Thursday, April 17, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்தலையங்கம்ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !

ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !

-

ர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்றிருக்கும் வெற்றியைத் தொடர்ந்து தேர்தல் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்துப் பலரும் கவலைப்படுகின்றனர். முந்தைய இரு தேர்தல்களில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பெற்ற வெற்றியை ஒப்பிடும்போது, தினகரனின் வெற்றி இழிவானதென்று கருதுவோர், இரண்டு இழிவுகளுக்கும் இடையிலான வேறுபாடு எத்தனை ரூபாய் என்பதைச் சொல்லவேண்டும்.

குமாரசாமி தீர்ப்பைத் தொடர்ந்து 2015 -இல் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏன் புறக்கணித்தன? போலி வாக்காளர்கள், ஓட்டுக்குப் பணம் என்று எல்லாவிதமான முறைகேடுகளும் அன்று தலைவிரித்தாடின. அ.தி.மு.க. மட்டும் பணம் விநியோகிக்கத் தோதாக 144 தடை உத்தரவு, இரவு பத்து மணிக்கு மேல் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்ய அனுமதி, தேர்தல் முடிவு அறிவிப்பிலேயே தில்லுமுல்லுகள் எனத் தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகள்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியைச் சாத்தியமாக்கின.

உண்மையைச் சொன்னால், ஜெயாவை ஒப்பிடும்போது தினகரனால் செய்ய முடிந்த தில்லுமுல்லுகள் குறைவானவையே. அரசு எந்திரத்தின் ஆதரவும் தினகரனுக்கு இல்லை. திகார் சிறை, ரெய்டுகளுக்குப் பின்னரும், தி.மு.க. அளித்த புகாரின் பேரில் சுமார் 45,000 போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கிய பின்னரும், சின்னம் இல்லாத நிலையிலும் மன்னார்குடி மாஃபியா, பார்ப்பன மாஃபியாவின் சூழ்ச்சிகளை வென்றுவிட்டது. இதன் விளைவுதான் குருமூர்த்தியிடமிருந்து வெடித்தெழுந்த வசவு.

தினகரனின் வெற்றிக்குப் பணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்ற மதிப்பீட்டை அ.தி.மு.க., தி.மு.க. வினரே ஏற்கமாட்டார்கள். அந்தத் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் மீது மக்கள் கொண்டிருக்கும் கட்டுக்கடங்காத வெறுப்பு, எண்ணெய்க் கப்பல் கசிவு தோற்றுவித்த பாதிப்பு, குடிதண்ணீர், பொது சுகாதாரம் தொடர்பாக நடந்த மக்கள் போராட்டங்களில் போலீசின் அடக்குமுறை போன்ற பல காரணிகள் அ.தி.மு.க.வுக்கு எதிரான மக்களின் கோபத்தைக் கூட்டியிருக்கின்றன.

“அம்மா இருந்தபோதும் இதுதான் நிலை” என்ற போதிலும், வாக்காளர்களின் அடிமை மனோபாவம் அம்மாவுக்கு வழங்கிய சலுகையை அடிமைகளுக்கு வழங்கத் தயாராக இல்லை. அ.தி.மு.க. வாக்குவங்கியின் இந்தக் கோபம், “அம்மா இறந்த பின் தறி கெட்டு ஆடும் இந்த திருடர்களை அடக்கத் தகுதியான திருடன் தினகரனே” என்று கருதியிருக்கின்றன. “ஒரு குட்டையில் ஊறிய மட்டை” என்று தினகரனை நிராகரிக்கவில்லை. இது நம் கவனத்துக்குரியது.

“ஓட்டுக்குப் பணம்” என்பது இன்று ஆர்.டி.ஓ. ஆபீஸ் இலஞ்சம் போல அங்கீகரிக்கப்பட்ட எதார்த்தம். இந்நிலையை உருவாக்கிய குற்றவாளிகளில் முதலிடத்தைப் பிடித்தவர் ஜெயலலிதா. “சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் சதிகாரி” என்று ஜெயா வைப்பற்றி முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

குன்ஹா தீர்ப்பைத் தொடர்ந்து ஜெ. சிறையில் அடைக்கப்பட்டபோது, “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா” என்று சினிமா நட்சத்திர அசிங்கங்கள் போராட்டம் நடத்தினார்கள். குன்ஹாவை இழிவுபடுத்தி அ.தி.மு.க. காலிகள் நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்தபோது நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தார்கள் நீதிபதிகள்.

குற்றவாளி ஜெயா பிணையில் வெளிவந்தபோது தொலைக்காட்சிகள் அவர் வருகையை “லைவ் டெலிகாஸ்ட்” செய்தார்கள். இன்று அந்த கிரிமினலுக்கு மணி மண்டபம் கட்டுவதை ஆட்சேபிக்கக் கூட திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது தினகரன் வெற்றியைப் பற்றி மட்டும் அதிர்ச்சி வெளியிடுவது பாசாங்கு.

