Wednesday, April 16, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுகாவிரிக்காக போராடிய மதுரை தோழர்கள் 20 பேர் சிறையில் அடைப்பு !

காவிரிக்காக போராடிய மதுரை தோழர்கள் 20 பேர் சிறையில் அடைப்பு !

-

ச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பை எதிர்த்துப் போராடிய மதுரை மக்கள் அதிகாரம் தோழர்களைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது மதுரை போலீசு. மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் சார்பில் 17.02.2018 அன்று காலை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, போராட்டம் நடக்கும் பகுதிக்குச் சிறிதும் சம்மந்தமே இல்லாத செல்லூர் போலீசு ஆய்வாளர் மணிவண்ணனை அனுப்பியது எடப்பாடியின் எடுபிடி போலீசு.

போராட்ட இடத்துக்கு வந்தது முதல், அமைதியாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தைச் சீர்குலைக்கவே முயற்சித்துக் கொண்டிருந்தார் மணிவண்ணன். இறுதியில் தோழர்களைக் கைது செய்யும் போது, தோழர்கள் கொண்டு வந்த பேனர்களைக் கிழிப்பது, தோழர்களை அடிப்பது எனத் தனது வில்லத்தனங்களைக் காட்டியிருக்கிறார்.மேலும் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் என வித்தியாசமின்றி கடுந்தாக்குதலை ஏவி விட்டிருக்கிறார். போலீசு வெறி கொண்டு அடித்ததில் காயமடைந்த தோழர்களுக்கு மருத்துவ வசதி செய்து தராமல் இழுத்தடித்ததைக் கண்டித்து, மதிய உணவை மறுத்து ஒத்துழைக்க மறுத்தனர் தோழர்கள்.

கைது செய்யப்பட்ட தோழர்களின் மீது பொய்வழக்குகள் போட்டு, ரிமாண்டு செய்துள்ளது மதுரை போலீசு. இருபது தோழர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோதமாகக் கூடுதல்), 188 (அரசு ஊழியர்களின் உத்தரவுக்கு கீழ்படியாமை), 353 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவுகளிலும், கிரிமினல் இணைப்புச் சட்டம் 71(A) (அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல்(பிணையில் வெளிவர முடியாதது) ) ஆகிய பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்து ரிமாண்ட் செய்ய நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. கைது செய்யப்பட்ட 20 தோழர்களோடு குழந்தைகள் 4 பேர் உள்ளனர்.

காவிரி உரிமைக்காக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை எதிர்த்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தைக் கூட இவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கைது, சிறைகளால் மக்கள் அதிகாரத்தை முடக்கிவிட முடியாது. முன்னிலும் அதிகமாய் போராட்டம் நடக்கும்.