நீரவ் மோடி – எத்தனுக்கு எத்தன்
செய்தி 1 :
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின் போது யாரெல்லாம் அவரோடு பயணிக்கிறார்கள் என்கிற விவரத்தைக் கோரி கடந்த மாதங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு தனிநபர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த கோரிக்கைகளை மறுத்த பிரதமர் அலுவலகம், மேற்படி தகவல்கள் இரகசியமானவை என்றும் அவற்றை வெளியிட முடியாதென்றும் பதிலளித்திருந்தது. இத்தகவல்களை வெளியிடுவது “தேசப்பாதுகாப்புக்கே” ஆபத்தானது என்கிற வியாக்கியானத்தை பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
செய்தி 2 :
குஜராத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்பவர் முகேஷ் அம்பானியின் உறவினர். இவரது தம்பி நீஷல் மோடி, முகேஷ் அம்பானியின் உறவுக்காரப் பெண்ணை கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நீரவ் மோடி ஒரு வைர வியாபாரி. இந்தியா தவிற வேறு சில நாடுகளில் அவர் வைர வியாபாரம் செய்து வந்தார். வைரம் மற்றும் அறிய கற்களை இறக்குமதி செய்வதன் பேரில் பஞ்சாப் தேசிய வங்கியிடம் இருந்து வங்கி உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அதனை வெளிநாட்டு வங்கிகளில் பணமாக மாற்றி வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் மதிப்பிலான வைரக் கற்களை இறக்குமதி செய்கிறோம் என்கிற போர்வையில் வங்கி உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அதனை வெளிநாடுகளில் உள்ள தனது வங்கிக் கணக்கில் பணமாக மாற்றி வந்துள்ளார் நீரவ் மோடி. பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வங்கி உத்திரவாதப் பத்திரங்களைப் பெறுவதற்காக அதற்கு ஈடான தொகையையோ அல்லது சொத்துக்களையோ பத்திரம் வழங்கும் வங்கியிடம் அடமானமாக செலுத்த வேண்டும் என்பது விதி. பஞ்சாப் தேசிய வங்கியின் சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு இந்த விதிமுறைகளை மீறி மக்களின் சேமிப்புப் பணத்தை நீரவ் மோடி சூறையாடியுள்ளார். இந்த வகையில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
கடந்த திங்கட் கிழமை நீரவ் மோடியின் மீது பஞ்சாப் தேசிய வங்கி சார்பில் முதல் தகவல் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நீரவ் மோடி அடித்த கொள்ளையும் அதன் பொருளாதார பரிமாணங்களும் வெளிவரத் துவங்கிய நிலையில் நேற்று (15, பிப்ரவரி) பங்குச் சந்தையில் பஞ்சாப் தேசிய வங்கியின் குறியீட்டெண்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. சுமார் பதினோராயிரம் கோடி அளவுக்கு நடந்துள்ள வங்கி மோசடி, இந்திய கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப் பெரிய கொள்ளை என்று அலறுகின்றன முதலாளியப் பத்திரிகைகள். பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் மட்டும் பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் நான்காயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகள் எழுதுகின்றன.

விவகாரம் படு கேவலமாக நாற்றமடிக்கத் துவங்கியவுடன், “நீரவ் மோடிக்கு கடன் கொடுத்தது கடந்த ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் காலத்தில் தான்” என்று “கே.டி. ராகவன்”தனமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்து தப்பிக்க முயன்றது பாரதிய ஜனதா. எனினும்,கடந்த 2016, ஜூலை 26 -ம் தேதி நீரவ் மோடியின் முறைகேடுகள் அரசல்புரசலாக வெளியான நிலையில் அவர் மேல் போடப்பட்டிருந்த சுமார் 42 முதல்தகவல் அறிக்கைகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட உண்மை உடனேயே வெளியாகி பாரதிய ஜனதாவின் முகமூடியைக் கிழித்துப் போட்டது.
மேலும், முறைகேட்டுப் புகார்கள் இருந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி 23 -ம் தேதி) வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மோடி, டாவோஸில் நடத்திய சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறார் நீரவ் மோடி. அதாவது மோடி நாடு நாடாக (கிறிஸ்தவ, இசுலாமிய நாடுகள்) சுற்றி இந்திய தொழில்களின் யோக்கியதையையும் இந்திய தொழிலதிபர்களின் பராக்கிரமங்களையும் பீற்றிக் கொள்ளும் வைபவத்தில் (இரகசியமாக பராமரிக்கப்படும் பட்டியலைச் சேர்ந்த) நீரவ் மோடியும் கலந்து கொண்டிருக்கிறார்.
