Wednesday, April 16, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

-

“கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களைப்  பறிமுதல் செய் ! கூட்டுக் களவாணிகளான  அதிகாரிகள் – அமைச்சர்களையும் சிறையிலடை!” என்ற முழக்கத்தின் கீழ்  தமிழகம் தழுவிய அளவில்   புரட்சிகர   மாணவர்- இளைஞர் முன்னணி  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

(பெரிதாகக் காண படங்களின் மீது அழுத்தவும்)

சென்னை:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடம் நிரப்ப 30 லட்சம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட துணைவேந்தர் கணபதியின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். கணபதி லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியில் சேர்த்த 112 பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். இதுமட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவிக்கு 10 கோடி, பேராசிரியர் பணிக்கு 50 லட்சம், உதவி – இணைப் பேராசிரியர் பணிக்கு 25 லட்சம் என தீர்மானித்து  லஞ்சம் வாங்கும் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால்,  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் மீதும் வழக்கு தொடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்வைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில்  சுமார் 50 மாணவ மாணவியர் கடந்த பிப்ரவரி 9, 2018 காலை 11.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்திலுள்ள உயர்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பு.மா.இ.மு. தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட தோழர்களை போலீசு  கைது செய்ய முயன்றது. கைதாக மறுத்து RSYF மாணவர்கள்  டி.பி.ஐ வாயில் தொடர்ந்து அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். போராடிய மாணவர்களை போலீசு குண்டுகட்டாக பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

(பெரிதாகக் காண படங்களின் மீது அழுத்தவும்)

தருமபுரி:

தருமபுரியில்   தந்தி அலுவலகம் அருகே  09.02.2018  அன்று  மாலை 4 மணி அளவில் பு.மா.இ.மு. தோழர்கள் கண்டன  ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினை   புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி   மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு  தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் புமாஇமு தோழர் வனிதா, ம.உ.பா.மை- யின் அமைப்பாளர் வழக்கறிஞர் ஜானகிராமன், புமா.இ.மு கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் பாக்கியராஜ், மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய தோழர்கள், பல்கலைக்கழகங்கள் இலஞ்ச, ஊழல் குற்றங்களின் ஊற்றுக் கண்களாக இருக்கின்றன என்றும், இலஞ்சம் கொடுத்து பணியில் சேருபவர்களால் எப்படி சேவை மனப்பான்மையுடன் கல்விச் சேவை புரிய முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். இது பாரதியார் பல்கலைக் கழகத்தில் மட்டும் நடக்கும் விசயமல்ல, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் ஒன்றாகவும் இருக்கிறது என்றும், சமீபத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.100கோடி அளவில் ஊழல் நடைபெற்றது என்றும் கூறினர்.

தற்போது மாட்டியிருக்கும் கணபதி மட்டும்  ஊழல் பேர்வழி அல்ல, அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இதில் பங்கு போட்டுக்கொள்வதில்  ஏற்பட்ட   முரண்பாட்டால்தான் கணபதி மாட்டியிருக்கிறார்” என்று கூறினர்

மேலும் கல்வியைக் கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் நடைபெற்று வரும் முயற்சிகளையும், புதியகல்விக் கொள்கை என்ற பெயரில் அதனை இந்த அரசு எப்படிச் செய்துவருகிறது என்பதையும், இதிலிருந்து மீள மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுப்பது தான் ஒரே தீர்வு என்பதையும் விளக்கிப் பேசினர்.

(படங்களைப் பெரிதாகக் காண அதன் மீது அழுத்தவும்)

விருதாச்சலம்:

விருதாச்சலத்தில் கடந்த 09.02.2018, அன்று மாலை 5 மணிக்கு பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. விருதை பகுதி இணைசெயலர் தோழர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜு , ம.உ.பா.மை-யின் மாவட்ட செயலர் தோழர் புஷ்பதேவன், விவசாய சங்கத்தைச் சேர்ந்த தோழர் நந்தகுமார்,மக்கள் அதிகாரத்தின் விருதாச்சலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம், கடலூர் பு.மா.இ.மு.-வைச் சேர்ந்த தோழர் நடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கண்டன உரையில், ”கோவை பாரதியார் பல்கலையின் ஊழல் என்பது புதிதாக நடந்ததல்ல. 1990களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயத்தின் விளைவு தான் இந்த ஊழல் கொள்ளைகள். துணைவேந்தர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் அனைத்தும் அதிகாரிகளாலேயே மீறப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என அனைத்தும் ஊழல்களால் நிரம்பி வழிகிறது. அட்டெண்டர் முதல் பேராசிரியர்கள் நியமனம் வரை இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இதன் தாக்கத்தால் ஒட்டு மொத்தமாணவர் சமூகமும் சீரழிந்து அழிவு நிலையை நோக்கி செல்கிறது. இதற்கு முடிவுகட்டும் அதிகாரம் மக்களுக்கு வரவேண்டும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் கூட்டுத்தலைமையின் கீழ் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான அரசியலை நாம் கீழிருந்து பயிற்றுவிக்க வேண்டும்” என்று பேசினர்.

(படங்களைப் பெரிதாகக் காண அதன் மீது அழுத்தவும்)