இந்த அரசுக்கட்டமைப்பு ஆளத்தகுதியற்றதாக மாறிவிட்டது என்பதை சமீபகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. அதற்குச் சிறந்த உதாரணமாக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் அன்றாடம் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த அரசமைப்பின் தோல்வியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதில் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதை தமிழகத்தில் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக கோத்தகிரி பகுதியில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காகவும், மதவெறியர்கள் மற்றும் சாதிவெறியர்களின் கலவரங்களுக்கு எதிராகவும், அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கோத்தகிரி மக்கள் அதிகாரம் செயல்பட்டு வருகிறது.

மக்களுக்காக போராடி, அடிபட்டு சிறைகுச் சென்று பல வழக்குகளைச் சந்தித்து வருகிறது கோத்தகிரி மக்கள் அதிகாரம். கடந்த இரண்டரை (2.5) ஆண்டுகளாக டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
விவசாயிகள் பிரச்சினை, ஜல்லிக்கட்டுப் போரட்டம், மற்றும் நீதிமன்ற ஊழலுக்கு எதிராக வழக்கறிஞர்களின்போராட்டம் ஆகியவற்றுக்காக அவர்களுடன் இணைந்து போராடியது மக்கள் அதிகாரம்.
கார்ப்பரேட் கைக்கூலி, மத வெறியன் மோடி தமிழகத்திற்கு வந்த போது அவருக்கு எதிராக கோத்தகிரி மக்கள் அதிகாரத்தின் சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் பணமதிப்பழிப்பு, நீட் தேர்வு, கோகுல்ராஜ், உடுமலை சங்கர் படுகொலை ஆகியவற்றிற்கு எதிராக போராடினோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்தோம்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வைப்புத் தொகையை இந்த அரசு சூறையாடியதைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் மக்களிடம் “ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்” எனப் பேட்டி அளித்ததை ஆதரித்தும், தூய்மை இந்தியா எனக் கூறிக் கொண்டு பொதுக் கழிப்பறை கூட கட்டித்தர வக்கற்ற அரசைக் கண்டித்தும் சுவரொட்டி மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
100 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் மக்களை வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி அவர்களது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து விரட்டியடிக்கும் அரசையும் அதற்கு துணை நிற்கும் நீதிமன்றத்தையும் கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் செய்து, போராடும் மக்களுக்கு கடைசி வரை துணை நின்று வழிகாட்டினோம்.
அடிமேல் அடிவாங்கிக் கொண்டு இருந்த கோத்தகிரியை போராடும் களமாக மாற்றியதில் மக்கள் அதிகாரத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பது உரிமைக்காக போராடும் பலருக்கும் தெரியும்.
கோத்தகிரியில், இலஞ்சம், ஊழல், கட்டப்பஞ்சாயத்தும் பொது சொத்தை சூறையாடி சொத்து குவிப்பது, உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை ஆதரித்து வரும் அரசின் அனைத்து உறுப்புகளும், மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகளால் மக்கள் முன் அம்பலப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதிகாரத்தின் செய்ல்பாடுகளை முடக்க அரசின் ஏவல்படையான போலீசை வெறி பிடித்த மிருகம் போல அரசின் அத்தனை உறுப்புகளும் கட்டவிழ்த்து விடுகின்றன.
கந்துவட்டி, லாட்டரி, குட்கா விற்பனை, பொதுச்சொத்து ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத கும்பல்களிடம் மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை, மற்றும் தினமும் என இலஞ்சம் வாங்கும் போலீசுக்கும் மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகள் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் காரணமாக, மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகளை முடக்க அனைத்துவகையான முயற்சிகளையும் செய்து வருகிறார் கோத்தகிரி போலீசு ஆய்வாளர்.
போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, எந்த விதமான பிரச்சாரங்களுக்கும் அனுமதி மறுப்பது, வழக்கு போடுவது, தோழர்களைத் தனியாகப் பார்த்து மிரட்டுவது, புகார் கொடுத்தால் ஏற்க மறுப்பது என ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் ஆய்வாளர்.

சுவரொட்டி வாசகங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகக் கூறியும், கலகத்தைத் தூண்டுவதாகக் கூறியும், பொது இடங்களை அசுத்தம் செய்வதாகக் கூறியும் இதுவரை 11 வழக்குகளை மக்கள அதிகாரம் தோழர்கள் மீது போட்டுள்ளது.
சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களை காப்பாற்றாமல், லஞ்சலாவண்யத்தில் ஊறித்திளைக்கும் போலீசு, மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் சுவரொட்டி ஒட்டினால் வழக்கு போடுகிறது. போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கப் பார்க்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும், அதனை மக்கள் அதிகாரம் சந்திக்கத் தயார். அடக்குமுறைக்கோ, அதிகாரத் திமிருக்கோ அடங்கப் போவது இல்லை. தொடர்ந்து, வீரியமாக இயங்கிக் கொண்டே இருப்போம்.
ஒட்டுமொத்தத் தமிழகமும் மக்கள் அதிகாரத்தின் களம். போலீசின் வழக்குகள் மக்கள் அதிகாரத்தின் களத்தினை உறுதி செய்யும் என்பதை கோத்தகிரி ஆய்வாளர் புரிந்து கொள்ளட்டும்.
இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழியில்லை. அனைத்து வழிகளும் ஆள அருகதையற்ற இந்த அரசால் அடைக்கப்பட்டுவிட்டது. மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுப்பது தான் ஒரே தீர்வு. அதனை மக்கள் அதிகாரம் முன் நின்று செய்துவருகிறது.
இன்றே மக்கள் அதிகாரம் அமைப்பில் இணையுங்கள் ! நன்றி !
தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோத்தகிரி.