Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !

காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !

-

 

பத்திரிக்கைச் செய்தி

18-2-2018

காவிரி நீர் பங்கீட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்தின் உரிமையை மறுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி இருக்கிறது. கர்நாடக தேர்தல் அரசியல் ஆதாயம், டெல்டாவில் மீத்தேன், ஓ.என்.ஜி.சி எரிவாயு திட்டம், ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் பா.ஜ.க அரசின் அரசியல் முடிவாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இரு மாநிலங்களை சேர்ந்த துறை சார் வல்லுநர்கள் மூலம் களத்தில் ஆய்வு செய்து பல ஆண்டுகள் விசாரித்து வழங்கப்பட்ட, காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை இருமாநிலங்களுக்கிடையில் முறையாக அமுல்படுத்துவதில் பொறுப்போடு கவனம் செலுத்தாமல் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீரை உரிய பருவத்தில் தருவதில்லை. தரவேண்டிய அளவையும் தராமல் பாக்கி வைத்துள்ளது. தமிழக விவசாயிகள் பயிர் கருகி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையில் போராடும் போதெல்லாம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் தூண்டப்படுகிறது. இதில் பா.ஜ.க சங்பரிவார் அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசு எந்த உத்தரவையும் அமுல்படுத்தாமல் அடாவடி செய்வதை உச்சநீதிமன்றம் கண்டு கொண்டதே இல்லை.

அது போல் மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் ஆறு ஆண்டுகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது. இவ்வாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமாக தேர்தல் அரசியல் ஆதாயம் கருதி செயல்பட்டு வருகிறது.
காவிரி டெல்டாவை எதிர்காலத்தில் பாலைவனமாக மாற்றி, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமும் இந்த தீர்ப்பின் பின் உள்ள டெல்லியின் சூழ்ச்சியாகும்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறது என ஒருதலைப்பட்சமாக காரணம் காட்டி 192 டி.எம்.சி. அளவிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து அதை கர்நாடகாவிற்கு உயர்த்தி வழங்கியது, தமிழகத்தை திட்டமிட்டு டெல்லி வஞ்சிக்கும் செயலாகும்.

காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் போராடியவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன் பொய் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையலடைத்துள்ளார். இதன்மூலம் மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.

அதுபோல் திருவாரூர் கடமங்குடியில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழகத்தில் எடப்பாடி அரசு பா.ஜ.க.வின் கிளை அமைப்பாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. பிரசுரம் கொடுத்தால் போஸ்டர் ஒட்டினால்கூட போலீசு வழக்கு போடுகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பரவலாக தமிழகத்தில் அமுல்படுத்தி வருகின்றன. இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கண்டித்து அனைவரும் போராட வேண்டும்.

  • தமிழகத்தின் உரிமையை பறிக்கும் டெல்லிக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் எடப்பாடி உடனே பதவி விலக வேண்டும்.
  • டெல்லிக்கு எதிரான போராட்டத்தில் தமிழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
  • திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் ஏழுபேரை விடுதலை செய்யவும்
  • காவிரி நீர் உரிமைக்காக போராடி மதுரை சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் இருபது பேரை விடுதலை செய்யவும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்..

இப்படிக்கு
காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க