தொன்மை வாய்ந்த ஏதென்ஸ் நகரிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோலிமைடாவிற்கு(Ptolemaida) வெளியே பயணம் செய்தால் சூரியனையே நம்மால் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு காற்றில் மாசுக்களின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் டோலிமைடாவைச் சேர்ந்த கோஸ்டாஸிற்கு(Kostas ) அந்த சிக்கல் இல்லை. கண்ணைக் கட்டினால் கூட தன்னால் வண்டியை ஓட்ட முடியும் என்கிறார் அவர்.
“என்னுடைய தந்தை புற்றுநோயால் இறக்கும் போது எனக்கு 12 வயது. அவருடைய சகப்பணியாளர்கள் நால்வர் கூட அதே பிரச்சினையால் தான் இறந்து போனார்கள்” என்கிறார் அவர்.
கிரீஸ் அரசு மின்சக்தி நிறுவனத்தில் (PPC) அவரது தந்தையை போலவே பாதுகாவலராக கோஸ்டாஸ் பணிப்புரிகிறார். டோலிமைடாவின் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக பணியில் இருக்கும் போதே இறந்துவிட்ட கோஸ்டாஸின் தந்தை அந்நிறுவனத்தின் முக்கியமான ஊழியர்களில் ஒருவர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் ஒருபுறமும் நட்டமடைவது மறுபுறமும் இருந்தாலும் கூட 1.75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இரண்டு புதிய சுரங்கங்களில் கிரீஸ் அரசு முதலீடு செய்துள்ளது. பாலைவனமான சில கிராமங்களையும் உள்ளடக்கி சுமார் 625 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ள நிலக்கரி சுரங்கம் நாட்டின் 30 விழுக்காட்டு மின்சாரத்தேவையை பூர்த்தி செய்கிறது.
ஜெர்மனி, செக் குடியரசு மற்றும் போலந்துடன் சேர்ந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரியை மட்டுமல்லாமல் மிக மோசமான மாசுப்பாட்டையும் சேர்த்தே கிரீஸ் உற்பத்தி செய்கிறது.
கிரீன்பீஸ் அமைப்பின் ஓசையற்ற கொலையாளி (Silent Killer) அறிக்கையின் படி நிலக்கரி சுரங்கத்தின் மாசுபாடு கிரீசில் 1200 மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. கிரீசை மட்டுமல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து அண்டை நாடுகளையும் இது பாதிக்கிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் சராசரி வாழ்நாளும் அங்கே குறைகிறது.
கிரீசின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் இது போன்ற சுரங்கங்களில் கோஸ்டாஸ் போன்றவர்கள் தங்களது உடல்ரீதியான சிக்கல்களை தள்ளி வைத்துவிட்டு 847 டாலர் மாத ஊதியத்திற்கு பணிப் புரிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக, 1976-ம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 4000 மக்கள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி உள்நாட்டு அகதிகளாகிவிட்டனர்.
சிதிலமடைந்த வீடுகள், பசியால் வாடும் சில தெருநாய்கள், பாழடைந்த தேவாலயங்கள் மட்டுமே டோலிமைடாவிற்கு அருகே இருக்கும் மாவ்ரோபிகி (Mavropigi) கிராமத்தின் இன்றைய அடையாளம்.
அந்த கிராமத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி 2010 –ம் ஆண்டில் தொடங்கப்பட்டப் பிறகு பயத்தினால் பலர் வெளியேறிவிட்டனர். பள்ளிகள் நிரந்தரமாக அங்கே மூடப்பட்டன.
அங்கே எஞ்சியிருக்கும் 10 குடியிருப்புவாசிகளில் அரிஸ்டோக்ராதிசும் அவரது மனைவியும் இருக்கின்றனர். “என்னுடைய மனைவியும் மற்றும் நாய்களும் இங்கே வசிக்கிறோம். வேறெங்கும் சென்று வாழ நான் விரும்பவில்லை. இது மட்டுமே என்னுடைய சொந்த இடம்” என்று கூறுகிறார் அரிஸ்டோக்ராதிஸ்.















நன்றி: அல்ஜசீரா
தமிழாக்கம்: சுந்தரம்
மூலக்கட்டுரை: Life in the shadows of Greece’s coal mines