“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது. “காசை வாங்கிக்கொண்டு எனக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை” என்று வாக்காளர்களைக் கேட்க முடியாத நிலை உருவாகி வருவது வேட்பாளர்களுக்கும் புரிந்து வருகிறது. இதுதான் தேர்தல் ஜனநாயகம் கண்டிருக்கும் முன்னேற்றம்.

ஆர்.கே. நகர் வாக்காளர்களில் ஆகப்பெரும்பான்மையினர் நிச்சயமற்ற வருவாயில் வாழ்க்கையைத் தள்ளுகின்ற கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் செய்து வாழும் ஏழை மக்கள். இன்று மொத்த சமூகமும் அந்நிலையை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. “இன்று விவசாயி, நாளை செக்யூரிட்டி, மறுநாள் சிறு வியாபாரி..” எனப் புயலில் சிக்கிய சருகு போல அலைக்கழிக்கப்படும் உழைக்கும் வர்க்கங்களைப் பொருத்தவரை, “எதிர்காலம்” என்பது அடுத்த ஐந்தாண்டோ பத்து ஆண்டோ கூட இல்லை. “நாளைய சோறு, இன்றைய கடன்பாக்கி” – அவர்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும் “எதிர்காலம்” இதுதான்.

ஜெயலலிதாவின் இலவச அரிசிக்கும், அம்மா உணவகத்துக்கும், ஓட்டுக்குத் தரப்படும் பணத்துக்கும் இந்த வர்க்கத்தினர்தான் இலக்கு. இம்மக்களைப் பொருத்தவரை, கொள்கை, இலட்சியம் போன்றவற்றையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத தொலைவுக்குத் தள்ளிவிட்டது அவர்களது வாழ்க்கை. கொள்கைகளைக் காட்டிலும், தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிலும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியதாகத் தெரிவது தினகரனின் இருபது ரூபாய் நோட்டு.

“கொளுகை என்னான்னு மீடியாக்காரங்க கேட்டாங்க. எனக்குத் தலை சுத்திடுச்சி” என்று ரஜினி பேசுவதைக் கேட்டு அவரது ரசிகர்கள் வெட்கப்படவில்லை. ஆரவாரிக்கிறார்கள். இத்தகைய வர்க்கங்களை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் ரஜினியை முன்தள்ளுகிறது பா.ஜ.க. திராவிட இயக்கம், தமிழ் உணர்வு, கம்யூனிச அரசியல் ஆகியவற்றை வீழ்த்துவதற்கு வட இந்திய பாணியிலான இந்துத்துவ பொறுக்கித்தனம் உதவாது. பொறுக்கி அரசியல் என்ற இனிப்புக்குள்ளே இந்துத்துவத்தை மறைத்துத்தான் ஊட்ட வேண்டும் என்ற வழிமுறைக்கு ஜெயலலிதா கோடு போட்டிருக்கிறார். அதன் மீது ரோடு போடத்தான் ரஜினியை அழைத்து வருகிறார்கள்.

இம்மக்கள் ஒரு பகுதி தமிழ்நாடு – மென்மேலும் உதிரிகளாக மாற்றப்படும் தமிழ்நாடு. இன்னொன்று – ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு, கதிராமங்கலம், நெடுவாசல், செவிலியர், மீனவர், விவசாயிகள், அரசு ஊழியர், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்கள் என்று தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும் தமிழ்நாடு. முதற் பிரிவு மக்கள் மீது “ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது” என்ற ஜனநாயக விழுமியத்தை தனியே நிலைநாட்ட முடியாது.

“பணம் வாங்காமல் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு எம்.எல்.ஏ. -க்களுக்கு முறையாக அதிகாரத்தை வழங்குவது எப்படி” என்று மக்களைப் பயிற்றுவித்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால், ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் நிறுவனங்கள் என்று கூறப்படுபவைதான் அதன் உண்மையான எதிரிகளாக இருக்கின்றன.

தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வது எப்படி என்று மக்களைப் பயிற்றுவித்துவிட்டால், இந்த நிறுவனங்களையும், தினகரனின் இருபது ரூபாய் நோட்டையும், “கொளுகை இல்லாத ரஜனியையும்” மக்கள் தாமே எதிர்கொள்வார்கள். செக்கு மீது ஏறி சிங்கப்பூர் போக முடியாது. தேர்தல் அரசியலின் வரம்பில் சிந்தித்து இதனைச் சாதிக்கவியலாது.

-புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.