Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கமோடி 2018 பட்ஜெட் : முதலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா ! ஆர்ப்பாட்டங்கள் !

மோடி 2018 பட்ஜெட் : முதலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா ! ஆர்ப்பாட்டங்கள் !

-

திருவள்ளுர் மேற்கு மாவட்டம் ” மோடி-ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட்! முதலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா!”என்ற தலைப்பில் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் 10.02.2018 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு விண்ணதிர முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் தோழர் ம.சரவணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மோடி – ஜெட்லி கூட்டணியில் போடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் உழைக்கும் மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கானது என்றும், இதனால் நாடு வளர்ச்சிப்பாதை நோக்கி செல்லும் என்று கூறும் மோடி, மக்கள் மத்தியில் மேலும் மேலும் பொய்யான வாக்குறுதிகளை கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று உரையாற்றினார்.
பிறகு கண்டன உரையாற்றிய மாவட்ட செயலாளர் தோழர் மு.முகிலன்  கார்ப்பரேட்களின் நலனுக்காக போடப்பட்ட பட்ஜெட் என்றும், மோடியின் தேர்தல் வாக்குறுதிகளும், வளர்ச்சி, வல்லரசு என்ற கோஷங்கள் எல்லாம் கார்ப்பரேட்களின் நலன் சார்ந்தது என்பது நிரூபணமாகி வருகிறது. தொழிலாளர்களின் தொடர் வேலை பறிப்பு, சிறுகுறு தொழில்கள் மறுகாலனியாக்க நடவடிக்கையின் விளைவாக அழிக்கப்படுகிறது, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்ப்பதின் நோக்கம் குறித்தும், விவசாய பட்ஜெட் என்பது விவசாயத்துறையை கார்ப்பரேட்டின் வசம் ஒப்படைக்கும் முயற்சி என்றும் இந்த பட்ஜெட் முழுவதும் வெற்று சவடால்களும், வாய்ஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரான பட்ஜெட் என்பதை தனது கண்டன உரையில் விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட கிளை/இணைப்பு சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர். அப்பகுதியின் வியாபாரிகள், பாதசாரிகள் மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கவனித்துக் கொண்டு இருந்தனர்.
இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் தோழர் து.லெட்சுமணன் நன்றியுறையுடன் கூட்டம் முடிவுற்றது.
 ( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இவன்
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
***
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட் மோசடி பட்ஜெட் ! முதலாளிகளிக்கு கல்லா! மக்களுக்கு குல்லா! “ என்கிற தலைப்பின் கீழ் 10.02.18 மாலை கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் தோழர் ஹரிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் சதிஷ், அரசால் திட்டமிட்டு சீரழிக்கப்படும் போக்குவரத்து துறை குறித்தும், அதனால் பாதிப்படையும் தொழிலாளர்களை குறித்தும் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார் மோடி அரசின் பட்ஜெட் மோசடியான பட்ஜெட் என்றும், அது மக்களுக்கானது அல்ல, முதலாளிகளின் நலனுக்கானது என்பதை விளக்கிப் பேசினார்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் மெய்யழகன் நன்றியுரையாற்றினார்.
100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டக் கூட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
இவன்
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
***

” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட் மோசடி பட்ஜெட்! முதிலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா! ” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக (10.02.2018 சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில்  ஓசூர் ராம் நகர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியோர் தற்போது மத்திய அரசால் போடப்பட்டுள்ள 2018 பட்ஜெட் என்பது நம் நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் பிரிவை சேர்ந்த விவசாயி, தொழிலாளி, சிறு- குறு வணிகம் மற்றும் சிறு-குறு தொழில் முனைவோர் அனைவருக்கும் எதிராகவும், அதே சமயம் இன்னொருபுறம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் தங்குதடையற்ற சுரண்டல் நலனுக்காவே போடப்பட்ட பட்ஜெட் என்ற உண்மையை பல்வேறு விவரங்களுடன் தரவுகளோடு அம்பலப்படுத்திப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் ஒரே குரலாய் மோடி – ஜெட்லியின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டிற்கு எதிராக விண்ணதிர முழக்கங்களை முழங்கினர். திரளான மக்கள் இவ்வார்ப்பாட்டத்தை கேட்டு வாழ்த்தி ஆதரித்துச் சென்றனர்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்,
செல் – 9788011784.

***

” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட்  மோசடி படஜெட்! முதலாளிக்கு கல்லா ! மக்களுக்கு குல்லா ! ” என்ற முழக்கத்தின் அடிப்படையில்  காஞ்சிபுரம்  காந்தி ரோடு  பெரியார் துண் அருகே  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  பு.ஜ.தொ.மு – வின்  மாவட்டத் தலைவர் தோழர் சரவணன்  தலைமை தாங்க  மாவட்ட செயலாளர் தோழர் சிவா தனது கண்டன உரையில் “ மோடி தலைமையிலான  மத்திய அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் அறிவித்த திட்டங்களும் அரசின்  நடவடிக்கைகளும்   கார்ப்ரேட்டுகளுக்காக நடக்கும் ஆட்சி என்பதை தினந் தோறும் நிருபித்தார் மோடி !

