்தை ஆயுள் காப்பீட்டின் தவணையாக செலுத்தி ஏமாற்றியுள்ளன.

இராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் பகுதியை சேர்ந்த 75 வயது விவசாயி சோகன்தாஸ். தன்னுடைய சிறு நிலத்தை விற்று ரூ. 7,50,000 பணம் வைத்திருந்தார். தன்னுடைய 65 வயதான மனைவிக்கு தனக்குப் பின் இந்தப் பணம் உதவவேண்டும் என்று அந்தப் பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் உதயப்பூர் கிளையில் நிலை-வைப்பு நிதி திட்டத்தில் சேமித்துள்ளார்.

சுமார் 9 மாதங்கள் கழித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மும்பை அலுவலகத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உடனடியாக ரூ. 7,50,000 செலுத்த வேண்டும் எனவும், தவறினால் ஏற்கனவே செலுத்திய ரூ. 7,50,000 கிடைக்காது எனவும் கூறியுள்ளனர். சோகன்தாஸ் உடனடியாக ஒரு வழக்குறைஞரிடம் சென்று வங்கியின் நிலை- வைப்பு நிதி ஆவணங்களைக் காட்டியுள்ளார்.

தன்னிடம்முள்ள ஆவணம் நிலை-வைப்பு நிதி திட்டத்திற்கானதல்ல, ஆயுள் காப்பீட்டிற்கானது என்பதையும், அதற்கு வருடாந்திர தவணையாக ரூ. 7,50,000 செலுத்த வேண்டும் என்பதையும் அறிந்து அதிர்ந்து போனார்.

“முதியவர்களான நானும் என் மனைவியும் எந்த வேலைக்கும் போக முடியாது. எங்களுக்கு மாத மருத்துவச் செலவே ரூ. 5,000 லிருந்து ரூ. 7,000 வரை ஆகிறது. நாங்கள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை ஒவ்வொரு வருடமும் செலுத்த முடியும்” என்கிறார் சோகன்தாஸ்.

சோகன்தாஸ் மட்டுமல்ல விவசாயிகள், தொழிலாளிகள், விதவைகள் மற்றும் வயதானவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலி பாய் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூலித்தொழிலாளி. அவருடைய மாத வருமானம் ரூ.3,000 -க்கும் குறைவு. அவருடைய கணவர் இறந்ததையொட்டி காப்பீட்டுப் பணம் ரூ.1,00,000 கிடைத்துள்ளது. அதை நிலை-வைப்பு நிதியில் முதலீடு செய்ய விரும்பியுள்ளார். ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ அதிகாரிகள் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்துள்ளனர். இதை அறிந்த பாலி பாய் ஐ.சி.ஐ.சி.ஐ அதிகாரிகளிடம் சென்று விசாரித்துள்ளார். “என்னுடைய பணத்தை பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் தவணையாக ரூ.50,000 செலுத்த வேண்டும். தவணை செலுத்தாவிட்டால் முதலில் செலுத்திய பணம் கிடைக்காது என்கிறார்கள். என்னால் எப்படி செலுத்த முடியும்” என்று கேட்கிறார்.

கூலித்தொழிலாளி பாலி பாய்.

இந்த மோசடி விவசாயிகள் கடன் அட்டை மூலம் கடன் பெறுவோரிடமும் நடைபெற்றுள்ளது. முதலில் கடன் தொகையில் ஒரு சிறு தொகையை வைப்பு நிதியில் போடச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர் ஐ.சி.ஐ.சி.ஐ அதிகாரிகள். ஆனால் அந்தத் தொகையும் காப்பீட்டு திட்டத்தில் போட்டுள்ளனர்.

ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத வாடிக்கையாளர்களிடம் அவை நிலை-வைப்பு நிதிகான படிவம் என பொய் சொல்லி வங்கி அதிகாரிகள் பல படிவங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அப்படிவங்கள் அனைத்தும் ஆயுள் காப்பீட்டிற்கானவை. அதிலும் அவர்கள் பல ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த பெருந்தொகையை ஒரே ஒரு தவணையாக காப்பீடு செய்துள்ளனர். இதனால் மற்ற தவணைகளை கட்டவே முடியாத நிலையால் பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இந்த மோசடிகள் குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் ஊழியர் நிதின் பால்சந்தானி இராஜஸ்தான் சிறப்பு காவல் பிரிவிடம் புகார் அளித்துள்ளார். அதையொட்டி விசாரணையில் செய்ததில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்சியல் ஆகிய இரு பிரிவுகளிலும் உள்ள பல அதிகாரிகள் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த அதிகாரிகள் மீது மோசடி மற்றும் காப்ப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) விதிமுறைகளை மீறியதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ அதிகாரிகள் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல்களை தெரிவித்த பால்சந்தானி மீது பண மோசடி, நிறுவனத்தின் முக்கிய விவரங்களை திருடியது, போன்ற பல புகார்கள் அவர் மீது அளிக்கப் பட்டுள்ளன. இது குறித்து பால்சந்தானி இந்தப் புகார்கள் ஏற்கனவே நிறுவன விசாரணையில் ஆதாரமற்றவை என நிரூபிக்கப் பட்டவை என்கிறார். மேலும், ஏற்கனவே ஐசிஐசிஐ புருடென்சியல் அதிகாரிகள் அளித்த பண மோசடி புகாரில் ஒரு மாதம் சிறையில் இருந்து பின்னர் தான் குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவையே தமது இலட்சியம் என்று பீற்றிக்கொள்ளும் தனியார் வங்கிகளின் சேவை இதுதான்.

மேலும் படிக்க:

https://thewire.in/208356/icici-bank-fraud-fixed-deposit-insurance-policy-rajasthan/