Wednesday, April 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி !

மோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி !

-

முதலாளித்துவ  பயங்கரவாதத்திற்கு மூன்று தொழிலாளர்கள் பலி !

மோஷி மோஷி  ரெஸ்டாரான்ட்

திருபெரும்புதுரில் இருந்து ஒரகடம் செல்லும்  தேசிய  நெடுஞ்சாலையில்  போந்துர் கிராமம் அருகே  உள்ளது ” மோஷி மோஷி “ என்ற ரெஸ்டாரான்ட். இந்த பகுதியில் பல பன்னாட்டு நிறுவனங்களில்  பணி புரியும் உயர் அதிகாரிகள்,  HR – கள் மற்றும் கொரிய சீன  ஜப்பான்  நாட்டை  சேர்ந்தவர்கள்  வேலை நிமித்தமாக வந்தால், தங்குவதற்கும்  தின்பதற்குமான  இடமாக  இந்த ஒட்டல் செயல்படுகின்றது.

ஒட்டல் அமைந்துள்ள இடத்தை  யாராவது பார்த்தால் இங்கு என்ன வியாபாரம் ஆகும் எனத் தோன்றும். ஏனெனில் ஆள் ஆரவமற்ற தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பொட்டல் காடான விளைநிலங்கள்,  கண்ணுக்கு எட்டிய துரத்தில் சில அடக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.  உழைப்பை சுரண்டும் கும்பல் கூடி கும்மாளம் அடிப்பதும் இது போன்ற  ஒட்டலில்தான்.  இப்படிப்பட்ட ஒட்டல் முதலாளியின்  இலாப வெறி  மூன்று தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.

மேற்படி  ஒட்டலில்  கழிவு நீர் தொட்டியை  கடந்த புதன் (14.02.180)  அன்று  சுத்தப்படுத்துவதற்கான  வேலையை துவங்கியுள்ளனர். 28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன்  இருவரும் தொட்டிற்குள்ளே இருக்கும் படிகள் வழியாக உள்ளே  இறங்கும்போது இருவரும்  அடுத்தடுத்து  மயக்கம் அடைந்து  தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும்  ரவி  (எலக்ட்ரிசியனாக பணி புரிபவர்) என்பவர்  தொழிலாளர்களை  காப்பாற்ற போய் அவரும்  பலியாகின்றார்.  இதன் பிறகே  தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று பேரையும் மீட்டு திருபெரும்புதுர் அரசு மருத்துவமனையில் சேர்க்கும் போது அவர்கள்  இறந்து விட்டனர்.

இதன் பிறகு  RDO, DSP, சிலம்பரசன்,  திருபெரும்புதுர் தொகுதி  MLA  ஆகியோர்  பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடத்திய  கட்ட பஞ்சாயத்தில்  இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்து லட்சம் பேரம் பேசப்பட்டு பெயரளவிற்கு வழக்கு பதியப்பட்டு வேலையை முடித்துக் கொண்டுள்ளனர்.

இது போன்ற  கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவது என்றால், அதற்குறிய சாதனங்களை கொண்டும், சுத்தப்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிட்ட தொட்டிற்குள் இருக்கும் விஷ வாயுவின்  வீரியத்தை குறைக்கும் கெமிக்கல் மருந்துகளை தொட்டிற்குள்ளே போட்டு பிறகு பாதுகாப்பு கவசங்களை அணிந்த பிறகே  கழிவு நீர் தொட்டிற்குள் இறங்க வேண்டும். இதில் எந்த பாதுகாப்பு விதிமுறையையும் பின்பற்றப்படவில்லை. எனவே இது படுகொலைதான்.

தலைகவசம் உயிர் காக்கும் என்ற பெயரில் வண்டியின் பின்னால் அமர்ந்து போகின்றவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதாக  சொல்லிக் கொண்டு, அதை கண்டு கொள்ளாமலும் அல்லது கலக்சனுக்காக போலீசு நடந்து கொள்வதைப் போலத்தான்  அரசின் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும், முதலாளியின் இலாப வெறியும் தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.

இறந்து போன முருகேசன் என்ற தொழிலாளியின் மூன்று  வயது  பெண்  குழந்தை அப்பா இறந்து போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தது, மாலை நேரம் ஆக ஆக குழந்தை அப்பாவை கேட்டபோது முருகேசனின் மனைவி  கதறி அழுதது, இறந்த மற்ற தொழிலாளர்களின்  உடன் பிறந்தோரும்  உறவினர்களும் கதறி கண்ணீர் மல்க  அழுது கொண்டிருந்தது  நெஞ்சை உலுக்குவதாக  இருந்தது.

இறந்த தொழிலாளர்களின் உறவினர்களிடத்தில்  பேசுகையில்  எங்கும் நிலையான வேலை இல்லை கிடைக்கிற வேலைக்கு போன போதுதான் இந்த நிலைமை என்றார். காண்டிராக்ட் வேலை என்ற பெயரில் கொத்தடிமையான வாழ்க்கை முறை பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாதது என்பது எங்கும் நிறைந்திருக்கின்றது. இந்த நிச்சயமற்ற வாழ்க்கையில் மரணமும் நிழலாக பின் தொடர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எதிர் கொண்டிருக்கின்ற வாழ்நிலைமை இதுதான். இதைத்தான் வளர்ச்சி என்கிறார் மோடி ! அ.தி.மு.க கும்பலோ அமைதி, வளம், வளர்ச்சி என்கிறது.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சிக்கு பின்னால் முதலாளிகளின் இலாப வெறிதான் அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதுவே நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உரிமை – உயிர் பறிப்பிற்கும் அடிப்படையாக இருக்கின்றது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் காலத்தில் கலகம் வெடிக்கும். தற்போது இருக்கின்ற அரசு கட்டமைப்பு தகர்க்கப்படும், மக்களை – தொழிலாளர்களை கொல்லும் சுரண்டலும் ஒழிக்கப்படும். சமூக மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்பதுதான் இது போன்ற படுகொலைகள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும் !

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்,
தொடர்புக்கு: 8807532859

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க