மோடியின் சா(வே)தனைத் திட்டமான பண மதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைகளால் இந்தியாவெங்கும் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்கிறது. இவைகளால் கடுமையான நட்டத்திற்கு உள்ளான சிறு முதலாளி பிரகாஷ் பாண்டே, உத்தரகாண்ட் மாநில பாஜக அலுவலகத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரகாண்டைச் சேர்ந்த சிறு முதலாளியான பிரகாஷ் பாண்டே(வயது 40) டிரான்ஸ்போர்ட் வாடகை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 -ம் தேதி மோடியால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் வியாபாரம் சரிந்து விழ, அடுத்த அடியாக 2017 -ம் ஆண்டு ஜூலை மாதம் 1 -ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியும் சேர்ந்து கொள்ள, வியாபாரம் கடும் நட்டத்தைச் சந்தித்த நிலையில்தான் இந்த சோகமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார் பிரகாஷ் பாண்டே.

06.01.2018 அன்று விஷத்தை உட்கொண்ட நிலையில் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கு அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் சுபோத் உனியால் தலைமையில் நடைபெற்ற ‘ஜனதா தர்பார்’ என்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு, உனியாலை நோக்கி தன்னுடைய வியாபாரம் கடும் நட்டத்தைச் சந்திக்கக் காரணம் மாநில மற்றும் மத்திய பாஜக அரசாங்கங்களின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகளே காரணம் என்றும், இதனால் வியாபாரம் ஒட்டுமொத்தமாகச் சரிந்து வங்கிக் கடனை அடைக்க வழியில்லாததாலும், குடும்பத்தைப் பராமரிக்க முடியாததாலும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தான் ஏற்கனவே விஷமருந்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் தன்னுடைய வங்கிக் கணக்கின் வழியாக வர்த்தகம் ஒரு வருடத்திற்கு 60 இலட்சத்திலிருந்து 1 கோடி வரை நடந்து வந்ததையும், பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகளுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் வர்த்தகம் தடைபட்டு ஒன்றுமே இல்லாமல் மாறிப்போன நிகழ்வையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் விஷமருந்தியது மோடி, அருண் ஜேட்லி மற்றும் அமித் ஷா போன்றவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும், ஏனென்றால் பல முறை இவர்களுக்கு தனது வங்கிக் கடன்களை இரத்து செய்யக்கோரி தான் கடிதம் எழுதியதாகவும், ஆனால் யாருமே தன்னுடைய கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
இதையன்றி அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் அலுவலகத்தைப் பலமுறை தொடர்பு கொண்ட பிறகும் தனக்கு எந்த விதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திரிவேந்திர சிங் ராவத் ஒரு பயனற்ற மனிதர் என்றும், மக்களுக்கென்று எந்த நல்லதையும் செய்வதில்லை என்றும் கூறியிருக்கின்றார்.
வங்கியிலிருந்து வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலையிலும், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கடந்த ஆறு மாத காலமாக பணம் கட்ட முடியாத நிலையிலும் தான் இந்தச் சோகமான முடிவை எடுத்துள்ளார் பிரகாஷ் பாண்டே.
முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், விஷம் உட்கொண்டது உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில் 09.01.2018 அன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோடி ஆட்சியின் நரபலிகள் தொடர்கின்றன!
மேலும் :
- Uttarakhand businessman who attempted suicide at Dehradun BJP office, dies
- In Suicide Blaming GST At BJP Office, Uttarakhand Government’s First Crisis