இப்போது கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட முதல் செய்தியை நினைவுகூறுங்கள்; இன்னொரு மல்லையாவாக உருவாகி வரும் அனில் அம்பானியைக் காப்பாற்ற ரபேல் விமான ஒப்பந்தத்தை “முடித்துக் கொடுக்க” அவரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு பிரான்ஸ் சென்ற பிரதமரின் முன்முயற்சியும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் வேடிக்கை என்னவென்றால் தன் மீது நடவடிக்கை பாயும் என்கிற எதிர்பார்ப்பில் கடந்த மாதம் ஒன்றாம் தேதியே நீரவ் மோடி நாட்டை விட்டு ஓடியிருக்கிறார். நீரவ் மோடி மட்டுமின்றி அவரது தொழில் கூட்டாளிகளான மனைவியும் பிற உறவினர்களும் கூட இந்தியாவை விட்டு கடந்த மாதமே ஓடி விட்டனர்.
விவகாரம் வெளியாகி நாறிக் கொண்டிருக்கும் நிலையில் தனது அல்லக்கை ஊடகங்களைக் கொண்டு நீரவ் மோடியின் பாஸ்போர்ட் தடை செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடந்த சோதனைகளில் சுமார் 5100 கோடி பிடிபட்டதாகவும் செய்திகளைப் பரப்பி வருகிறது பாரதிய ஜனதா. பண மதிப்பழிப்பு நடவடிக்கையில் வங்கிகளுக்குத் திரும்பிய பழைய செல்லாத நோட்டுக்களையே ஓராண்டுக்கும் மேலாக எண்ணியும் முடிக்காத அரசு, ஒரே நாளில் ஐயாயிரம் கோடியைக் கணக்கிட்டு விட்டதாக கூறும் மோசடி ஒருபுறம் இருக்க, பெல்ஜியம் நாட்டுக் குடிமகனான நீரவ் மோடியின் “இந்திய பாஸ்போர்ட்டை” எப்படி தடை செய்திருக்க முடியுமென கொஞ்சமாவது மூளை என்கிற வஸ்துவைக் கொண்டிருப்பவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 7 ஆண்டுகளாக சிறுகச் சிறுக தேசிய வங்கிகளுக்கு மொட்டையடித்து வந்த நீரவ் மோடியின் மேல் இப்போது தான் நடவடிக்கை எடுக்க களமிறங்கியுள்ள அரசு, இன்னொருபுறம் தமது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திராத ஏழைமக்களிடம் அபராதம் போட்டு பல்லாயிரம் கோடிகளைக் குவித்துள்ளது.
ஏற்கனவே விஜய் மல்லையாவும், லலித் மோடியும் ஊழல் முறைகேடுகள் செய்த பணத்தில் வெளிநாடுகளில் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இழிபுகழ் பெற்ற அந்தப் பட்டியலில் இணைகிறார் நீரவ் மோடி. இசுலாமியர்களைக் குறித்து இந்துத்துவ காலிகள் முன்வைக்கும் அதே வாதத்தை திருப்பிப் போட்டால் இப்படித் தான் வருகிறது – “மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்”
காங்கிரசின் ஆட்சிக்காலத்தில் கொள்ளைக்காரர்கள் உள்ளூரிலேயே வெள்ளையும் சொள்ளையுமாக ஸ்கார்பியோ கார்களில் புழுதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்; மோடி “தின்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்” (Na kaunga; na khane dhoonga – நான் தின்னவும் மாட்டேன், தின்ன விடவும் மாட்டேன்) என்பதால் இப்போதெல்லாம் கொள்ளையடித்த பின் அந்தக் காசை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குப் போய் குடியும் கூத்துமாக இருக்கலாம் என்கிற “நீதி” நிலைநாட்டப்பட்டுள்ளது.
மேலும் :
- As Fallout of PNB Scam Continues, Questions Raised over Repayment and Nirav Modi’s Whereabouts
- Who’s Nirav Modi, man behind Rs 11,000 crore PNB scam?
- Here’s why Modi govt will find it impossible to emerge unscathed from PNB scam
- Explained: Punjab National Bank’s $1.8 Billion Fraud
- PMO instructed to disclose names of people who travel with Modi on foreign trips: Report