GST வரி விதிப்பும்  பண மதிப்பு இழப்பு  ஆகியவை மக்களின் துயரத்திற்கு  அடிப்படையாக இருக்கின்றன.  பொதுத்துறையை 80,000 கோடிக்கு  விற்பது முதல்  இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அம்பானிக்கு அனுமதி  வரை  தற்போதைய பட்ஜெட்டும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கானதுதான்  என்பதை அம்பலப்படுத்தி   இந்த  அரசமைப்பில்  உழைக்கும் மக்கள் வாழ முடியாது.  மக்களுக்கு அதிகாரம் உள்ள புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டும்” அறை கூவினார்.

இடையிடையே  மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள அறிவிப்புகளை அம்பலப்படுத்தி  முழக்கம் இட்டது  மக்களை  ஈர்க்கும் வகையிலே இருந்தது.

தோழமையுடன்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞசிபுரம் மாவட்டம் – 8807532859

***

மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட்! முதலாளிகளுக்கு கல்லா! மக்களுக்கு குல்லா! என்ற தலைப்பின் கீழ் வேலூர் மாவட்டம், மண்டி வீதியில் ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், தோழமை அமைப்பான ம.க.இ.க. தோழர்கள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மணி நன்றியுரையாற்றினார். இவ்வார்ப்பாட்டம் அனைத்து துறைகளும் கார்ப்பரேட் மயமாவதை அம்பலப்படுத்தும் விதமாகவும், இதற்கு தீர்வு புதிய ஜனநாயக புரட்சிதான் என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.

மண்டி வீதியில் வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர் என நூற்றுக்கணக்கானோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. கூட்டம் கட்டுப்கோப்புடன் நடந்தது. மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழமையுடன்
புதிய ஜனநாகத்தொழிலாளர் முன்னணி
வேலூர்

***

” மோடி–ஜெட்லி 2018 -19  பட்ஜெட் : முதலாளிகளுக்கு  பட்டுக்கம்பளம்! மக்களுக்கோ  பட்டை நாமம்! என்கிற முழக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டம்  புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக  பென்னாகரத்தில்   பிடிஓ  அலுவலகம், டெம்போ  ஸ்டேண்ட்   ஆகிய  இரண்டு  இடங்களில்  07.02.2018  அன்று மாலை  4 மணி அளவில் தோழர் சத்தியநாதன்  தலைமையில்   தெருமுனைக்கூட்டம்   நடைப்பெற்றது.  அவரது உரையில்  ஆண்டு தோறும்  பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அதேபோல தான் இந்த ஆண்டும் தாக்கல் செய்துள்ளனர். விவசாயம், கல்விக்கு பட்ஜெட் கிடையாது. ஒட்டுமொத்தமாக மக்களுக்கு அல்வா கொடுக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது. 8 கோடி மக்களுக்கு  சிலிண்டர் மானியம் ரத்து . எனவே  நம்முடைய பிரச்சினையை  தீர்க்க வேண்டுமானால்  நாம்தான்  போராடவேண்டும்.  முதலாளித்துவ பொருளாதாரத்தை  ஆயிரம் ஜெட்லி வந்தாலும்  தூக்கி நிறுத்த முடியாது என்று அம்பலப்படுத்தி பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்  தோழர்  ஜானகிராமன் பேசுகையில் ,மோடி பட்ஜெட் என்பது வரபோகும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து  போடப்பட்டுள்ளது. இவர்கள் போடக்கூடிய வரி எல்லாமே மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.  10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு  ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதாயமடைவது  தனியார் மருத்துவ முதலாளிகள்தான் லாபமடைய போகிறார்கள்.

