Thursday, April 17, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்புசட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு

-

ரசு போக்குவரத்து தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. நிலுவைத் தொகையை தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்றால் அ.போ.கழகத்தை தனியார்மயமாக்கலாமே என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதை நீதிமன்றம் அரசை சாடியதாக ஊடகங்கள் நீதிபதிகளுக்கு ‘போராளி’ வேடம் கொடுக்கின்றன.

ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாம் என்பதை செவிலியர் போராட்டம் முதல் மிரட்டி வரும் உயர்நீதிமன்றத்தின் யோசனை அல்லது சாடல் என்பது அரசை விமரிசிப்பது போல தனியார் மயத்தை ஆதரிக்கும் சதித்தனத்தை கொண்டிருக்கிறது. உண்மையில் நிலுவைத் தொகையை கொடுக்க முடியவில்லை என்றால் பதவி விலகலாமே என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழில் ‘வண்க்கம்’ கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆற்றினார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக அமல்படுத்தி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த மக்கள் நலத்திட்டங்களின் யோக்கியதை என்ன? பல கோடி ரூபாயில் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா! போக்குவரத்து தொழிலாளிகளுக்கு பட்டை நாமம்! அடுத்து மின்வாரியத் தொழிலாளிகளும் போராடப் போவதாக கூறியிருக்கிறார்கள்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கத்துடன் வெளிநடப்பு செய்தனர். சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்திரவிடக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். பாஜக -வின் அடிமை அரசாக இருக்கும் எடப்பாடி அரசை பாதுகாக்கும் கவர்னரின் அரசியல் சாசனப்படியான வேலைகளை கடந்த நான்கைந்து மாதங்களாக தமிழகம் பார்த்துத்தான் வருகிறது. இதில் கூடுதல் காமடியாக ஆங்காங்கே குப்பைகளை வரவழைத்து பல பத்து உதவியாளர்களின் உதவியுடன் அகற்றும் மகத்தான ஆய்வுப் பணியையும் பார்த்து வருகிறோம். கருப்புக் கொடி காண்பித்தும் காவிப் படையின் முகவர் ஆய்வுகளை தொடர்கிறார்.

ஆளுநர் பன்வாரிலால், ஜி.எஸ்.டி. வரியை சுமுகமாக அமல்படுத்திய தமிழக அரசை பாராட்டுவதாக தெரிவித்தார். இந்த சுமூகமும் சரி, மத்திய பாஜக அரசின் சமூகமும் சரி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் சிறு உற்பத்தியாளர்களது வேலை நிறுத்தத்தையும் போராட்டங்களையும் கொண்டு வந்து இலட்சக்கணக்கான தொழிலாளிகளை நிர்க்கதியாக்கியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் “விஷன் 2023” திட்டத்தை நோக்கி தமிழக அரசு செயல்படுவதாக பாராட்டிய ஆளுநர் பன்வாரிலால், ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் எடப்பாடி அரசு எடுத்த முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்தார். ‘ஏ ஒன்’ குற்றவாளியின் விஷன் ஜாஸ் சினிமாவிலும், மிடாசின் கல்லவாலும் ஒளியூட்டப்பட்டிருந்தாலும், மனு ஸ்மிருதிப்படி பாராட்டித்தானே ஆக வேண்டும்?

ஒக்கிகி புயல் தாக்குதலின்போது கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து தமிழக அரசு மீட்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார் ஆளுநர் பன்வாரிலால். ஒக்கி புயலின் போது இதே ஆளுநர் குளச்சலில் மக்கள் கேட்ட கேள்விகளால் பயந்து போய் கன்னியாகுமரி அம்மன் கோவிலில் வணங்கி விட்டு ஆய்வுப் பணியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியது வரலாறு. தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பான பங்கை தமிழக அரசு அளித்து வருவதாகவும் கூறினார். பின்னே இவரே ஆய்வுப் பணி செய்வதால் இந்தப் பாராட்டு தனக்குத்தானே பாடப்படும் பாட்டு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால், மீனவர், வேளாண் திட்டங்களில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

ஒக்கி புயலில் மீனவர்கள் தத்தளித்த போது ஆர்.கே நகரில் குத்தாட்டம் போட்டு நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, ஏ ஒன் குற்றவாளியின் வீட்டை நினைவிடமாக்கினால் இனி தமிழகத்தின் ஊழல் அமைச்சர்களின் இல்லங்கள் அனைத்தும் வாழும் நல்லவர்களின் கோவில்களாக கருதி திருமுழுக்குத்தான் செய்ய வேண்டும்.

இனி இன்றைய கருத்துக் கணிப்பு :

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – உங்கள் கருத்து என்ன?
(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

  • மக்கள் விரோத அரசாங்கத்துக்கு ‘மக்கள் ஆளுநரி’ன் பாராட்டு
  • அடிமை எடப்பாடி அரசுக்காக ஆண்டை பாஜக சார்பில் அவரே தயாரித்திருக்கும் ஆசியுரை
  • நல்ல அரசாங்கத்துக்கு நல்ல ஆளுநரின் பாராட்டு
  • அடுத்தடுத்த ஆய்வுப் பணிகளின் மூலம் பாஜக-வின் செல்வாக்கை உயர்த்துவதற்கு ஒரு முன்னோட்டம்
  • பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையில்லை என்பதற்கான அங்கீகாரம்
  • ஆளுநரின் உரையில் குறையொன்றுமில்லை

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க