டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு ஒரு புராணக்கட்டுக்கதை என்றும் அதை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலிருந்து நீக்க வேண்டும் என்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரான சதயபால் சிங்கின் கருத்திற்கு இந்தியா முழுதும் அறிவியல் துறையினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதை செவிவழியாகவோ, எழுத்துப் பூர்வமாகவோ நம்முடைய முன்னோர்கள் கூறியதில்லை என்று அனைத்திந்திய வேத மாநாட்டில் கலந்து கொண்டு இந்த அமைச்சர் கூறினார்.

“குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்ததை டார்வின் கண்டறிவார் என்று நம்முடைய முன்னோர்கள் கூறவில்லை. அவரது கோட்பாடு முற்றிலும் தவறு. ஆகவே அதை கற்றுக்கொடுக்க கூடாது. ஆதி முதலாக பூமியில் மனிதர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்” என்றும் இந்த முட்டாள் அமைச்சர் கூறியிருக்கிறார்.
டார்வினுடைய கோட்பாடு உலகெங்கிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறதாம். டார்வினியம் ஒரு புராணக்கட்டுக்கதை என்பதை அவர் வெறுமனே கூறவில்லையாம். டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு அறிவியலாளன் என்பதாலேயே அதை கூறியிருக்கிறாராம். கழுதைக்கு எப்படி தெரியும் கற்பூர வாசனை?
சிங் கூறும் அந்த முன்னோர்கள் யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும், ஸ்டெம் செல் ஆராய்ச்சியும் 5,000 ஆண்டு களுக்கு முன்பே மேற்கொண்டவர்கள் தான் அம்முன்னோர்கள் என்று ஏற்கனவே திருவாளர் மோடி ஒரு அறிவியல் மாநாட்டில் கூறியுள்ளார். புராணக்கட்டுக்கதைகளையே அறிவியலாக பேசும் 56 இஞ்சும் அவரது சகதுதிபாடிகளுக்கும் டார்வினின் பரிணாமக் கோட்பாடு கட்டுக்கதைதான்.
சரி, சிங் எனும் இந்த ‘மாபெரும் அறிஞரின்’ கருத்து பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகிறது?
அமைச்சரின் கருத்து எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளதக்கதல்ல என்கிறார் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமவியல் துறைப் பேராசிரியர் கேடக்கர்.
அரசியல் ரீதியாக அறிவியலையும் அறிவியலாளர்களையும் பிரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது தான் உண்மையான ஆபத்து. எனவே அறிவியலை அதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் இந்திய அறிவியல் அகடமியின் முன்னால் தலைவரான அவர் கூறினார். ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக தம்முடைய நெருக்கமான உயிரினமான மனிதக்குரங்கிடமிருந்து மனித சமூகம் பிரிந்து வந்ததாக நம்மிடம் இருக்கும் மிக அடிப்படையான அனைத்து சான்றாதாரங்களும் கூறுகின்றன. எனவே நம்முடைய முன்னோர்களுக்கு அதை பதிவு செய்வதற்கான எவ்வித வாய்ப்புகளும் அந்த காலகட்டத்தில் இல்லை என்கிறார் அவர்.
அமைச்சரின் கருத்திற்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லை. டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு நன்றாக நிறுவப்பட்ட ஒன்று. பரிணாமவியல் கோட்பாட்டின் அடிப்படை மீது அறிவியல் உலகிற்கு எவ்வித சந்தேகமும் இல்லை. தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் அவதானிப்புகளுக்கு உட்படுத்தப்பட்ட ஓர் அறிவியல் கோட்பாடு இது என்று இந்திய தேசிய அறிவியல் அகடமி, இந்திய அறிவியல் அகடமி மற்றும் தேசிய அறிவியல் அகடமி உள்ளிட்ட முன்னணி அறிவியல் நிறுவனங்களை சேர்ந்த 2000 -க்கும் மேற்பட்ட அறிவியலார்கள் தங்களது கூட்டறிக்கையில் கூறியிருக்கின்றனர்.
“அறிவியலுக்கு புறம்பான விளக்கங்களை கூறுவதன் மூலம் பரிணாமவியல் கோட்பாட்டை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான பிற்போக்குத்தனமான முயற்சி இது. நவீன உயிரியல் மற்றும் மருத்துவவியலில் மட்டுமல்ல ஒட்டுமொத்த அறிவியலிலும் டார்வினின் இயற்கைத்தேர்வு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த அறிவியல் உலகிலும் இதற்கு ஆதரவு உண்டு” என்று அவ்வாய்வறிக்கை கூறுகிறது.
“உங்களது கருத்தினால் விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் தொடர்பாளர்களான நாங்கள் கடுமையாக காயப்பட்டிருக்கிறோம். அறிவியல் சமூகத்தால் பரிணாமவியல் கோட்பாடு நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற உங்களது கூற்றிற்கு எந்த அடிப்படையும் இல்லை. மாறாக ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் டார்வினுடைய கண்டுபிடிப்பிற்கு சான்று பகர்கிறது” என்று சமூக வலைத்தளத்தில் 1,800 கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதம் சிங்கிற்கு கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இதற்கு பின்னும் இடிச்ச புளியாட்டம் இந்த முட்டாள் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நிதி ஒதுக்கினால் உலக அளவில் இதைப் பற்றி விவாதிக்க ஒரு சர்வதேச மாநாட்டு நடத்தி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதை சொல்லித்தர வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யலாமே என்று துணிந்து உளறவும் செய்கிறார்.
இதற்கிடையில் எழுந்த கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு சத்யபால் சிங்கை அடக்கி வாசிக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டிருப்பதாக கிசுகிசுவாக செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
பார்ப்பனர்களையும் அவர்களுக்கு சேவை செய்ய சூத்திர பஞ்சமர்களையும் பிரம்மா தான் படைத்தார் என்ற ‘படைப்புக் கொள்கை’ இருக்கும் போது இந்த பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகள் டார்வினது அறிவியல் கண்டுபிடிப்பை எப்படி ஏற்பார்கள்?
மேலும் :
- Stop Teaching Darwin’s Theory as It Is Scientifically Wrong: Union Minister Satyapal Singh
- “I’m A Man of Science”: Minister Stands Firm Amid Row Over Darwin Remark
- Beijing’s Trajectory in Science and Technology Shows India Is Far Behind in the Game
- Scientists ‘deeply pained’ by Minister’s claim on Darwin’s theory
- With Ram Madhav and Satyapal Singh in Charge, Even Lord Ram Can’t Help Indian Science