விவசாயத்திற்கு 11 லட்சம் கோடி  மானியம் வழங்கப்படும் என்கிறார்கள் . இது விவசாயத்தை  பதப்படுத்தும்  நிறுவனங்களுக்கு கொடுக்க போகிறார்கள். இதில் விவசாயிகளுக்கு இடைதரகனாக இருந்து  கொள்ளையடிப்பது,  தனியார் கார்ப்பரேட் நிறுவனம். எனவே  இந்திய விவசாயத்தையும், கல்வியையும்  தனியாருக்கு கொடுக்கும்  பட்ஜெட். மேலும் குடியரசு தலைவருக்கு  ரூ.5 லட்சம் சம்பளம், அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு   இதற்காக  மக்களின் மீதான வரியை அகலப்படுத்துகிறார்கள். எனவே  எந்த  அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இல்லை, மாற்றாக  தனியார்மயம், தாராளமையம் , உலகமய எதிராக போராடுவதுதான் ஒரே தீர்வு.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில், அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது விவசாயம். அதற்கு மானியமாக 11 லட்சம் ஒதுக்கியுள்ளதாக  கூறுகின்றனர். இது விவாசாயிகளு போய் சேரபோவது இல்லை,  விவசாயத்தை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, அம்பானி, அதானிக்கும் போய் சேரபோகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சொல்கிறார்கள். எப்படி   இரட்டிப்பாக்க முடியும்.  நெல்லுக்கான ஆதார விலை  கிடைக்கவில்லை, எங்களுக்கு உரிய விலை வேண்டும் என்று போராடிய மத்திய பிரதேச விவசாயிகளை சுட்டுத்தள்ளுகிறார்கள். விவசாயத்திற்கு  அடிப்படையாக இருப்பது தண்ணீர்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது  என்று சொன்ன மோடியால் எப்படி  விவசாய பிரச்சினையை தீர்க்க முடியும். தஞ்சையில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அங்கு குடிப்பதற்கு  நல்ல தண்ணீர் கிடையாது.

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள் அப்பகுதி மக்கள்.  எனவே விவசாய பிரச்சினை என்பது வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இன்று வரை விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே விவசாயிகளின் அழிவு  சமூகத்தின் பேரழிவு என்பதை  விளக்கி மக்கள் அதிகாரம்  தொடர் இயக்கமாக நடத்திகொண்டு இருக்கிறது.  எனவே அனைவரும் ஒன்றிணைவதுதான் தீர்வு.

தோழர் பழனியம்மாள் பேசுகையில், பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த கணமே  பங்குச்சந்தை  5 லட்சம் கோடி ரூபாய் சரிவை கண்டுயிருக்கிறது. அடுத்து 5 லட்சம் சரிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவே காலியாகிவிடும்.  எனவே முதலாளித்துவ பொருளாதாரம் மக்களை மரணக்குழியில் தள்ளும். மார்க்சிய பொருளாதாரமே மக்களை காக்கும். அதனால்தான் 2009 அமெரிக்க நெருக்கடியின் போது, அந்த மக்கள் மார்க்கிய பொருளாதாரத்தை தேடினார்கள். பல நாடுகளில் மார்க்சின் மூலதனத்தை தேடுகிறார்கள்.

மேலும் இந்த பட்ஜெட் குடியரசுதலைவருக்கு 5 லட்சம் சம்பளம், துணை குடியரசு தலைவருக்கு 4 லட்சம் என்று  பல மடங்கு சம்பளத்தை உயர்த்திவிட்டு, விவசாயிகளின்  வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்கிறார் ஜெட்லி. அதற்கான அடிப்படை என்ன இருக்கிறது.

ஒருபக்கம்  மீத்தேன், போன்ற கனிமவளங்களை  கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு  திட்டமிட்டே விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  விவசாயத்தை இரட்டிப்பாக்குவேன் என்றால்  விவசாயிகளுக்கு விலை சொல்லும் அதிகாரத்தை கொடுப்பாரா? இப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான்  பிஜேபியின் திட்டம்.  கிராமங்களில் 5 லட்சம் இணையம் வசதி செய்து கொடுக்கபடும் என்கிறார்கள் .

கிராமங்களில் உள்ள  100 நாள் வேலைத்திட்டத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டு யாருக்கு வேண்டும் இணையம். எனவே மீனவர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, தொழிலாளர்கள் பிரச்சினை எதையும் தீர்த்துக்கொடுக்க துப்பில்லாமல் இருக்கிறார்கள். 1% அமைச்சர்கள் அதிகாரிகள் தின்று கொழுப்பதற்காக 99% மக்களின் இரத்தத்தையும், வேர்வையையும் உறுஞ்சுகிறார்கள். அதை ஏன் அனுமதிக்கவேண்டும் 99% மக்கள்  உழைக்கவில்லை என்றால் இந்த சமூகம், அரசு, அமைச்சர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

எனவே  அநீதீயை வேடிக்கை பார்க்காம்ல 99% மக்கள் வீதியில் இறங்கி  அதிகாரத்தை கையிலெடுப்பதுதான் தீர்வு என்று அறைக்கூவி அழைத்தார். இதனை நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். பார்த்த அனைவருக்கும் இந்த பட்ஜெட் எப்படி மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்பதை புரியவைக்கும் படியும், போராடுவதுதான் தீர்வு என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில்  இத்தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

தகவல்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தருமபுரி. தொடர்புக்கு-8148055539.

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க