Thursday, April 17, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாபுது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

-

புத்தாண்டு அன்று (2018, ஜனவரி, 1) புது டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு கடுமையான அளவீட்டை எட்டியதுடன் காற்று தர குறியீட்டெண் (AQI) 400 ஆக பதிவானது. மேலும் இதை ‘மிக மோசமானது’ என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வகைப்படுத்தியிருக்கிறது.

நவம்பர் 7 -ம் தேதி காற்றுத் தர குறியீட்டெண் 999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிகமாக கூட இருந்திருக்கலாம். ஆனால் கருவி காட்டக் கூடிய அதிகபட்ச அளவு என்பது அதுதான்.

புது டெல்லியின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில மத்திய அரசுகள் முழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஓபராய் நிறுவனம் புது டெல்லியில் உள்ள தன்னுடைய ஐந்து நட்சத்திர ஓட்டலை 500 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது. இதற்காக இரண்டாண்டுகள் தற்காலிகமாக இந்த ஓட்டலின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்திய வரலாற்றில் நட்சத்திர விடுதியொன்றில் காற்று சுத்திகரிப்பானை பொருத்துவது இதுவே முதன்முறை என்பது தான் இதன் வரலாற்றுச் சிறப்பு.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 -க்கும் மேற்பட்ட ஆடம்பர விடுதிகளையும் இரண்டு சுற்றுலா கப்பல்களையும் ஒபேரா குழுமம் நடத்தி வருகிறது. புது டெல்லியில் காற்று மாசுபாடு மக்கள் வாழ முடியாத அளவு எட்டி விட்டதால் நான்கு அடுக்கு காற்று சுத்திகரிப்பான் அமைப்பை பொருத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக தூய்மையான காற்றை வழங்க இருக்கிறது ஓபராய் விடுதி.

விடுதி வளாகத்திற்குள்ளே 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய கொள்ளளவு கொண்ட காற்று சுத்திகரிப்பு கருவிகளை நிர்வாகம் நிறுவியுள்ளது என்று ஓபராய் நிறுவன துணைத் தலைவர் சில்கி சீகால் தெரிவித்தார். இதற்காக மிக அதிக திறன் கொண்ட அதாவது 99.7 விழுக்காடு காற்று மாசுபாட்டை நீக்கக் கூடிய ப்ளூஏர் ப்ரோ எக்ஸ்எல் (BlueAir Pro XL) என்ற காற்று சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி 1,180 சதுர அடி அளவுள்ள அறைக்கு பொறுத்த முடியும்.

பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவே 500 கோடி ரூபாயை கொட்டியுள்ளது ஒபேரா நிர்வாகம்.  இனி புது தில்லி வரும் சுற்றுலாப் பயணிகள், மாசில்லா காற்று உலவும் ஓபராய் விடுதியை தேடிச் செல்வர். ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றி புது தில்லி அன்றாடம் இயங்குவதற்காக இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் அதே மாசடைந்த காற்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தலைநகரில் பார்ப்பனிய மாசுடன் ஆட்சி புரியும் மோடி மஸ்தான் ஆட்சியில் இனி காற்றும் மாசுதான்.புது தில்லி பணக்காரர்களுக்கு நல்ல காற்று கிடைப்பதற்கு ஓபராய் இருக்கிறது. மக்களுக்கு போராட்ட ஆயுதத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

மேலும் :

In polluted Delhi, a super-luxury hotel will offer the ‘cleanest’ air to the rich & famous


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க